full screen background image

GLASSMATES – திரைப்பட விமர்சனம்

GLASSMATES – திரைப்பட விமர்சனம்

இந்தப் படத்தை முகவை பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் ஜெ.அங்கயற்கண்ணன் தயாரித்து, ஒரு நாயகனாகவும் நடித்துள்ளார்.

மேலும் பிராணா, குட்டிப்புலி சரவண சக்தி, மயில்சாமி, டி.எம்.கார்த்திக், சாம்ஸ், முத்துப்பாண்டி, அபி நட்சத்திரா, அருள்தாஸ். மீனாள் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – குட்டிப்புலி சரவண சக்தி, இணை இயக்கம் – ஜெ.அங்கயற்கண்ணன், ரத்னகுமார், தயாரிப்பாளர் – ஜெ.அங்கயற்கண்ணன், இணை தயாரிப்பு – கலைவாணி கண்ணன், நிர்வாகத் தயாரிப்பு – ஏ.கே.ஹர்னீஸ், ஒளிப்பதிவு – அருண்குமார் செல்வராஜ், படத்தொகுப்பு – எம்.எஸ்.செல்வம், கலை இயக்கம் – ஜெய், இசை – பிருத்வி, பாடல்கள் – சீர்காழி சிற்பி, நடன இயக்கம் – சந்தோஷ், உடைகள் வடிவமைப்பு – வி.முத்து, சண்டை இயக்கம் – ராம்குமார், பத்திரிக்கை தொடர்பு – டீம் எய்ம்.

இது பள்ளியில் படிக்கும் CLASS MATES பற்றிய படம் அல்ல; டாஸ்மாக் கடையில் கம்பெனி கொடுக்கும் GLASS MATES பற்றிய படம்.

தினமும் விடிந்தவுடன் டாஸ்மாக் கடைக்குள் நுழைந்து காசு தீரும்வரையிலும் குடித்துவிட்டு அலம்பல் செய்யும் இரண்டு குடிகாரர்கள் பற்றிய படம்தான் இது.

கதையின் நாயகனான அங்கயற்கண்ணனும், சரவண சக்தியும் மாமா, மாப்பிள்ளை உறவு முறையுள்ளவர்கள். ஆனால் அதையும் தாண்டி டாஸ்மாக் கடையில் கம்பெனி கொடுக்கும் உறவுக்காரர்கள்.

இதில் சரவண சக்தியின் மனைவி ஆசிரியையாக வேலை செய்கிறார். ஒரு மகளும் இருக்கிறார். தன் கணவரின் மீது பாசமாக இருக்கும் சரவண சக்தியின் மனைவி கணவருக்குத் தினமும் 500 ரூபாய் கொடுத்து குடிக்கு உதவுகிறார்.

அங்கயற்கண்ணனுக்கு இப்போதுதான் திருமணமாகியிருக்கிறது. இவரது மனைவியான பிராணா கணவன் குடித்துவிட்டு வந்தாலும் அவரை சீராட்டி, பாராட்டி மகிழ்கிறார். இந்த லட்சணத்தில்தான் இவர்கள் இருவரின் குடும்பமும் இருக்கிறது.

தன் கணவரின் குடிப் பழக்கத்தைப் பற்றி பள்ளியில் சக ஆசிரியரிடம் சொல்லிப் புலம்புகிறார் சரவண சக்தியின் மனைவி. இதனால் அந்த ஆசிரியர் சரவண சக்தியின் மனைவியை உஷார் செய்யும் பொருட்டு வீட்டுக்கு காண்டம் பாக்கெட்டுடன் வந்துவிடுகிறார். இது சரவண சக்திக்கும் தெரிய வர.. அப்போதைக்கு அவமானப்படும் சக்தி அடுத்த நாளே சாதாரணமாகிறார்.

அங்கயற்கண்ணனோ தான் பார்க்கும் டாக்ஸி டிரைவர் வேலையைக்கூட பார்க்க முடியாமல் தன் மனைவியை சந்தேகப்பட்டு அவரது மண்டையை உடைத்து விடுகிறார். இப்போது இருவரின் குடும்பத்திலும் சந்தேகப் புயல் வீசத் துவங்க.. இதனால் இவர்களது குடிக்கும் பங்கம் வருகிறது.

இவர்களது பக்கத்து வீட்டுக்காரரான மயில்சாமி இவர்களின் குடி விளையாட்டினால் ஏற்படும் ஒரு விபத்தில் இறந்து போகிறார். மயில்சாமியின் இறப்புக்குக் காரணகர்த்தாவான அங்கயற்கண்ணன் சிறைக்குப் போகிறார். இதனால் கர்ப்பிணியாக இருக்கும் அங்கையற்கண்ணனின் மனைவி பிராணா, தன் தாய் வீட்டுக்குப் போய்விடுகிறார்.  

