full screen background image

“என் படத்தை வெளியிடவே பல பிரச்சனைகள்..” – விஷாலின் வேதனை பேச்சு..! 

“என் படத்தை வெளியிடவே பல பிரச்சனைகள்..” – விஷாலின் வேதனை பேச்சு..! 

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் சென்ற வாரம் வெளிவந்து வெற்றி பெற்றிருக்கும் திரைப்படம் ‘இரும்புத் திரை.’

விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்து அனைவரிடமும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள இத்திரைப்படத்தின் வெற்றி விழா மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, நேற்று மதியம் கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர்கள் விஷால், அர்ஜுன், இயக்குநர் மித்ரன், படத் தொகுப்பாளர் ரூபன், கலை இயக்குநர் உமேஷ், நடிகர் காளி  வெங்கட், ரோபோ சங்கர், எழுத்தாளர்கள் ஆண்டனி பாக்யராஜ், பொன்.பார்த்திபன், காஸ்டியூம் டிசைனர் சத்யா, ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

actor arjun

விழாவில் நடிகர் அர்ஜுன் பேசும்போது, “இரும்புத் திரையை பற்றி எல்லோரும் பாசிட்டிவாக எழுதியதற்கும். என்னுடைய கதாபாத்திரத்தை பற்றி நல்ல விமர்சனங்கள் கொடுத்ததற்கும் நன்றி.

நானும் விஷாலுடைய தந்தையும் நண்பர்கள். அவர்தான் விஷாலை எனக்கு அறிமுகம் செய்து என்னிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக சேர்த்துவிட்டார். விஷால் என்னிடம் இயக்கம்தான் கற்க வந்தார்.

ஆனால் ஒரு முறை வேறு ஒரு நடிகருக்கு பதிலாக விஷாலை ஒரு காட்சியில் நடிக்க சொன்னேன். விஷாலும் ட்ரையலுக்காக அதில் நடித்தார். அதை பார்த்ததும் விஷாலை நடிகராக்க வேண்டும் என்று எனக்கு அப்போதே தோன்றியது.

irumbu thirai team

அதை நான் விஷாலுடைய தந்தையை சந்திக்கும்போது கூறினேன். அவரும் விஷாலை வைத்து ‘செல்லமே’ படத்தை தயாரித்தார். படம் வெற்றி பெற்றது.

நான் சொன்னது போலவே விஷால் இன்று வெற்றிகரமான ஹீரோவாக, தயாரிப்பாளராக, நடிகர் சங்க பொது செயலாளராக மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவராக உள்ளார். இன்று அவருடைய படத்தில் நான் அவருக்கு வில்லனாக நடித்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். 

நான் ‘ஜென்டில்மேன்’ படத்தில் நடிக்கும் போது இயக்குநர் ஷங்கர் புதுமுக இயக்குநர்தான். அதே போல் திறமையான இயக்குநராக மித்ரன் வருவார்…” என்றார் அர்ஜுன்.

vishal-arjun

விழாவில் நடிகர் விஷால் பேசும்போது, “எனக்குத் தெரிந்த நண்பர்கள் சிலர் ‘கதையைக் கேளுங்க. நல்லா இருக்கு’ன்னு அவர்களின் நண்பர்கள் சிலரை என்னிடம்  அனுப்பி வைப்பார்கள். கதை பிடிக்கலேன்னா  சிபாரிசு பண்ணியவரை  ரூமுக்கு கூட்டிட்டுப்போய் அடி பின்னிருவேன். என்கி்ட்ட அப்படி ஒரு பழக்கம் இருக்கு.

படத்தின் தொகுப்பாளரான ரூபன்தான் மித்ரனை என்னிடத்தில் அனுப்பி வைத்தார். மித்ரனை பற்றிச் சொன்னபோதே நான் வேண்டாம்ன்னு நினைத்தேன். ஏனென்றால் இதற்கு முன்பே மித்ரன் என்னிடம் ஒரு சொதப்பலான கதையைச் சொல்லித் திட்டு வாங்கி ஓடியவர். இப்போது எப்படியோ என்று நினைத்துதான் கதையைக் கேட்டேன். ஆனால் பிடித்திருந்தது. அப்படியே கப்பென்று பிடித்துக் கொண்டேன்.

IMG_7699

அர்ஜூன் கதாபாத்திரத்தில் முதலில் ஆர்யாவிடம்தான் மித்ரன் பேசினார். ஆர்யா கதையைக் கேட்டுவிட்டு மூன்று நாட்கள் கழித்து என்னிடம் சொல்ல கூச்சப்பட்டு மித்ரனிடமே நடிக்கவில்லை என்று சொல்லிவிட்டான். அதற்குப் பிறகுதான் ஆர்ஜூன் பெயரை சொன்னார் மித்ரன்.

உடனேயே நான் மித்ரனிடம் சொன்னது.. நான் சொன்னதா சொல்லாத. நீயா கேக்குற மாதிரி கேளு. ஏன்னா.. அவர்தான் எனக்கு குரு. அவர் வளர்த்த பையன் நானு. இப்போ போய் நான் ஹீரோ.. அவர் வில்லன்னா எனக்கே ஒரு மாதிரியா இருக்கு. என்னைக் கேட்டாருன்னா வெளியூருக்குப் போயிட்டாருன்னு சொல்லிரு என்று சொல்லித்தான் அனுப்பி வைத்தேன்.

