full screen background image

ஜகமே தந்திரம் – சினிமா விமர்சனம்

ஜகமே தந்திரம் – சினிமா விமர்சனம்

இத்திரைப்படத்தை YNot Studios நிறுவனம், ரிலையன்ஸ் என்டர்டெயிண்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.

இத்திரைப்படத்தில் தனுஷ் நாயகனாகவும், ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.

மேலும் சஞ்சனா நடராஜன், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜூ ஜார்ஜ், கலையரசன், செளந்தர் ராஜா, தீபக் பரமேஷ், தேவன், வடிவுக்கரசி, ராமச்சந்திரன் துரைராஜ், ராஜு பாய், சரத் ரவி, ஜெர்மைன், தன்வீர் கான், நேசந்த் பெர்னாண்டோ, முத்துக்குமார், அஷ்வந்த் அசோக்குமார், ரூபன் நாதன், ராபர்ட் மெக்ரா, கைரன் மெக்கிவர்ன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர்கள் – ஒய் நாட் ஸ்டுடியோஸ் எஸ் சஷிகாந்த் & ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் சக்கரவர்த்தி இராமசந்திரா, ஒளிப்பதிவு – ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, இசை – சந்தோஷ் நாராயணன், படத் தொகுப்பு – விவேக் ஹர்ஷன், கலை இயக்கம் – வினோத் ராஜ்குமார், சண்டை இயக்கம் – அன்பறிவ், நடன இயக்கம் – எம் செரிஃப், பாபா பாஸ்கர், ஒலி வடிவமைப்பு – விஷ்ணு கோவிந்த், ஸ்ரீசங்கர், தயாரிப்பு ஒருங்கிணைப்பு – முத்துராமலிங்கம், ஆடை வடிவமைப்பு – D.பிரவீன் ராஜா, ஒப்பனை – ஏ.சபரி கிரீசன், விளம்பர வடிவமைப்பு – டியூனி ஜான் (24 AM), மக்கள் தொடர்பு – நிகில் முருகன், எழுத்து, இயக்கம் – கார்த்திக் சுப்பராஜ்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கேங்ஸ்டர் படங்களை மட்டுமே இயக்க வேண்டும் என்ற கொள்கை முடிவில் இருக்கிறார் போலும்.. மதுரை ரவுடிகளை மதுரைக்குள்ளேயே ரவுண்டடிக்க வைத்து அவருக்கே போரடித்துவிட்டது. அதுதான் ஒரு வித்தியாசத்திற்கு மதுரை ரவுடியை லண்டனுக்கே பார்சல் செய்வதுபோல ஒரு கதையைத் தயார் செய்திருக்கிறார்.

மதுரையைச் சேர்ந்த சுருளி’ என்னும் ரவுடியான நாயகன் தனுஷ் ஓடும் ரயிலுக்கு குறுக்கே காரை நிறுத்தி ரயிலுக்குள் இருக்கும் ஒருவரை போட்டுத் தள்ளிவிட்டு ஹாயாக செல்லும் அளவுக்கு செல்வாக்கும், ஆள் பலமும் உள்ள ஆள்.

அந்த ரயில் கொள்ளைக்குப் பழிக்குப் பழி வாங்க வந்த ரவுடிகளை தனது பரோட்டா கடையில் வைத்து குருமா செய்கிறார் தனுஷ். இதைப் பார்க்கும் ஒரு லண்டன் தாதாவின் அடியாள், தனுஷை லண்டனுக்கு ஒரு அஸைண்மெண்ட்டுக்காக அழைத்துச் செல்கிறார்.

