“முன்னணி நடிகர்கள் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும்” – உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை..!

“முன்னணி நடிகர்கள் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும்” – உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை..!

“திரைப்பட துறை சமுதாயத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதால், முன்னணி நடிகர்கள் சமூகப் பொறுப்புடன் செயல்படவேண்டும்..” என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில், ‘கபாலி’ படத்தின் தயாரிப்பாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான கலைப்புலி எஸ்.தாணு நேற்று முன்தினம் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “நான் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளேன். இந்த படம் வருகிற 22-ந் தேதி வெளியாக உள்ளது.

அண்மைக் காலங்களில் புதிய திரைப்படங்கள் வெளியான அடுத்த சில நிமிடங்களில், வலைத்தளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகி விடுகின்றன.

இந்தியாவில் 169 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் உள்ளன. வலைத்தளங்களில் வெளியாகும் திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும்போது, இந்த 169 நிறுவனங்களுக்குத்தான் அதற்குரிய பணம் செல்கின்றன. எனவே, இந்த படத்தை வலைத்தளங்கள் மூலமாக வெளியிட 169 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்கவேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் சு.சீனிவாசன், மாநில அரசு சார்பில் அரசு வக்கீல் ஆர்.எம்.முத்துகுமார், மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் விஜயநாராயணன், பி.குருமூர்த்தி ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.

இதையடுத்து நீதிபதி இடைக்கால உத்தரவை பிறப்பித்தார். அந்த உத்தரவில், “கபாலி’ திரைப்படம் எப்போது வெளியாகும் என்று நடிகர் ரஜினிகாந்துக்காக உயிரை கொடுக்கக்கூட தயங்காத ரசிகர்கள் மட்டும் காத்திருக்கவில்லை. அந்த திரைப்படத்தை திருட்டுத்தனமாக வெளியிடுவதற்காக ‘மோசடி’ வலைத்தளங்களும் படம் வெளியாகும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

இந்தப் படத்தை 3 ஆயிரம் பேர் உழைப்பில், பெரும் தொகை செலவு செய்து மனுதாரர் தயாரித்துள்ளார். தற்போது ‘கபாலி’ திரைப்படம் திருட்டுத்தனமாக வலைத்தளங்களில் வெளியாகி விடுமோ என்ற அச்ச உணர்வில் இந்த ஐகோர்ட்டின் உதவியை மனுதாரர் நாடியுள்ளார்.

மனுதாரர் அண்மையில் தயாரித்த ‘தெறி’, ‘கணிதன்’ ஆகிய படங்கள், வெளியான அடுத்த சில நிமிடங்களில் வலைத்தளங்களில் திருட்டுத்தனமாக வெளி வந்துவிட்டன. இதனால், பாதிக்கப்பட்ட மனுதாரர், தற்போது ‘கபாலி’ படம் மூலமும் தனக்கு பாதிப்பு வந்து விடுமோ என்று பயப்படுகிறார்.

திருட்டுத்தனமாக திரைப்படங்களை வெளியிட்டு வரும், வலைத்தளங்களில் பெயர் விவரங்களையும் கோர்ட்டில் மனுதாரர் தாக்கல் செய்துள்ளார்.

திருட்டுத்தனமாக புதிய திரைப்படங்கள் வெளியாவதால், திரையுலகத்துக்கு மட்டுமல்ல, தேசத்துக்கும், தனி நபருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தகவல் தொடர்புத் துறை புரட்சியினால், தற்போது சைபர் குற்றங்கள் பெருமளவு அதிகரித்துவிட்டது. தனி நபர் சுதந்திரம்கூட தற்காலத்தில் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் கடந்த 7-ம் தேதி வரை ‘தெறி’, ‘இறைவி’ உள்ளிட்ட 22 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த திரைப்படங்களை திருட்டுத்தனமான வெளியிட்ட வலைத்தளங்களில் இருந்து பலர் பதிவிறக்கம் செய்ததன் மூலம், 169 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, 4 கோடியே 14 லட்சத்து 69 ஆயிரத்து 560 ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது.

திருட்டுத்தனமாக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் புதிய திரைப்படங்கள், இந்த 169 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலமே பதிவிறக்கம் செய்யப்படுகின்றன.

அதனால், ‘கபாலி’ படத்தை இந்த சேவை நிறுவனங்கள் வழியாக பதிவிறக்கம் செய்ய தடை கேட்டு மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அனைத்து தரப்பு வாதங்களின் அடிப்படையில், ‘கபாலி’ படத்தை இந்த 169 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் வழியாக பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய இடைக்கால தடைவிதிக்கிறேன்.

