full screen background image

பாஸ்கர் ஒரு ராஸ்கல் – சினிமா விமர்சனம்

பாஸ்கர் ஒரு ராஸ்கல் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ‘ஹர்ஷினி மூவீஸ்’ சார்பில் தயாரிப்பாளர் எம்.ஹர்சினி தயாரித்திருக்கிறார். 

மலையாளத்தில் 2015-ம் ஆண்டு மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ என்ற பெயரில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படத்தின் தமிழ் ரீமேக்குதான் இத்திரைப்படம்.  மலையாளத்தில் இப்படத்தை இயக்கிய சித்திக்கே தமிழ் பதிப்பையும் இயக்கியிருக்கிறார்.

இந்த தமிழ் ரீமேக் படத்தில் மம்மூட்டி வேடத்தில் அரவிந்த்சாமி நடித்திருக்கிறார். நயன்தாரா வேடத்தில் அமலாபால் நடித்திருக்கிறார். இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா ஆகியோருடன், மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார்.

எழுத்து, இயக்கம் – சித்திக், வசனம் – ரமேஷ் கண்ணா,  இசை – அம்ரேஷ், ஒளிப்பதிவு – விஜய் உலகநாதன், படத் தொகுப்பு – கே.ஆர்.கௌரி சங்கர், புரொடக்ஷன் டிசைன் – மணி சுசித்ரா, கலை இயக்கம் – ஜோசப் நெல்லிகன், சண்டை பயிற்சி – பெப்சி விஜயன், நடனம் – பிருந்தா, நிர்வாக தயாரிப்பு – விமல்.ஜி, தயாரிப்பு – எம்.ஹர்சினி.

‘பரதன் பிலிம்ஸ்’ நிறுவனம் இப்படத்தினை தமிழகம் முழுவதும் வெளியிட்டுள்ளது.

பெரும் பணக்காரரான ரெங்கசாமி என்னும் நாசர் லண்டனில் படித்த தொழிலதிபர். ஆனால் அவருடைய மகனான பாஸ்கர் என்னும் அரவிந்த்சாமி படிக்காத மேதை. ஆள் பார்க்க ரவுடி மாதிரியாகவே இருப்பார். ரவுடியாகவும் இருக்கிறார். பட்டென்று கை நீட்டி விடுவார். எதிர்த்து கேட்க வேண்டும். பேச வேண்டும். அடிக்க வேண்டும் என்பதில் அலாதி பிரியமுடையவர்.

அரவிந்த்சாமிக்கு மனைவி இல்லை. ஆனால் ஒரு மகன் உண்டு. ராகவன். 2-ம் வகுப்பு மாணவன். அதே வகுப்பில் உடன் படிக்கும் மாணவி நைனிகா. இந்தப் பெண்ணுக்கு அப்பா இல்லை. ஆனால் அம்மா உண்டு. அமலா பால். ஹவுஸ் ஒய்ப்.

அரவிந்த்சாமி ஒரு முறை இவர்களின் பள்ளி வளாகத்திலேயே ரவுடிகளுக்கு சுளுக்கெடுக்கிறார். இதை நேரில் பார்க்கும் நைனிகாவுக்கு அரவிந்த்சாமியை ரொம்பவே பிடித்துப் போகிறது. அரவிந்த்சாமி எப்போதும் நம்முடன் இருந்தால் எப்படியிருக்கும் என்று யோசிக்கிறாள் நைனிகா.

அதே பள்ளியில் அமலா பாலுடன் ஒரு முட்டாள்தனமான செயலால் அரவிந்த்சாமிக்கு மோதல் ஏற்படுகிறது. இருவருக்குள்ளும் மனக்கசப்பு. ஆனால் இது பிள்ளைகளுக்குத் தெரியவில்லை. அமலா பாலுக்கு சிறுவன் ராகவன் அறிமுகமாக அவர்கள் இருவரும் மிக நெருக்கமாகிறார்கள்.

இப்போது பிள்ளைகள் இருவருக்கும் ஒரு யோசனை. அவரவர் அம்மா, அப்பாவை இணைத்துவிட்டால் நாம் நால்வரும் ஒன்றாக ஒரே வீட்டில் இருக்கலாமே.. ஜாலியா இருக்கமே.. சந்தோஷமா இருக்குமே என்று யோசிக்கிறார்கள்.

