பிரபல நடிகரான ஆரி அர்ஜூனன் கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியைப் பெற்றார்.
இடையில் கொரோனா காலக்கட்டம் என்பதால் யாரும், யாரையும் சந்திக்காமல் இருந்த சூழலினால் தற்போதுதான் அதற்கான பாராட்டு ஆரி அர்ஜூனனுக்கு இயக்குநர் சேரனிடமிருந்து கிடைத்திருக்கிறது.
தன்னை நேரில் அழைத்து வாழ்த்திய இயக்குநர் சேரன் பற்றி நடிகர் ஆரி அர்ஜூனன் நெகிழ்ச்சியாகப் பேசியது பல புதிய செய்திகளை தெரிய வைத்திருக்கிறது.
நடிகர் ஆரி அர்ஜூனன் இயக்குநர் சேரன் பற்றிப் பேசும்போது, “நான் பிக்பாஸில் வென்றதற்காக என்னை நேரில் அழைத்த இயக்குநர் சேரன், “உனது உண்மையான உழைப்பிற்கும், நேர்மைக்கும், விடா முயற்சிக்கும் கிடைத்த வெற்றி இது” என்று தந்தையின் ஸ்தானத்திலிருந்து என்னை வாழ்த்தியது எனக்கு மிகவும் சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது.
நான் நடிகர்களுக்கு உடற் கட்டுக்கோப்பு பயிற்சியாளராக இருந்தபோது எனது சொந்த ஊரில் போஸ்ட் மாஸ்டராக இருந்த எனது சித்தப்பாவின் சிபாரிசு கடிதத்தின் மூலம் சேரன் அவர்களை சந்தித்தேன். அப்போதிலிருந்து எங்களிடையே நல்ல தொடர்பு ஏற்பட்டது.
அப்போது எனக்கு இருந்த நடிப்பு ஆர்வத்தை கூறி எனது புகைப்படத்தை சேரனிடம் காண்பித்தேன். அதில் எனது உடல் சிறிதும், பெரிதுமாக வேறுபடுத்திக் காட்டியிருந்ததை பார்த்தவர் தனது ‘ஆட்டோகிராப்’ படத்தில் கால மாற்றங்களுக்கு ஏற்ப அவரின் உடலமைப்பை மாற்றும் பணியை கொடுத்தார். அதைத் தொடர்ந்து ‘தவமாய் தவமிருந்து’ படத்திற்கும் பணியாற்றினேன்.
பிறகு ‘ஆடும் கூத்து’ எனும் அவர் நடிக்கும் திரைப்படத்தின் இயக்குநர் டி.வி.சந்திரனிடம் சிபாரிசு செய்து அப்படத்தில் கதாநாயகனாக வாய்ப்பை பெற்று தந்தார். அதற்காக இயக்குநர் டி.வி. சந்திரன் அவர்களுக்கும், சேரன் அவர்களுக்கும் என் கலையுலக கனவை நிறைவேற்றியதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படம் திரைக்கு வராவிட்டாலும் அந்த ஆண்டில் தமிழ் பிராந்திய மொழிக்கான தேசிய விருதை வென்றது. இந்த படத்தில் மது அம்பட் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். மேலும் பிரகாஷ் ராஜ் போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது,
அப்படி என் திரைத்துறைக்கு வித்திட்ட சேரன் அவர்கள் நான் பிக்பாஸில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு வந்ததிலிருந்து என்னை பல்வேறுவிதங்களில் ஊக்கப்படுத்தினார்.
இப்போது என்னை நேரில் அழைத்து, “உனது நேர்மைக்கும், உழைப்பிற்கும், உண்மைக்கும் கிடைத்த வெற்றி…” என்று சொல்லி எனக்கு மாலை அணிவித்து வாழ்த்தினார். அவருக்கு என் நன்றியை காணிக்கையாக்குகிறேன்..” என்று குறிப்பிட்டுள்ளார்.