full screen background image

ரணம் – அறம் தவறேல் – திரைப்பட விமர்சனம்

ரணம் – அறம் தவறேல் – திரைப்பட விமர்சனம்

இந்தப் படத்தைத் தயாரிப்பாளர் மது நாகராஜ் தயாரித்துள்ளார்.

படத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி, பாடகி பிரணிதி, டார்லிங் மதன், விலங்கு கிச்சா ரவி, ஜீவா சுப்பிரமணியம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

அரோல் கரோலி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அறிமுக இயக்குநர் ஷெரீஃப் இயக்கியிருக்கிறார்.

ஆத்திச்சூடியில் இருக்கும் அரணை மறவேல்’ என்கிற வரிகளை சப்-டைட்டிலாகவும் வைத்திருக்கிறார் இயக்குநர்.

மர்டர், மிஸ்டரி கதைக் களத்தை புதிய கோணத்தில், இப்படியெல்லாமா நடக்கும் என்று நாம் அதிர்ச்சியடையும் விதத்தில் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

படத்தைப் பார்ப்பவர்களுக்கு இப்படிப்பட்ட காலகட்டத்திலா நாம் வாழ்கிறோம் என்ற எண்ணத்தை ஆழ்மனதில் இப்படம் விதைக்கும். நாம் கொஞ்சம்கூட யோசிக்க முடியாத, நினைத்தே பார்த்திராத சம்பவங்களை திரைக்கதையாக்கி இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர்.

இந்தப் படம் வைபவ் நடிக்கும் 25-வது படமாம். இதுவரையிலும் காமெடி படங்களிலும், நகைச்சுவை வேடங்களிலுமே நடித்து வந்த வைபவ் முதல்முறையாக ஒரு சீரியஸ் கேரக்டரில் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

அடிப்படையில் சினிமாவில் உதவி இயக்குநரான வைபவ், தனது காதல் மனைவியை ஒரு கார் விபத்தில் பறி கொடுத்தது முதலே சோக மோடுக்கு போய்விட்டார். இப்போது ஷேவ் செய்யப்படாத தாடி, மீசையில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கையில் சரக்கோடு இருக்கிறார்.

அவரது கை வசம் இருக்கும் ஒரே தொழில் அனிமேட்டட் டிராயிங்தான். அதிலும் முகம் கண்டறிய முடியாத போலீஸ் வழக்குகளில் முகத்தைக் கண்டறிந்து வரைந்து கொடுப்பதுதான் தற்போதைக்கு வைபவ்வின் முழு நேர வேலை. கூடவே ஒரு கொலை சம்பவம் பற்றித் தெரிந்து கொண்டு அது பற்றிய டீடெயிலிங் தியரியை எழுதிக் கொடுத்தும் போலீஸூக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில்தான் நகரில் மூன்று இடங்களில் அட்டைப் பெட்டிகளில் ஒரு உடலின் பாகங்கள் கிடைக்கின்றன. போலீஸ் ஸ்டேஷன் வாசலிலும் ஒரு அட்டைப் பெட்டியை வைத்து அதில் கால்களை வைத்திருக்கிறார்கள்.

கால்கள் யாருடையது.. கொலையாளி யார்.. எதற்காக போலீஸ் ஸ்டேஷன் வாசலில் அதைக் கொண்டு வந்து போட வேண்டும் என்று போலீஸ் தீவிரமாய் விசாரிக்கிறது. இதிலும் வைபவ் வந்து போலீஸூக்கு உதவி செய்கிறார். அடுத்த நாளே அந்த வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டரும் காணாமல் போகிறார்.

உடனேயே அந்த இடத்துக்கு பெண் இன்ஸ்பெக்டரான தான்யா ஹோப் வந்து சேர்கிறார். இப்போதும் வைபவ் தானாகவே முன் வந்து தான்யாவுக்கு வழக்கில் பல உதவிகளைச் செய்கிறார். இருவரும் இணைந்து வழக்கினை தீவிரமாக விசாரிக்கத் துவங்க.. பல மர்மங்கள் ஒவ்வொன்றாக அவிழ்கின்றன.

அந்த மர்மங்கள் என்ன..? யார் இதையெல்லாம் செய்வது..? இதற்கும் வைபவ்வுக்கும் என்ன தொடர்பு..? என்ற முக்கியமான கேள்விகளுக்கெல்லாம் திரைக்கதையில் விளக்கமாக பதில் சொல்கிறார் இயக்குநர்.