இந்த மனுவுக்கு பதிலளிக்க அந்த 169 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிடுகிறேன். விசாரணையை ஆகஸ்டு 8-ம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். 

இந்த இடைக்கால நிவாரணம் வழங்கும் அதேநேரத்தில், திரையுலகத்துக்கு சில கருத்துக்களை கூற விரும்புகிறேன்.

முன்பு திரைப்படங்கள், மனித பண்புகளை வளர்ப்பது, தேசப்பற்றை மக்கள் மத்தியில் உருவாக்குவது போன்ற நற்செயல்களில் ஈடுபட்டன என்று கூறுவதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.

ஆனால், அண்மை காலங்களில் டி.வி. தொடர்கள், குடும்பபெண்களின் உயர் பண்புகளை அழிக்கும் விதமாக, பெண்களை ‘வில்லியாக’ சித்தரிக்கின்றன. திரைப்படங்களில் எல்லாம் ஆபாச காட்சிகள், வன்முறை காட்சிகள், கெட்ட எண்ணத்தை தூண்டும் காட்சிகள் அதிக அளவில் இடம்பெறுகின்றன. கொடூர குற்றவாளி கதாபாத்திரம் எல்லாம் முன்னணி கதாநாயகர்கள் நடிக்கின்றனர். இதனால், ரசிகர்கள் மனதில் நஞ்சை விதைக்கிறது. குற்றம் செய்வது தப்பு இல்லை என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.

முன்பு எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் போன்ற நடிகர்கள் தங்கள் ரசிகர்களுக்கு நல்லொழுக்கத்தை சொல்லிக் கொடுக்கும்விதமாக நடித்தார்கள். அவர்களது திரைப்படங்கள், சமுதாயத்தில் மிகப் பெரிய சீர்திருத்தத்தை உருவாக்கியது.

ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில், சமுதாயத்தில் நடக்கும் பல குற்றங்களுக்கு, சினிமாதான் காரணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, முன்னணி கதாநாயகர்கள், கெட்டவனாக நடிப்பதற்கு முன்பு, தன்னுடைய நடிப்பு, சமுதாயத்தில், குறிப்பாக தன்னுடைய ரசிகர்கள் மத்தியில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துவது குறித்து சிந்தித்து பார்க்கவேண்டும்.

நடிகர்கள், சினிமாவில் மது குடிப்பது, சிகரெட்டு பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்காமல் தவிர்க்கவேண்டும். அதன் மூலம் இந்த கெட்ட பழக்கங்கள், தன்னை விரும்பும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

எனவே, திரையுலகத்தினர், குறிப்பாக முன்னணி கதாநாயகர்கள், தங்களது திரைப்படங்கள் சமுதாயத்துக்கு நன்மைகளை ஏற்படுத்தும் விதமாக இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டுமே தவிர, அதிக வருமானத்தை தரவேண்டும் என்று நினைக்கக் கூடாது. குறிப்பாக தன்னுடைய திரைப்படம் தவறான தகவல்கள், சமுதாயத்துக்கு சொல்லும் விதமாக இருக்கக் கூடாது என்பதிலும் அவர்கள் தெளிவாக இருக்கவேண்டும்.

மேலும், திரைப்படத்துறை என்பது பெரிய அளவில் பணம் புழக்கம் உள்ள துறையாகும். இந்த துறை பொதுமக்களை நேரடியாக சென்றடைந்து, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

2013-ம் ஆண்டு கம்பெனி சட்டம், 7-வது அட்டவணையில், பெருநிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வுடன் செயல்படவேண்டும் என்று கூறுகிறது. தமிழக திரைப்படம் மிகப் பெரிய நிறுவனமாக செயல்படுவதால், இந்த ஐகோர்ட்டு கூறியுள்ள இந்த கருத்துக்களையும், சமூக பொறுப்புணர்வுடன், இந்த துறை செயல்படுகின்றன என்பதை மத்திய தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத் துறை முதன்மை செயலாளர், தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) தலைவர், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை முதன்மை செயலாளர் ஆகியோர் உறுதி செய்யவேண்டும்..” என்று கூறினார்.

இதே விசாரணையின்போது அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல் அப்துல் சலீம், “காப்புரிமை இல்லாமல், சட்ட விரோதமாக திரைப்படங்கள் திரையிடப்பட்டால், உள்ளூர் கேபிள் டி.வி. இணைப்பு துண்டிக்கப்படும் என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது…” என்றார்.

அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன், “ஆம்னி பஸ்களில் திருட்டு சி.டி. மூலம் கபாலி படம் திரையிடப்பட்டால், அது குறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் மனுதாரர் புகார் செய்யலாம். போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள்…” என்று கூறினார். இருவரது உத்தரவாதத்தையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Our Score