தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
நடிகர் சங்க கட்டட விவகாரத்தில் சரத்குமார் மற்றும் ராதாரவிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கும் விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை அளித்துள்ளது.
வரும் ஜூலை 15-ம் தேதி தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு மீண்டும் சரத்குமார் போட்டியிடுகிறார். இதேபோல், பொதுச் செயலாளராக உள்ள ராதாரவி, துணைத் தலைவர் கே.என்.காளை போன்றோரும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
இதற்கிடையே, நடிகர் சங்க கட்டிட விவகாரம் தொடர்பாக சரத்குமார் அணிக்கும், விஷால் அணிக்கும் காரசாரமான வாக்குவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஒருவர் மீது ஒருவர் புகார்களை அடுக்கி வருகிறார்கள். ராதாரவியை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்கு களமிறங்கப் போவதாகவும் விஷால் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர்கள் விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அதில், ‘நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறும் ஜூலை 15-ம் தேதி புதன்கிழமை. வேலை நாளான அன்று வெளியூரில் படப்பிடிப்புகளில் இருப்போரால் இத்தேர்தலில் கலந்து கொண்டு ஓட்டளிக்க இயலாது. எனவே, இத்தேர்தல் தினத்தை இரண்டாம் ஞாயிறான விடுமுறை தினத்தில் நடத்த வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் இத்தேர்தலை நடத்த வேண்டும்’ என தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என்று சொன்னாலும் இந்த மனு தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.