லண்டனில் சிவதாஸ்’ என்ற இலங்கை தமிழரான ஜோஜூ இலங்கை வாழ் அகதி மக்களுக்கு உதவிகள் செய்து அவர்கள் அகதி அந்தஸ்து பெற உதவி வருகிறார். அவரைப் பற்றி எதுவுமே தெரியாமல் தனுஷ் தன்னை வாரச் சம்பளத்துக்கு குத்தகைக்கு எடுத்த பீட்டர்’ என்ற பீட்டர் மாமாவிடம் வேலைக்குச் சேர்கிறார். அவருக்குக் கொடுக்கப்படும் அஸைண்மெண்ட்டே அந்த சிவதாஸையும், அவரது கூட்டத்தையும் ஒழித்துக் கட்டுவதுதான்.

இடையில் ஹோட்டலில் பாட்டுப் பாடி வரும் நாயகியைப் பார்த்து லவ்வாகிறார் தனுஷ். நாயகியோ ஆரம்பத்தில் “ச்சீ நாட்டுப்புறத்தான்” என்பதைப் போல் தனுஷை பார்ப்பவர் சில ரீல்களுக்குப் பிறகு பச்சைக் கொடி காட்டுகிறார்.

லண்டனில் தனது அதிவீர பராக்கிரம வேலைகளைச் செய்து காட்டி நல்ல பெயர் எடுக்கும் தனுஷ், சில பல கொலைகளைச் செய்து முடித்துவிட்டு அதற்குப் பரிசாக மத்திய  லண்டனில் ஒரு பரோட்டா கடையையே திறக்கிறார். இதற்காக ஊரில் இருந்து தனது அம்மா, நண்பர்களையெல்லாம் அழைத்து வருகிறார்.

கடைசியாக ஜோஜூவை ஒழிக்கத் திட்டம் தீட்டுகிறார் பீட்டர். இதற்கு தனுஷ் போடும் ஸ்கெட்ச்சில் ஜோஜூ மாட்டிக் கொள்ள.. என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் தனுஷ், ஜோஜூவின் சாவுக்குக் காரணமாகிறார்.

இந்தக் கொலைக்குப் பிறகு “டேட்டிங் போலாம்.. வாங்க…” என்றழைத்த நாயகியைப் பார்க்க பூங்காவுக்கு வந்தவரை ஜோஜூவின் அடியாட்கள் கொலை செய்ய வர.. நான்கு புல்லட்டுகளை அவர்களிடமிருந்து வாங்கிக் கொண்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார் தனுஷ்.

அங்கே அவரை நாயகியே கொலை செய்ய முயற்சிக்க.. தனுஷ் கடைசி நிமிடத்தில் தப்பிக்கிறார். நாயகியிடம் “ஏன் இந்தக் கொலை வெறி..?” என்று கேட்க.. நாயகியின் கதையும் விரிகிறது. இப்போது ஜோஜூ எவ்வளவு நல்லவர் என்பதை உணர்கிறார் நாயகன் தனுஷ்.

நாயகியோ ஜோஜூவை கொன்ற நாயகனுடன் சேர தனக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டுப் போக, நாயகன் அடுத்து என்ன செய்கிறார் என்பதே இந்தப் படத்தின் மீதமான கதை.

தனுஷை பற்றிச் சொல்லவே தேவையில்லை. அந்த ‘சுருளி’ கதாபாத்திரத்தை வைத்து தனது ஹீரோயிஸத்தை காட்சிக்குக் காட்சி உயர்த்திக் கொண்டே போயிருக்கிறார். அடுத்த சூப்பர் ஸ்டார் லெவலுக்கு யோசித்து, யோசித்து அவருக்கு ஷாட்டுகளை வைத்திருக்கிறார் இயக்குநர். என்னதான் ஸ்டைலைக் காட்டினாலும் ‘ஆள் கெத்து’ என்று சொல்லும் அளவுக்கு தனுஷின் உடல்வாகு இல்லையென்பதால் அதை ஏற்க முடியவில்லைதான்.