ராகவன் இது பற்றி அப்பாவிடம் பேசுகிறான். நைனிகாவோ அரவிந்த்சாமி பற்றி நல்லவிதமான விஷயங்களை அம்மாவிடம் சொல்லி அவள் மனதை கரைக்கிறாள். அரவிந்த்சாமி, அமலா பால் இருவருக்குள்ளும் ஒரு சிநேகம் ஏற்படுகிறது. நட்பு உண்டாகிறது. பழக்கம் நெருக்கமாகி இருவரும் தத்தமது விருப்பத்தைச் சொல்வதற்கு நைனிகாவின் பிறந்த நாள் விழாவை தேர்ந்தெடுக்கிறார்கள்.

அந்த நாளில்தான் எதிர்பாராதவிதமாக நைனிகாவின் அப்பா நான்தான் என்று சொல்லி ஒருவன் நேரில் வந்து நிற்கிறான்.

இனி என்ன ஆகும்.. அரவிந்த்சாமியும், அமலாபாலும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் திரைக்கதை.

ஸ்டைலாக காலரை பின்னால் இழுத்துவிட்டு பக்கா லோக்கல் பார்ட்டியாக களம் இறங்கியிருக்கிறார் அரவிந்த்சாமி. புதையல் படத்திற்குப் பிறகு அவர் ஏற்கும் இரண்டாவது ரவுடியிஸ கேரக்டர் இந்தப் படத்தில்தான்.

புதுமையான திரைக்கதையினாலும், இதுவரையிலும் பார்த்திருக்காத கேரக்டர் ஸ்கெட்ச்சினாலும் அரவிந்த்சாமியை பெரிதும் ரசிக்க முடிகிறது.

மேனர்ஸ் பற்றி தனது மகனிடம் கேட்டுக் கொள்வதும், அமலாபாலுடன் சண்டையிட்டு செல்போனை உடைத்துவிட்டுப் போவதும், அமலா பால் செல்போனில் இருந்து வந்த வாட்ஸ்அப் போட்டோவை பார்த்துவிட்டு குபீர் ஆசையுடன் அலைவதுமாய் ஒரு இயல்பான கேரக்டரை முன்னிறுத்துகிறார் அரவிந்த்சாமி.

பையனிடம் அமலா பாலுக்காக மாறி, மாறி கேள்வி கேட்பதும், அப்பாவிடம் அமலா பால் பற்றிச் சொல்லாமல் சமாளிப்பதும்.. நைனிகாவின் பேச்சால் அதிகம் கவரப்படும் சராசரி ஆணாகவும் மாறுவதும் அரவிந்த்சாமியை அதிகமாகவே ஸ்கிரீனில் பார்க்க வைத்திருக்கிறது.

அமலாபாலுக்கு குடும்பக் குத்துவிளக்கான வேடம். கண்ணியமான உடையில் ஒரு பாசமிக்க அம்மாவாக.. தோழமையுணர்வுள்ள பெண்ணாக இப்படத்தில் காட்டியிருக்கிறார்கள். கதைக்கேற்றபடியே அம்சமான அம்மாவாக நடித்திருக்கிறார் அமலா பால்.

‘றெக்க’ படத்தில் கண்ணம்மாவை சைட் அடிக்கும் வாண்டுவாக நடித்த ராகவ் என்ற சின்னப் பையன்தான் இதில் அரவிந்த்சாமியின் மகனாக நடித்திருக்கிறார். துடுக்குத்தனமும், சமயோசித புத்தியும், மேனர்ஸ் பற்றி அப்பனுக்கே புத்தி சொல்லும் மகனாகவும் நடித்திருக்கிறார். அந்த வயதைத் தாண்டிய பேச்சுக்களும், நடத்தைகளும் இருந்தாலும் இது கதைக்குத் தேவை என்பதால் விட்டுவிடுவோம்.

