இந்தப் படத்தை இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார்.
’சார்பட்டா பரம்பரை’ படத்தில் ‘டான்ஸிங் ரோஸ்’ என்ற கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பால் புகழ் பெற்ற நடிகர் ஷபீர் கல்லராக்கல் இதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மிர்னா கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும் தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பிஆர் வரலட்சுமி மற்றும் பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இயக்கம் – விக்ரம் ஸ்ரீதரன், எழுத்து, தயாரிப்பு – விக்ரம் ஸ்ரீதரன், ஸ்ரீராம் சிவராமன், ஒளிப்பதிவு – உதய் தங்கவேல், தயாரிப்பு வடிவமைப்பு – ராமு தங்கராஜ், படத் தொகுப்பு – இனியவன் பாண்டியன், உடை வடிவமைப்பு – ஸ்ருதி கண்ணத், கூடுதல் திரைக்கதை – அனுசுயா வாசுதேவன், இசை – விஷால் சந்திரசேகர், ஒலி வடிவமைப்பு – சின்க் சினிமாஸ், ஒலி கலவை – அரவிந்த் மேனன், கலரிஸ்ட் / டிஐ – பிரதீக் மகேஷ், விஷுவல் எஃபெக்ட்ஸ் – Fix it in Post Studio, புரொடக்ஷன் எக்ஸிகியூட்டிவ் – ரவிக்குமார், பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா டி‘ஒன், கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – ஸ்ரீராம் சிவராமன், லைன் புரொடியூசர் – கார்த்தி வேல், புரோஸ்டெடிக்ஸ் – வினீஷ் விஜயன், விளம்பர வடிவமைப்பு – கௌதம்.ஜே.
இந்தப் படம் ஒரு சைக்காலிஜிக்கல் திரில்லர் கதையில் உருவாகியுள்ளது. கணவன் – மனைவி என்று இரண்டு கதாப்பாத்திரங்களைச் சுற்றி நடக்கும் மிஸ்டரி டிராமாதான் இத்திரைப்படம்.
இதில், கணவன் டேனியல் என்ற டேனியாக ஷபீர் கல்லாரக்கல் மற்றும் மனைவி ஜெனிபராக மிர்னா நடித்திருக்கிறார். இந்தக் கதை 1990-ம் ஆண்டுகளில் நடக்கிறதாம்.
இராணுவ வீரனான டேனியலுக்குத் திருமணமானவுடனேயே வேலைக்குத் திரும்பிச் செல்கிறான். சிறு வயதில் இருந்தே பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட டேனி இப்போது மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான்.
கார்கில் போருக்குப் பிறகு இராணுவத்தில் இருந்து வீடு திரும்பிய டேனிக்குத் தன் மனைவி கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது. இந்தக் கர்ப்பத்துக்குத் தான் காரணமில்லை என்று நினைக்கும் டேனி, அந்தக் கருவை கொல்ல நினைக்கிறான்.
இதற்காக இயல்பான சூழலை உருவாக்க கேரளாவின் மலைப்பகுதியில் இருக்கும் தன்வந்திரி என்ற ‘Birth Village’-க்கு தன் மனைவியை பிரசவத்திற்காக அழைத்து செல்கிறான்.
அறுவை சிகிச்சையில்லாமல் இயற்கையான முறையில் பிரசவங்களை நடக்க வைக்கும் மருத்துவமனை இது. இந்த முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் பல தம்பதியினர் அந்தக் கிராமத்துக்கு வந்து கொண்டேயிருக்கிறார்கள். இப்போது டேனியும், ஜெனிபரும் அங்கே செல்லும்போது அவர்களைத் தவிர வேறு தம்பதியினர் யாரும் இல்லை.
ஜெனிபருக்கு சிகிச்சை தொடங்கினாலும், அந்தக் கிராமத்தில் சிகரெட், மதுவுக்குத் தடையென்பதால் டேனியால் அதைத் தவிர்க்க முடியாமல் தவிக்கிறான். ஜெனிபருக்கும் அந்தச் சூழல் ஒத்து வரவில்லை. “திரும்பிப் போகலாம்” என்கிறாள். ஆனால் குழந்தை மீது விருப்பமில்லாமல் இருக்கும் டேனி, முடியாது என்று மறுக்கிறான்.
அங்கே நடக்கும் சில அசம்பாவிதங்களுக்கு டேனியே பொறுப்பாக, இப்போது ஜெனிபருக்கு குழந்தை பேற்றினைவிடவும், டேனியின் நடத்தையே பெரும் பிரச்சினையாக இருக்கிறது.
டேனியின் இந்த சைக்கோத்தனத்தைத் தாண்டி ஜெனிபருக்கு சுகப் பிரசவம் ஆனதா..? இல்லையா..? டேனியலின் நிலைமை என்னவானது என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
சைக்கோ கேரக்டருக்கு மிகப் பொருத்தமானவராக நடித்திருக்கிறார் டேனியலாக நடித்திருக்கும் ஷபீர். மனைவியை தான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என்று அவ்வப்போது மிரட்டும்போது நமக்கே கோபம் வருகிறது.
தன் இயலாமையை, கோபத்தை வெளிப்படுத்த தெரியாமல் அதனை மனைவி மீது காட்டும் சைக்கோத்தனத்தை வெறித்தனமாகக் காட்டியிருக்கிறார் ஷபீர். அந்தக் கிராமத்தில் வேலை செய்யும் ஊமையரான இந்திரஜித்திடம் அவ்வப்போது மோதும்போதும், இறுதியில் அவரைத் தீர்த்துக் கட்ட நினைப்பதுமாய் இந்தக் கணவன் கதாப்பாத்திரத்தை நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு சிறப்பாக கையாண்டிருக்கிறார் ஷபீர்.
