பூம் பூம் காளை – சினிமா விமர்சனம்

பூம் பூம் காளை – சினிமா விமர்சனம்

ஒளிமார் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் J.தனராஜ் கென்னடி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் நாயகனாக பிரபல நடிகை அனுராதாவின் மகன் கெவின் நடித்துள்ளார். கதாநாயகியாக  சாரா தேவா நடித்துள்ளார். இவர் ‘சிவலிங்கா’ படத்தில் நாயகிகளில் ஒருவராக  நடித்திருந்தார். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், அப்புக்குட்டி, ‘காதல்’ அருண், சச்சு, கிரேன் மனோகர், அபிநயாஸ்ரீ உட்பட பலர் நடித்துள்ளனனர்.

ஒளிப்பதிவு – K.P.வேல்முருகன், படத் தொகுப்பு – யுவராஜ், இசை – P.R.ஸ்ரீகாந்த், பாடல்கள் – S.ஞானகரவேல், மக்கள் தொடர்பு – கே.எஸ்.கே.செல்வா, எழுத்து, இயக்கம் – ஆர்.டி.குஷால் குமார்.

இந்தப் படத்தை ‘ஸ்ரீவெங்கடேஸ்வரா பிக்சர்ஸ்’ உலகமெங்கும் வெளியிட்டுள்ளது.

“காதல் பொய்.. காமம்தான் நிஜம்’ என்று சொன்னால் உடனே பல பேர் எதிர்ப்புக் குரல் எழுப்புவார்கள். ஆனால், நிதானமாக யோசித்து பார்த்தால் இதில் உண்மையின் சதவீதம்தான் அதிகம் என்பது புரியும்.

நாயகன், நாயகி இருவரும் திருமணம் முடித்து தேனிலவுக்குச் செல்கிறார்கள். நாயகியோ கணவனுடன் அன்பாக பழகி, அதன் பின்னரே தாம்பத்ய உறவில் ஈடுபடவே விரும்புகிறாள்.. நாயகனோ திருமணம் முடிந்த பின் இனி அடுத்தது ‘அந்த’ விஷயம்தானே.. அது நடப்பது எப்போது என ‘பூம் பூம் காளை’யாக அலை பாய்கிறான்.

இப்படி எதிரெதிர் கருத்துக்களைக் கொண்ட தம்பதிகளின் முதல் உறவு நடந்ததா..? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

நாயகன் கெவின் அப்பாவி என்றால் அப்படியொரு அப்பாவியாகக் காட்சியளிக்கிறார். இவர் நேராக பேசும் வசனங்களைவிடவும் மைண்ட் வாய்ஸில் பேசும் வசனங்கள்தான் அதிகம். மனைவியை “வாங்க.. போங்க..” என்று போட்டு பேசும் இந்த நாயகனை எந்தக் காலத்து நாயகனாக காட்ட இயக்குநர் முயற்சித்தார் என்று தெரியவில்லை. ஆள் பேக்கு மாதிரியிருக்கானே என்ற கோபம்தான் வருகிறது. நாயகன் என்ற உணர்வையே நமக்குள் தோற்றுவிக்காததால் அவருடன் நம்மால் ஒன்ற முடியவில்லை.

இந்தப் படத்துக்கு இந்தக் கேரக்டர் ஸ்கெட்ச் தேவையே இல்லை. சராசரி ஆணாக இருந்திருக்க வேண்டும். ஒரு வளர்ச்சியடையாத ஆண் போல் நாயகனைக் காட்டிவிட்டு முதல் இரவு நடக்க வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான் என்று திரைக்கதை எழுதினால் கொஞ்சமாவது ரசிக்க முடியுமா..? அப்படித்தான் மொத்தப் படமும் அமைந்திருக்கிறது.

நாயகி சாரா தேவா நாயகிக்குரிய லட்சணத்தோடு இருக்கிறார். சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகனைவிடவும் சில இடங்களில் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரிதான் ஒர்க் ஆகவே இல்லை.