இதேபோல்தான் நைனிகா. பையனைவிடவும் ஒரு படி மேலே ஸ்கோர் செய்திருக்கிறார். அம்மா, அப்பாவை சேர்த்து வைக்கலாம் என்று ஐடியா கொடுப்பதில் இருந்து அரவிந்த்சாமியை பாசத்தைக் காட்டி பிளாக்மெயில் செய்வதுவரையிலும் சமர்த்துப் பிள்ளையாய் நடித்திருக்கிறார். சில வசனங்கள் அதிகப்பிரசங்கித்தனமாக இருந்தாலும் இதுதானே இப்போதைய டிரெண்ட் என்பதால் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

வில்லனாக அஃப்தாப் சிவ்தசானியும், சித்திக்கும் வலம் வருகிறார்கள். சித்திக் ஏன் தமிழை இப்படி கடித்துக் குதறியிருக்கிறார் என்று தெரியவில்லை. அஃப்தாப்பின் வில்லன் வேடம் எதிர்பாராதது. ஆனால் அதில் ஒரு சஸ்பென்ஸை வைத்து கடைசிவரையிலும் அதனை மெயின்டெயின் செய்தது இயக்குநரின் சாமர்த்தியம்.

சூரியும், ரோபோ சங்கரும், குடிகார ரமேஷ் கண்ணாவும் அரவிந்த்சாமியின் அடியாட்களாக அவ்வப்போது கிச்சுமுச்சு காட்டியிருக்கிறார்கள். சில காட்சிகளில் வாய்விட்டும் சிரிக்க வைத்திருக்கிறார்கள். மறுப்பதற்கில்லை..!

விஜய் உலகநாத்தின் கேமிரா படம் முழுவதையுமே வண்ண மயமாக்கியிருக்கிறது. ஒரு காட்சியில்கூட ஒளியின் தரம் குறையவில்லை.  டூயட் காட்சிகளைக்கூட செம்மையான இந்த கோடைக்காலத்திற்கு ஏற்றாற்போன்ற ஒரு லொகேஷனில் படமெடுத்து கண்ணுக்கு குளிர்ச்சியைக் காட்டியிருக்கிறார்.

பாடல் காட்சிகளெல்லாம் ஓகேதான். ஆனால் பாடல்கள்தான்.. அம்ரிஷின் இசையில் தீம் மியூஸிக் மட்டுமே அடிக்கடி வந்து வந்து செல்கிறது. ஆனாலும் அது வந்தவுடன் மனதுக்குள் தானாகவே இது ஒரு காமெடி பிட்டு என்கிற உணர்வைத் தோற்றுவிக்கிறது. இது ஒன்றுக்காகவே இசையமைப்பாளருக்கு நன்றி. ஆனால் பாடல்கள் இன்னமும் நன்றாக வந்திருக்க வேண்டும்..!

சித்திக்கின் படங்கள் என்றாலே அதில் நகைச்சுவைதான் பிரதானமாக இருக்கும். அவருடைய பிரெண்ட்ஸ் படத்தின் நகைச்சுவை காட்சிகள் இன்றைக்கும் காமெடி சேனல்களில் டாப் டென்னில் இடம் பிடித்திருக்கின்றன. அப்பேர்ப்பட்ட இயக்குநரின் படம் என்று ஆவலுடன் போனால் பாதிதான் திருப்திப்படுத்தியிருக்கிறார். காமெடி போர்ஷன் நிறையவே இருந்தும் நகைச்சுவையைத்தான் காணோம்.

முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பும், வேகமும் இரண்டாம் பாதியில் பாதியாக குறைந்துவிட்டது. இன்னும் கொஞ்சம் செமத்தியான திரைக்கதையாக மாற்றியிருக்கலாம்.

ஒரு சிறந்த குடும்பக் கதையாக வந்திருக்க வேண்டிய படம் இது.. இடையில் அமைச்சர்கள், போலீஸ், வில்லன் என்று அடிதடியையும் சேர்த்துவிட்டதால் படத்தின் தன்மையும் மாறிவிட்டது.

மலையாள ரசிகர்கள் போல் தமிழர்கள் இல்லையென்பதால் முழு நீள நகைச்சுவை படம் என்றோ, குடும்பப் படம் என்றோ சொல்ல முடியாத நிலைமைக்கு ஆளாகிவிட்டனர் தமிழ் ரசிகர்கள்.

எப்படியிருந்தாலும் முதலுக்கு மோசமில்லாமல் நமது பொழுது போக்கு புத்திக்கு பங்கமில்லாமல்தான் இருக்கிறது இப்படம். ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம்..!

Our Score