கேலி, கிண்டல், நையாண்டி, சேட்டைகள், ஸ்டைல் எல்லாவற்றையும் கலந்து கட்டியடித்திருக்கும் தனுஷ் செய்யாதது ரொமான்ஸ் மட்டும்தான். டேட்டிங் என்றாலே என்னவென்று தெரியாதவருக்கு அதை தெரியப்படுத்தும்விதத்தையாவது ஈர்ப்பாக எடுத்திருக்கலாம். ம்ஹூம்.. இயக்குநர் இந்த இடத்தில் கோட்டையேவிட்டுவிட்டார்.

அடிதடியிலேயே ‘மசாலா மன்னன்’ என்ற பட்டத்தைப் பெற்றாலே போதும் என்று தனுஷும் நினைத்துவிட்டதால் அந்த ஏரியாவுக்குள் கால் வைக்கவே இல்லை. ஆனால், நாயகியின் சோகக் கதைக்குப் பின்பான ஒரு காட்சியில் மட்டுமே தனது டிரேட் மார்க் நடிப்பைக் கொட்டியிருக்கிறார். மீதம் எல்லாமே மசாலா நாயகனின் ஸ்டைல்தான்.

படத்தின் வில்லன்களாக நடித்த இருவர்தான் உண்மையில் சிறப்பு என்றே சொல்லலாம். பீட்டராக நடித்திருக்கும் ஜேம்ஸ் காஸ்மோவும், சிவதாஸாக நடித்திருக்கும் ஜோஜூவும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.

இதில் ஜோஜூ தனித்தே தெரிகிறார். தன் சாவுக்கு முன்பு அவர் பேசும் அந்த வசனத்தில் அவர் முகத்தைக் காட்டாமல் தனுஷின் முகத்தைக் காட்டியதிலேயே இந்தப் படம் எந்த அளவுக்கு தனுஷ் படமாக மாறியிருக்கிறது என்பதை உணரலாம்.

பீட்டர் ஸார் அடிக்கடி சிரிக்கும்போது இயல்பான வில்லத்தனமாக இருக்கிறது. சரியான தேர்வு என்றே சொல்லலாம்.

நாயகியான ஐஸ்வர்யா லட்சுமி அப்படியொன்றும் அழகில்லை. எப்படி தேர்வு செய்தார்கள் என்றும் தெரியவில்லை. தன்னுடைய உண்மைக் கதையைச் சொல்லும்போது மட்டும் நடிப்பில் மிளிர்கிறார். பூங்காவில் “சரியான மக்கா இருப்பான் போலிருக்கே…” என்பதைப் போல அவர் பார்க்கும் பார்வை ரசனையானது.

“செஞ்ச பாவத்தைச் சரி செஞ்சிட்டு வா…” என்று அக்மார்க் தமிழச்சியாக பொங்கிவிட்டுப் போகிறார் அம்மா வடிவுக்கரசி. கலையரசன், செளந்தர்ராஜன், துரைராஜ் என்ற மூவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கார்த்திக்கின் சொந்த அப்பாவான கஜராஜூம் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து பரிதாபத்தை பெற வேண்டியே சாகடிக்கப்படுகிறார்.

படத்தின் ஒரேயொரு ப்ளஸ் பாயிண்ட்டே ஒளிப்பதிவுதான். ஸ்ரேயாஷ் கிருஷ்ணாவின் கேமிராவில் லண்டனின் அழகை பிட்டு பிட்டாக பதிவு செய்திருக்கிறார்கள். இன்னும்கூட செய்திருக்கலாம். ஆனால் ஏனோ வெளிப்புறப் படப்பிடிப்பே அதிகம் இல்லாமல் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள் போலும்..!

சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களைவிடவும், பின்னணி இசைக்கு மட்டும் ஒரு ‘ஜே’ போடலாம். ஒலிப்பதிவில் ஏன் இப்படி கோட்டைவிட்டார்கள் என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு ஒலிக் கலவையும் நம்மை சோதிக்கிறது.