அப்புக்குட்டி, காதல் அருண் இருவரும் சிரிக்க வைக்க முயற்சித்திருப்பதோடு, டபுள் மீனிங் வசனங்களையும் பேசி நம்மை பதற  வைக்கிறார்கள். அப்புக்குட்டியின் மூன்று மனைவி காதல் கதையெல்லாம் எந்தக் காலத்து கதை..?

கடைசி நேரத்தில் ஆர்.சுந்தர்ராஜன்-சச்சு தம்பதிகளை வைத்து இந்த இளைய தம்பதிகளுக்கு அட்வைஸ் மழை பொழிந்திருக்கிறார்கள். வந்ததே கால் மணி நேரம்தான் என்பதால் வந்த வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள் இந்த மூத்தத் தம்பதிகள்.

கிரேன் மனோகரும் துவக்கத்தில் எதையோ பெரிதாகச் செய்யப் போகிறார் என்றால் லேகியத்தைச் சாப்பிட்டுவிட்டு கள்ளக் காதலியின் வீட்டுக்கு ஓடுகிறார். இப்படி படம் முழுக்க தப்பிதங்களையே சரியாக இருக்கும்படி செய்திருக்கிறார்கள்.

அமைச்சர்-அபிநயாஸ்ரீயின் இந்தக் கதையில் எதற்காக சொருகப்பட்டது என்று தெரியவில்லை. தேவையில்லாத ஆணியாகவே இது படத்தில் தெரிகிறது.  

ஒளிப்பதிவு, இசை, பாடல்கள் எல்லாமே மினிமம் பட்ஜெட் படங்களுக்கே உரித்தான வகையில் கொஞ்சமும் பிசிறு தப்பாமல் அமைந்திருக்கின்றன. பாடல்கள் இடம் பெற்ற இடங்கள்கூட தாறுமாறாக இருக்க.. எதற்காக இந்த இடத்தில் பாடல் காட்சிகள் என்ற கேள்வியையும் எழுப்புகின்றன.

மொத்தப் படத்திலும் நாயகன், நாயகி என்று இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே திரையில் அதிக நேரம் காண்பித்து, அவர்களைச் சுற்றியே அதிக நேரம் திரைக்கதையும் நகர்வதால் படத்தின் மீதான சுவாரஸ்யம் பெருமளவில் குறைத்துவிட்டது.

அதோடு உப்புச் சப்பில்லாத இயக்கமும், நாயகனின் சப்பென்ற நடிப்பும் சேர்ந்து நம்மை பெரிதும் சோதிக்கின்றன.

திருமணம் என்பது காமம் மட்டுமல்ல.. பேச்சால் நல்ல புரிதலும், நெருக்கமும் உண்டானால்தான் தம்பதியினர் இணை பிரியாமல் இனிமையாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.. என்ற கருத்தை கடைசியில் வலியுறுத்தி சொல்கிறார் இயக்குர் R.D.குஷால் குமார்.

இந்தக் கதைக் கருவே தப்பாக அமைந்திருக்கிறது. முதல் உறவு சக்ஸஸாக முடிவதற்கும் கணவன், மனைவியரின் புரிதலுக்கும் சம்பந்தமே இல்லை. திருமணம் செய்யும் அத்தனை தம்பதியினரும் முதலில் தங்களுடைய முதல் உறவை துவக்கிக் கொண்டு அதன் பின்புதான் போகப் போக தங்களைப் புரிந்து கொள்ள முயல்கிறார்கள். அது தேனிலவு போன்ற சமயங்களில் அவர்களுக்குப் பெரிதும் உதவுகிறது. அவ்வளவுதான்.

இதற்கெதுக்கு இத்தனை பெரிய ஊதல் என்று தெரியவில்லை. முதலிரவிலேயே சண்டை.. உறவினால் பிரச்சினை.. என்றெல்லாம் இப்போதே பதட்டத்தையும், பிரச்சினையும் உருவாக்குவது சரியல்ல இயக்குநரே..!

 மக்களுக்கு இப்படியொரு நல்ல விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்று யோசித்திருக்கும் இயக்குநர் முக்கால்வாசி படத்தில் பேசப்பட்டிருக்கும் இரட்டை அர்த்த வசனத்தையெல்லாம் நீக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Our Score