இவருக்கு சிறிதும் குறையில்லாமல் ஸ்கிரீனில் முழுமையாக ஆக்கிரமித்து நடிப்பைக் காண்பித்திருக்கிறார் ஜெனிபராக நடித்திருக்கும் மிர்ணா. கர்ப்பிணிகளுக்கே உரித்தான அந்த மெதுவான நடை, பேச்சு, முகத் தோற்றம், எப்போதும் சோர்வுடன் இருக்கும் பாங்கு, கணவரின் கோபத்தைப் பார்த்து பயப்படும்விதம், புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது.. மருத்துவமனையின் சிகிச்சைகளை ஏற்க முடியாமல் கஷ்டப்படுவது.. என்று பலவிதங்களிலும் நமது அனுதாபத்தைப் பெற்றிருக்கிறார் மிர்ணா.
அதிலும் கிளைமாக்ஸில் குழந்தை பெறும் காட்சியில் ஒட்டு மொத்த நடிப்பையும் கொட்டி நம்மை பதைபதைப்புக்குள்ளாக்கியிருக்கிறார். அந்தக் கிளைமாக்ஸ் காட்சிதான் படத்தின் உயிர்நாடி. அதில் இருவரின் நடிப்பும் ஆசம்..!
அந்த மருத்துவமனையில் வேலை செய்யும் இந்திரஜித், நர்ஸ், டாக்டரம்மா என்ற கதாப்பாத்திரங்களும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.
தமிழக – கேரள எல்லையில் இருக்கும் மறையூர் என்ற மலைப்பிரதேச கிராமத்திலேயே முழுப் படத்தையும் படமாக்கியிருக்கிறார்கள். அழகான அந்தப் பிரதேசத்தை தனது ஒளிப்பதிவில் ரம்மியமாகக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் உதய் தங்கவேலு.
சிகிச்சையளிக்கும் முறைகளைப் பற்றி டீடெயிலாக விவரணை டைப்பில் படப்பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.
விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல் காட்சிகள் மாண்டேஜாகவே இருப்பதால் பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. ஆனால் பின்னணி இசை மென்மையாக இசைக்கப்பட்டு தியேட்டர்களில் அமைதியைத் தந்திருக்கிறது.
படத்தின் துவக்கத்திலேயே ஷபீரும், மிர்ணாவும் தங்களது கண்களை கட்டிக் கொண்டு காட்டுக்குள் அலைந்து, திரிந்து ஒருவரை ஒருவர் எட்டிப் பிடித்துத் தங்களின் கண் கட்டுகளை அவிழ்த்துக் கொள்கிறார்கள். பின்பு அங்கேயே அவர்களது திருமணம் நடந்தேறுகிறது. இதுவே ஒரு குறியீடாகத்தான் நமக்குத் தோன்றுகிறது. ஒருவரையொருவர் அறியாமலேயே இந்தத் திருமணம் நடந்தேறுவதாக எடுத்துக் கொள்ளலாம்.
முதல் இரவன்று மனைவியின் அருகிலேயே செல்லாமல் தவிர்த்தவன் பின்பு ஒரு நாள் மது மயக்கத்தில் மனைவியிடம் கூடியதை அவனே அறியாமல் இருப்பதுதான் பிரச்சினைக்குக் காரணம் என்பதை இன்னொரு குறியீட்டுக் காட்சி மூலமாகத் தெரியப்படுத்துகிறார் இயக்குநர்.
இராணுவத்தில் இருக்கும்போது ஓரினச் சேர்க்கையால் தான் துயரப்பட்டதை டேனி நினைத்துப் பார்க்கும்விதமும் குடும்பச் சூழலை எதிர்க்கும் டேனியின் இன்றைய செயலுக்கு நியாயம் கற்பிப்பதுபோல உள்ளது.
இருந்தும் தியேட்டர்களில் படம் பார்க்க வரும் வெகுஜன ரசிகர்களுக்கு இந்தக் குறியீடெல்லாம் ஒரு காட்சி. அவ்வளவுதான். இதை இந்த அளவுக்குப் புரிந்து கொண்டு படத்தை ரசித்துப் பார்ப்பது ரசிகர்களால் முடியாது. அந்த வகையில் இந்தப் படம் தீவிர திரைப்பட விமர்சகர்களுக்காகவே உருவாக்கப்பட்டதோ என்று தோன்றுகிறது.
ஆனால்…
குழந்தை பிறக்கும் செயல் முறை என்பது பெரும்பாலான ஆண்கள் நினைப்பது போல் அவ்வளவு எளிதானது அல்ல. பிரசவ நேரத்தில் உடல் ரீதியான சவால்களைத் தாண்டி மன ரீதியாக அந்தப் பெண்கள் அனுபவிக்கும் மன உளைச்சல்கள் குறித்தும் பேசப்பட வேண்டும்.
இது போன்றதொரு காலக்கட்டத்தில் தன் மனைவியுடன் ஒரு கணவன் பிரசவத்திற்காக உடன் வரும்போது அவனே மீண்டும் பிறக்கிறான். மேலும், இது தன் தாய் மீதும், பெண்கள் மீதும் மரியாதையை அவனுக்கு ஏற்படுத்துகிறது. இந்த மரியாதையை தியேட்டருக்கு படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு இந்தப் படம் கொடுக்கும் என்று நம்பலாம்.
RATING : 3 / 5