அர்ஜூன் ஸார் கதையைக் கேட்டுட்டு டபுள் ஓகே சொல்லியிருக்கார். கிளைமாக்ஸ் காட்சில மட்டு்ம் கொஞ்சம் அப்படி இப்படி மாத்தச் சொன்னதா மித்ரன் சொன்னார். எப்படியே அர்ஜூன் ஸார் இந்தப் படத்துல நடித்துக் கொடுத்ததே பெரிய விஷயம். அவருக்கு எனது நன்றிகள்.

இப்போது சமூகத்தில இருக்கும் தவறுகளை நாம் ஏன் சொல்லக் கூடாது..? ஆதார் கார்டுகளில் இருக்கிற கோளாறுகளைத்தான்  சொன்னோம். அதைப் போல சமூகத்துக்கு ஒவ்வாதவைகளை சொன்னதில் சிலருக்கு கோபம் வருகிறது. வந்தால் வள்ளுவர் கோட்டம் போங்க, ஆர்ப்பாட்டம் பண்ணுங்க. இல்லேன்னா, சாஸ்திரி பவனுக்குப் போயி சென்சார் ஆபிஸ் முன்னாடி ஆர்ப்பாட்டம் பண்ணுங்க. சென்சார் பண்ணிய படத்தைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. விவசாயிகளுக்கு கடன் கிடையாது. மிலிட்டரிமேன்களுக்கு விசா கிடையாது என்பதெல்லாம் என்ன நியாயம்.

இந்த படத்தில் நான் பல காட்சிகளில் மிகவும் உண்மையாக யதார்த்தமாக நடித்தேன். ஒரு காட்சியில் என்னுடன் பாங்க் ஏஜெண்டாக நடித்த சக நடிகரை அடித்தேவிட்டேன். படத்தில் என்னுடன் நாயகியாக நடித்த சமந்தாவுக்கு நன்றி. கல்யாணமானால் நடிக்கக் கூடாது என்று இருந்த ஒரு கட்டுப்பெட்டியான விஷயத்தை சமந்தா இன்றைக்கு உடைத்துவிட்டார். அது எனக்கு சந்தோஷமாக உள்ளது. 

இந்த படத்தை வெளியிட நான் மிகவும் போராடினேன். இதே கிரீன் பார்க் ஹோட்டலில் 10 மணி நேரமாக பேச்சு வார்த்தை நடந்து போராட்டமே நடத்தினேன். பணத்தின் அருமை அப்போதுதான் எனக்கு தெரிந்தது.

என்னுடைய நண்பன் வெங்கட் தன்னுடைய காரை விற்று எனக்கு பணம் கொடுத்தார். இன்னொரு நண்பன் வீட்டுப் பத்திரத்தை விற்று பணம் கொடுத்தார். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சரியான சமயத்தில் பெரிய உதவியைச் செய்தார். அவர் இல்லையென்றால் இந்தப் படம் நிச்சயமாக இப்போது வெளியாகியிருக்காது என்பது உண்மை. அவருக்கு எனது மிகப் பெரிய நன்றி.

ஏன் என்னுடைய படத்தை வெளிவராமல் தடுத்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இதுவரை எனக்கு இது போல் நடந்தது இல்லை. தயாரிப்பாளர்  சங்க தலைவரான என்னுடைய படத்தையே இவர்கள் வெளிவராமல் தடுக்கிறார்கள் என்றால் இது யோசிக்க வேண்டிய ஒன்றுதான்.

ஒரு தயாரிப்பாளர் சங்க தலைவரின் படத்தையே தடுத்துவிட்டோம் என்று காட்ட முயற்சி செய்துள்ளார்கள் என்று நினைக்கிறேன். இனி இதுபோல் வேறு எந்தத் தயாரிப்பாளருக்கும் நடக்க விடாமல் நான் பார்த்துக் கொள்வேன்…” என்றார் உறுதியான குரலில்.

கடைசியாக நடைபெற்ற கேள்வி-பதில் சீசனில் “நடிகர் சங்கக் கட்டிட வேலைகள் எப்போது முடியும்..?” என்று கேட்டதற்கு “இப்போது முதல் தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எப்படியும் ஜனவரியில் பில்டிங் தயாராகிவிடும்…” என்றார்.

“அப்போ ஜனவரில கல்யாணம்தானே…?” என்று கேட்டதற்கு சிரிப்பையே பதிலாகத் தந்தார். “பொண்ணு பார்த்தாச்சா…?” என்ற அடுத்தக் கேள்விக்கு “அதான் தினமும் பார்த்திக்கிட்டிருக்கோமே..” என்றார் அதே சிரிப்புடன். “கல்யாணம் நல்லபடியா நடந்திருமா…?” என்ற கேள்விக்கு அர்ஜூனை காட்டி “இதோ இவரைத்தான் நம்பியிருக்கேன்…” என்றார் விஷால்.

எப்படியோ பில்டிங்கும் கட்டி. கல்யாணமும் கட்டி நல்லாயிருந்தால் சரிதான்..!

Our Score