full screen background image

சென்னை பிரஸ் கிளப்பிற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு..!

சென்னை பிரஸ் கிளப்பிற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு..!
25 வருடம் கழித்து சென்னை பிரஸ் கிளப்பிற்கு இன்றைக்கு தேர்தல் நடைபெற்று புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 
சென்னையில் சேப்பாக்கத்தில் இருக்கும் அரசினர் தோட்டத்தில் சென்னை பிரஸ் கிளப் என்னும் பாரம்பரியமான பத்திரிகையாளர்களுக்கான அமைப்பு அமைந்துள்ளது.
 
கடந்த 1972-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், கடைசியாக 1999-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பிறகு, நீண்ட காலமாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.  பல்வேறு வழக்குகள், கோர்ட் தடைகளால் தேர்தல் தடைப்பட்டுக் கொண்டேயிருந்தது.
 
ஆனால், பல்வேறு மூத்தப் பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து இந்தாண்டு இறுதிக்குள்ளாக சென்னை பிரஸ் கிளப்பிற்குத் தேர்தலை நடத்திவிட வேண்டும் என்று முனைந்து களத்தில் இறங்கினார்கள்.
 
அவர்களது முயற்சியின் பலனாக கோர்ட் வழக்குகள், தடைகளெல்லாம் நீங்கியது. புதிய உறுப்பினர்கள் சேர்க்கையும் மும்முரமாக நடைபெற்றது.
 
இதெல்லாம் நடந்த பின்பு இன்றைக்கு தேர்தல் நடைபெறும் என்று முறைப்படி அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலுக்கு தேர்தல் அலுவலராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் பொறுப்பேற்றார்.
 
இதைத் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு பின் சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு டிச.15-ம் தேதி தேர்தல் நடைபெறும் என நீதிபதி பாரதிதாசன் கடந்த நவ.28ம் தேதி அறிவித்தார்.
 
இதில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு ஒரு தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், ஒரு பொதுச்செயலாளர், ஒரு இணைச் செயலாளர், ஒரு பொருளாளர் ஆகிய 6 நிர்வாகிகளும், 5 நிர்வாக குழு உறுப்பினர்களும் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 30-ம் தேதி முதல் டிச.7-ம் தேதிவரை நடந்தது.

வேட்பு மனுக்கள் டிச.9-ம் தேதி பரிசீலிக்கப்பட்டது.

டிச.10-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை வேட்பு மனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் வழங்கப்பட்டது.

அன்றைய தினம் மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த தேர்தலில் நீதிக்கான கூட்டணி, ஒற்றுமை அணி, மாற்றத்திற்கான அணி மற்றும் சுயேச்சையாகவும் மொத்தம் 44 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

சொன்னது போலவே இன்றைக்கு இந்தத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. காலை 10 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இதில் மொத்தமுள்ள 1502 வாக்குகளில் 1371 வாக்குகள் பதிவானது. இது 91.27 சதவீதமாகும். 
 
வாக்குப் பதிவு முடிந்தவுடனேயே வாக்குகள் எண்ணப்பட்டு உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
 
இதன்படி இந்தத் தேர்தலில் நீதிக்கான கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் ஒருவர் தவிர அனைவரும் வெற்றி பெற்றனர்.
 
தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுரேஷ் வேதநாயகம்(தினகரன்) 659 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
 
பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட அசீப்(அரண் செய்) 734 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
 
இணைச்செயலாளராக சேவியர் நெல்சன்(ஒன் இந்தியா) வெற்றி பெற்றார்.
 
பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட மணிகண்டன்(ஜெயா டிவி) 803 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
 
துணைத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்ட சுந்தர பாரதி(புதிய தலைமுறை) 599 வாக்குகளையும், மதன்(நியூஸ் 18) 599 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றனர்.
 
5 நிர்வாக குழு உறுப்பினர்களாக 
 
ஸ்டாலின்(புதிய தலைமுறை) – 634 வாக்குகள்
 
பழனிவேல்(பாலிமர் டிவி) – 596 வாக்குகள்
 
கவாஸ்கர் (தீக்கதிர் – ஒற்றுமை அணி) – 584 வாக்குகள்
 
விஜய் கோபால்(ANI) – 509 வாக்குகள்
 
அகிலா ஈஸ்வரன்(தி இந்து) – 602 வாக்குள்
 
ஆகியோர் வெற்றி பெற்றனர்.
 
வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி பெற்றமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டவுடன் நிர்வாகிகள் உடனேயே பொறுப்பேற்றுக் கொண்டனர்.
 
பாரம்பரியமிக்க சென்னை பிரஸ் கிளப்பின் புதிய நிர்வாகிகளுக்கு எங்களது தமிழ்சினிடாக் இணையத்தளம் மற்றும் யூடியூப் சேனல் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்..!
Our Score