யாரும் நடிப்பில் குறை வைக்கவில்லை. இயக்கத்திலும் குறையில்லை. ஆனால் கதை, திரைக்கதையில்தான் எல்லாமே கோட்டை விடப்பட்டிருக்கிறது.

சினிமாதான் என்றாலும்.. கேங்ஸ்டர் கதைதான் என்றாலும்.. கொஞ்சமாவது லாஜிக் வேண்டாமா என்றுதான் படம் முடிந்தவுடன் கேட்கத் தோன்றுகிறது. ஏதோ தமிழ்நாட்டில், இந்தியாவில் என்றால் சரி.. லண்டனில்.. அந்த ஊரில் போலீஸும், போலீஸ் ஸ்டேஷனுமே இ்ல்லாததுபோல காட்டியிருப்பது படம் பார்ப்பவர்களை எரிச்சலாக்குகிறது. லண்டனில் இருப்பவர்களே இந்தப் படத்தைப் பார்த்தால் என்ன நினைப்பார்களோ தெரியவில்லை..?

இத்தனை கொலைகளை செய்தவர்கள் ஜாலியாக ஹோட்டலை திறந்து நிம்மதியாக வாழலாம் என்றால் மதுரையின் அத்தனை ரவுடிகளும் நாளைக்கே லண்டனுக்கு டிக்கெட் எடுத்துவிடுவார்கள்.

‘தி பேமிலி மேன்-2’ தொடரில் இலங்கையின் ஈழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியும், விடுதலைப்புலிகளை கேவலப்படுத்தியும் காட்சிகள் இருக்கின்றன என்ற கண்டனக் குரல்கள் இன்னமும் ஓயவில்லை.

அதற்குள்ளாக இந்தப் படத்திலும்.. நல்லவேளையாக புலிகளை.. இயக்கத்தை எதுவும் சொல்லாவிட்டாலும்… இலங்கை தமிழர்கள் லண்டனில் கடத்தல் பேர்வழிகளாகவும், கொலை செய்யவும் அஞ்சாதவர்களாகவும், ரவுடிகளாகவும் வாழ்வதாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். இதற்கு என்ன மாத்து வாங்கப் போகிறாரோ..?

படத்தின் கிளைமாக்ஸ் சுவாரஸ்யமாக இருந்தாலும் அது சாத்தியம்தானா என்றும் கேட்கத் தோன்றுகிறது. ஒரு பக்கம் சிரியா.. ஒரு பக்கம் ஈரான்.. ஒரு பக்கம் ஈராக்.. ஒரு பக்கம் ஆப்கானிஸ்தான் என்று நான்கு நாடுகளில் எல்லையில் கொண்டுபோய் வில்லனை இறக்கிவிட்டுவிட்டு “இப்போது நீயே ஒரு நாடற்றவன்தான்” என்று சொல்வது கேட்பதற்கெல்லாம் ஓகேதான். ஆனால் நடைமுறையில்.. இத்தனையாண்டுகள் இங்கிலாந்தில் ஓஹோவென்று தாதாவாக வாழ்ந்தவனுக்கு இதில் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாதா என்ன..? 

வசனங்கள் மூலமாக கதையை நகர்த்துவதாகச் சொல்லி நல்ல, நல்ல வசனங்களை வைத்திருந்தாலும் கதை நம்ப முடியாததாகவும், மசாலா படங்களில்கூட ஏற்க முடியாததாகவும் இருப்பதால் திரைக்கதையில் சுவாரசியமும், அதிக ஈர்ப்பும் இல்லாததால் படம் வெறுமனே ஓகே ரகமாக்ததான் இருக்கிறது.

இந்தப் படம் தியேட்டருக்கு வராமல் போனதால் தனுஷும் தப்பித்தார்.. தயாரிப்பாளரும் தப்பித்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

கார்த்திக் சுப்பராஜ் மற்றும் தனுஷின் கேரியரில் இதுவும் ஒரு படம். அவ்வளவுதான்..!

Our Score