இப்போதெல்லாம் எந்த புதிய படங்கள் வந்தாலும் படம் நல்லாயிருக்கோ.. இல்லையோ.. அது எந்த வெளிநாட்டு படத்தோட காப்பி என்கிற பேச்சும், துழாவலும்தான் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது.
வரும் 12-ம் தேதி ரிலீஸாகவிருக்கும் ‘பர்மா’ படத்தின் ட்ரெயலரைப் பார்த்துவிட்டு, இது ஹாலிவுட் படமான ‘Gone in 60 Seconds’ படத்தின் காப்பி என்று கருத்துச் சொல்லியிருக்கிறார்கள் இணைய சினிமா ஆர்வலர்கள்.
மைக்கேல், ரேஸ்மி மேனன், அதுல் குல்கர்னி, சம்பத் குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணிதரன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். சுதர்சன் இசையமைத்து இருக்கிறார்.
மற்ற இயக்குநர்களை போல கருத்துக்களை பார்த்துவிட்டு, படித்துவிட்டு கண்டு கொள்ளாமல் போகவில்லை இயக்குநர் தரணிதரன்.
இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருக்கும் தரணிதரன், “எனது ‘பர்மா’ ட்ரெய்லருக்கு பலரும் கருத்து தெரிவித்து இருந்தார்கள். அதில் சிலர் இப்படத்தை நான் ‘Gone in 60 Seconds’ என்ற படத்தில் இருந்து காப்பியடித்து இருப்பதாக கூறி இருக்கிறார்கள்.
‘GONE IN 60 SECONDS’ படத்தை இதுவரை பார்க்காதவர்கள், தயவு செய்து பர்மா பஜாரில் உள்ள FINAL DRAFT என்ற டி.வி.டி. கடையில் வாங்கி கொள்ளவும். அங்கு சென்று எங்கள் படத்தின் பெயரைச் சொன்னால் உங்களுக்கு 10% தள்ளுபடியும் கிடைக்கும்” என்று கிண்டல் செய்துள்ளார்.
‘Gone in 60 Seconds’ திரைப்படத்தில் நிக்காலஸ் ஜேக், ஏஞ்சலீனா ஜூலி நடித்திருந்தனர். கார் திருடர்களை பற்றிய கதை இது. ‘பர்மா’ படமும் கார்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதால் ‘அதன் காப்பிதான் இது’ என்கிற பேச்சு கிளம்பியுள்ளது.
இது போன்ற சர்ச்சைகள் கிளம்புவது திரையுலகில் தவிர்க்க முடியாதது.. என்ன ஆனாலும் 12-ம் தேதி விஷயம் தெரிந்துவிடுமே..?
காத்திருப்போம்..!
Gone in 60 Seconds Movie Trailer
Burma Movie Trailer