வைபவ்வுக்கு சீரியஸான கதாப்பாத்திரம். விபத்தினால் விசித்திரமான ஒரு உடல் பாதிப்பையும் பெற்றிருக்கும் வைபவ், அதை வெளிப்படுத்தும் விதத்தில் ஒரு பரிதாப உணர்வை வரவழைக்கிறார். காதல் காட்சிக்கு ஒரு டூயட் பாடல்.. சண்டை காட்சிகளில் பரபரப்பு.. சஸ்பென்ஸ் காட்சிகள் உடைபடும் இடத்தில் தனது ஆளுமையைக் காட்டும்விதத்தில் பேசிவிட்டுப் போவதுமாய் தனது ஹீரோயிஸத்தை கச்சிதமாகவே செய்திருக்கிறார் வைபவ். பாராட்டுக்கள்.

காக்கி டிரெஸ்ஸில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் தனது கம்பீரமான அழகைக் காண்பித்திருக்கிறார் தான்யா ஹோப். ஆனால் பெரிதாக சாதிக்கப் போகிறார் என்று நினைத்திருக்கும் நேரத்தில் எதையும் செய்யாமல் வைபவ்வை முன்னிறுத்தியே தனது விசாரணையை தொடர்ந்து முடித்துக் கொள்கிறார்.

வைபவின் காதலியாக நடித்திருக்கும் சரஸ் மேனன், குறைவான காட்சிகளில் வந்தாலும் நிறைவாக நடித்திருக்கிறார்.

படத்தில் அனைவரின் நடிப்பையும் ஒட்டு மொத்தமாய் சேர்த்து வைத்துக் காண்பித்திருக்கிறார் நந்திதா ஸ்வேதா. மருத்துவமனையில் மகளின் இறப்பைப் பார்த்துவிட்டு அவர் காட்டும் அழுகை கலந்த நடிப்பு அட்டகாசம்..! இவர்தான் படத்தை பிற்பாதியில் தாங்கிப் பிடித்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

இவரது மகளாக நடித்திருக்கும் பாடகி பிரணிதியும் வழக்கமான அம்மா-மகள் காம்பினேஷனில் அழகாக நடித்துவிட்டுப் போயிருக்கிறார்.

மேலும் ஏட்டுவாக நடித்திருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி, வைபவின் நண்பர்களாக நடித்திருக்கும் டார்லிங் மதன், விலங்கு கிச்சா ரவி, ஜீவா சுப்பிரமணியம் ஆகியோரும் அவரவர் கேரக்டருக்கு ஏற்ற நடிப்பைக் கொடுத்து படத்தை நகர்த்தியிருக்கிறார்கள்.

இது போன்ற மர்டர் சேஸிங் படங்களுக்கேற்ற ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.ராஜா. வில்லனின் இருப்பிடத்தை காட்டும்போதும், இரவு நேரக் காட்சிகளிலும் கேமிரா தீயாய் வேலை செய்திருக்கிறது.

இசையமைப்பாளர் அரோல் கொரோலியின் இசையில் பாடல்கள் ஒரு முறை கேட்கும் ரகம்தான். அதேசமயம் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் அரோல். அதிலும் வில்லன் வகையறாக்களின் அழிச்சாட்டியத்தைக் காண்பிக்கும் தருணத்தில் ஸ்கிரீனை பார்க்க முடியாதபடிக்கு மரண ஒலி ஒலிக்கிறது பின்னணி இசை.

இப்படியெல்லாம் எங்கேயாவது நடக்குமா.. நடக்க வாய்ப்பிருக்கா என்று நமக்கு நாமே கேட்டுக் கொள்ளும் வகையிலான கதை, திரைக்கதையை இந்தப் படத்தில் எழுதியிருக்கிறார் இயக்குநர். வார்த்தைகளால் சொல்லும்போதே நமக்குக் கூசுகின்ற இந்த விஷயத்தை படமாக்கலில் கொஞ்சம் நாகரீகம் காட்டியிருப்பதால் நாம் தப்பித்தோம்..!

எத்தனையோ மர்டர், மிஸ்டரி படங்கள் வந்துவிட்ட. ஆனால் இது போன்ற கதையில் இதுதான் முதல்முறை என்றாலும் இது நிச்சயமாக ஓவர் டோஸ்தான். நடப்பதைக் காட்டுவதாகச் சொன்னாலும், அந்த அசிங்கத்தை இப்படி வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது..!

ரணம் – நம் மனதையும் ரணப்படுத்துகிறது..!

RATING : 3.5 / 5

Our Score