இன்னொரு பக்கம் குடும்பத் தலைவரான மயில்சாமியை இழந்த அவரது குடும்பம் வாழ வழியில்லாமல் பணத்திற்காக திசை திரும்புகிறது. மயில்சாமியின் மகள் அபி நட்சத்திரா தடம் மாறி வேறு பாதைக்கு செல்கிறார்.

சில மாதங்களுக்குப் பின் ஜாமீனில் வெளியில் வரும் அங்கயற்கண்ணன், நிறை மாத கர்ப்பிணியான தன் மனைவியை பார்க்க செல்கிறார். அங்கயற்கண்ணன் மீண்டும் தன் மனைவியுடன் சேர்ந்தாரா..? மேலும் சரவண சக்தியின் குடும்பம் என்னவானது..? அபி நட்சத்திரா போன பாதையென்ன..? என்பதை சொல்லும் படம்தான் இந்தக் ‘கிளாஸ்மேட்ஸ்’ திரைப்படம்.

அறிமுக நாயகனாக நடித்திருக்கும் அங்கயற்கண்ணன் குடிபோதையில் சரவண சக்தியுடன் சேர்ந்து செய்யும் அலப்பறை காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். போதையில் மனைவியிடம் வழிவதிலும், டாஸ்மாக்கில் சரவண சக்தியை சதாய்க்கும்போதும் புதுமுகம் மாதிரியே தெரியவில்லை. பாராட்டுக்கள்.

இயக்குநர் சரவண சக்தி வழக்கம் போல தனது இயல்பான நடிப்பால் கொஞ்சம், கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். பெட்டில் உச்சா போய்விட்டு மனைவியிடம் சமாளிப்பதும், அலமாரிக்குள் உச்சா போய்விட்டு வெட்கப்படும்போதும் சிரிக்க வைத்திருக்கிறார். அதேநேரம் மனைவிக்கு வந்த சோதனையை நினைத்து வருத்தப்படும் காட்சியில் இன்னும் நடிப்பு தேவையாய் இருக்கிறது.

நாயகி பிரணா தனது கேரக்டருக்கேற்ற இயல்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். சரவண சக்தியின் மனைவி காட்டும் ரொம்ப சாதாரணமான நடிப்பும், அவரது அழகும் ரசிக்க வைக்கிறது.

குடிக்கவே தெரியாத மயில்சாமியை கடைசியில  குடிகாரனாக்கும் இந்தக் கூட்டணியின் காமெடியும் ‘நல்லவன் குடிச்சா குழந்தை, கெட்டவன் குடிச்சா கொலைகாரன்’ என்ற அவரது டிரேட் மார்க் வசனமும் சேர்ந்து வருவதும் ரசனையானது.

மேலும் குடியை ஒழித்துக் கட்ட மருத்துவம் பார்க்கும் டாக்டரான டி.எம்.கார்த்திக்கே கடைசியில் குடிகாரனாவது நகை முரண். அதேபோல் ஒரேயொரு பெண்ணின் மறுப்பினால் சாம்ஸ் குடிகாரனாக மாறுவதும், இயக்குநரின் அதீதமான கற்பனை என்றே சொல்லலாம்.

‘அயலி’ புகழ் அபி நட்சத்திராவை கிளைமாக்சில் வேறுவிதமான சிச்சுவேஷனில் பார்க்கும்போது நமக்கே அதிர்ச்சியாகிறது. ஆனால், அதற்கு அவர் சொல்லும் சமாளிப்பு வசனங்கள் ஏற்க முடியாதவை.

அருண்குமார் செல்வராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் தரமாகப் படமாக்கப்பட்டுள்ளன. இசை அமைப்பாளர் பிரித்வியின் இசையில் பாடல்கள் அனைத்துமே கேட்கும் ரகம்.

சொல்ல வந்த கருத்து நியாயமானதாக இருந்தாலும், 2 மணி நேரம் குடியையும், குடியின் கொண்டாட்டத்தையும் காண்பித்துவிட்டு கடைசி 5 நிமிடங்களில் “இதெல்லாம் தப்பு” என்று சொன்னால் நம் குடிகார மன்னர்கள் திருந்திவிடுவார்களா என்ன..?

சீரியஸாக சொல்ல வேண்டிய கதையை, காமெடியாகச் சொல்லி குடியின் கெடுதியையே காமெடியாக்கிவிட்டார் இயக்குநர்..!

RATING : 2.5 / 5

Our Score