தற்போது முன்னணி நடிகைகளே சொந்தப் படம் எடுக்கவும் தயங்குவதில்லை. திருமணமான பின்பு கணவருடன் இணைந்து படம் தயாரிப்பவர்களைவிடவும் நடித்துக் கொண்டிருக்கும்போதே தயாரிப்பாளராகும் பாணி அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
பாலிவுட்டில் ஏற்கெனவே நடிகை கங்கனா ரனாவத்தும் தயாரிப்பாளராகிவிட்டார். இப்போது அவருடைய வரிசையில் அவருடைய நேரடி எதிரியான டாப்ஸியும் தயாரிப்பாளராகிறாராம்.
தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ‘அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ்’ எனப் பெயரிட்டுள்ளார். தான் நடிக்கும் த்ரில்லர் படமொன்றை முதல் தயாரிப்பாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளார் டாப்ஸி.
இது குறித்து டாப்ஸி சொல்லும்போது, “கடந்த ஆண்டோடு இந்தியத் திரைத்துறையில் நான் குதித்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இதில் நான் மிதப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் இதில் நீந்தவும் கற்றுக் கொள்வேன் என்று எனக்குத் தெரியாது.
ஒரு பிரபலமான நபராக வேண்டும் என்ற கனவு இல்லாமல் இருந்த என்னைப் போன்ற ஒருவர் மீது அதீத அன்பையும், நம்பிக்கையையும் வைத்த அனைவருக்கும் நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.
இது அவர்களுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய நேரம். ஏனெனில் மிகப் பெரிய சக்தி கிடைக்கும். கூடவே மிகப் பெரிய பொறுப்பும் சேர்ந்து கொள்கிறது. எனவே, என்னை வாழ்த்துங்கள். காரணம் வெளியிலிருந்து பார்ப்பதற்குத் தோற்றம்தான் முக்கியம். தற்போது ‘அவுட்சைடர் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் மூலமாக ஒரு தயாரிப்பாளராக என் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன்,…” என்று குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் டாப்ஸி. தற்போது பாலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வரும் டாப்ஸி ‘ராஷ்மி ராக்கெட்’, ‘லூப் லபேடா’, ‘டூபாரா’, ‘சபாஷ் மிது’ உள்ளிட்ட சில இந்திப் படங்களில் நடித்து வருகிறார்.