ரொம்பவும் மென்மையாகப் பேசிப் பழகும் குணமுடைய அமலாபாலை கண் கலங்க வைத்திருக்கிறதாம் அவரைப் பற்றி இன்றைக்கு வெளியான ஒரு சினிமா கிசுகிசு செய்தி.
ராமதூதா கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் ‘வஸ்தா நீ வெனகா’ என்கிற தெலுங்கு படத்தில் நடிக்க அமலாபாலை புக் செய்திருந்தனர். இப்போது அமலாபாலுக்கு திருமணமாகப் போவதையொட்டி அந்தப் படத்தில் இருந்து அமலாபாலுக்கு கல்தா கொடுத்துவிட்டனர் என்று இன்று காலையில் இருந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.
இதைப் படித்துவிட்டுத்தான் நல்லிதயம் கொண்ட செல்வி அமலாபால் கண்ணீர்விட்டு அழுதாராம். இதில் சிறிதளவுகூட உண்மையில்லை என்று புலம்பிய அவர் இது குறித்து அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் அவசரச் செய்தியொன்றை அனுப்பியிருக்கிறார்.
அது கீழே.
“இந்த நிறுவனம் என்னை முதலில் தொடர்பு கொண்டபோது மார்ச் முதல் மே மாதம்வரை உள்ள கால கட்டத்தில் 45 நாட்கள் ஒதுக்க வேண்டும் என்று கூற, நானும் அதற்கு உடன்பட்டு அதற்கு அத்தாட்சியாக ஒரு பத்திரத்திலும் நாங்கள் பரஸ்பரம் கையெழுத்திட்டுக் கொண்டோம்.
படப்பிடிப்புக்கான நாட்கள் நெருங்கி வரும் சூழ்நிலையில் அவர்களை தொடர்ப்பு கொள்ள பல்வேறு முறைகளில் முயற்சி செய்தேன். தொடர்பில் வந்தாலும் திருப்திகரமான பதில் வரவில்லை. திரை உலகில் இது சகஜம் என்று நானும் என்னுடைய மற்ற பட வேலைகளின் இடையே இவர்களுக்கும் தேதி கொடுக்க அணுகியபோதும் இப்போது அப்போது என்று திடமில்லாத பதிலே வந்தது.
வெளிநாட்டில் படப்பிடிப்பு என்றால் என்னுடைய பாஸ் போர்ட் உட்பட என்னுடைய staff பாஸ்போர்ட்வரை விசாவுக்காக சமர்ப்பிக்க வேண்டும் என்பதே விதி. ஆனால் இதுவரை வெளிநாட்டில் படமாக்க போகிறோம் என்று கூறிக் கொள்ளும் அந்த பட நிறுவனத்தினர் அந்த முயற்சியை மேற்கொள்ளவில்லை என்பதே அவர்களின் ஈடுபாட்டுக்கு ஒரு அத்தாட்சி.
இந்த நிலையில் நான், என்னுடைய திருமணத்தை பற்றி முன்னரே அவர்களுக்கு தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு என்னை காயப்படுத்துகிறது.
நான் அவர்களுக்கு கொடுத்தது மார்ச் முதல் மே வரை குறிப்பிட்ட கால கட்டத்துக்குள் 45 நாட்கள் மட்டுமே. இதில் ஜூன் மாதம் நடைபெற வேண்டிய திருமணத்தை பற்றி அவர்களுக்கு கூற வேண்டிய அவசியம் என்ன? கூறப்பட்ட காலத்துக்குள் படப்பிடிப்பு நடத்த முடியாமல் இருப்பதற்கு பலவேறு உண்மையான காரணங்கள் இருக்க என் திருமணத்தைச் சுட்டிக் காட்டி அவர்கள் புழுதி வாரியிறைப்பது அநாகரீகமானது.
திருமண பந்தம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் நடக்க வேண்டிய ஒரு அரிய நிகழ்ச்சி. எனக்கும் அப்படித்தான். தங்களது தவறுகளை மறைக்க என் மீதும், என் திருமண சடங்கின் மீதும் குற்றஞ்சாட்டுவது மிகவும் வருத்தத்துக்குரியது .
நான் இதுவரை எந்த தயாரிப்பாளருக்கோ, இயக்குனருக்கோ இடையூறாக இருந்ததே இல்லை. இருக்கவும் மாட்டேன். இந்த விளக்கவுரைகூட யாரையும் குற்றம் சாட்டவோ, குறை கூறவோ இல்லை. என்னை அறிந்தவர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் உண்மை நிலையை கூறுவதற்காகத்தான்..” என்று தெரிவித்துள்ளார்.
அமலாபால் ஏன் இதுக்கு இவ்ளோ பீல் பண்றாங்கன்னு புரியலை..? அந்த பட நிறுவனம் அமலாபாலை தங்களது படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக நமக்குத் தெரிந்து வெளிப்படையாக எங்கேயும் அறிவிக்கவில்லை. பேட்டியும் கொடுக்கவில்லை. இது வழக்கமான சினிமா கிசுகிசுவாகத்தான் பரவியிருக்கிறது. அப்படியிருக்க அமலாபால் இதையேன் இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொண்டு பொறுப்பாக பதில் சொல்லியிருக்கிறார் என்றுதான் தெரியவில்லை.
ஆனால் இதனால் ஒரேயொரு விஷயம் உறுதியாகியுள்ளது. இதோ அமலாபாலும் தனது திருமணம் ஜூன் மாதம் நடைபெறும் உறுதிப்படுத்தியிருக்கிறார். தேதியை மட்டும் சொல்லவில்லை. நாங்க சொல்றோம் ஜூன்-12. மறந்திராதீங்க..
அப்பாடா.. இது இவங்க கல்யாணத்தைப் பற்றி வெளியிடும் 5-வது செய்தி..! இன்னும் எத்தனை முறை எழுத வேண்டி வருமோ தெரியலையே..?