full screen background image

“எனக்கு ‘தண்ணி வண்டி’ன்னு பேர் வைச்சிருக்கான் வைரமுத்து..” – போட்டுத் தாக்கிய பாரதிராஜா..!

“எனக்கு ‘தண்ணி வண்டி’ன்னு பேர் வைச்சிருக்கான் வைரமுத்து..” – போட்டுத் தாக்கிய பாரதிராஜா..!

மூவராக இருந்து இருவராகி பின் இப்போது கடைசியில் அந்த மூவரையும் தனித்தனியாக பிரித்தேவிட்டது காலம்..

ஈகோ என்பது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கின்ற விஷம்தான்.. அதன் கொடுக்கை மனதின் மூலம் வெட்டிவிட்டால்தான் மனிதர்கள் சக மனிதர்களுக்குள் இனிமையாகப் பழக முடியும்.. இல்லையேல் அத்தனை பேரும் தனிமைப்பட்டுத்தான் போவார்கள்..

ஏற்கெனவே இளையராஜாவிடம் இருந்து பிரிந்து தனித்திருந்த பாரதிராஜா, இப்போது வைரமுத்துவிடமும் மனத்துயர் பட்டு போகும் அளவுக்கு கோவையில் நடந்த கவிஞர் திருவிழாவில் அவர் பேசிய பேச்சின் சில பகுதிகள் இங்கே :

“ஒரு விஷயத்தை பகிரங்கமாக சொல்லி விட்டு பேசுகிறேன். ஒலி பெருக்கி முன்னால் பேசும்போது, நிறைய பொய் பேசி இருக்கிறேன். எவ்வளவு அதிகமாக பொய் பேசி இருக்கிறோமோ, அவ்வளவு அதிகம் கை தட்டல் கிடைத்திருக்கிறது. வெளிப்படையாக பேசினால் நான் விமர்சிக்கப்படுவேன். அதனால் சமீபகாலமாக நான் எந்த நிகழ்ச்சியிலும் பேசுவதில்லை என முடிவெடுத்திருக்கிறேன். ஆனால் இந்த நிகழ்ச்சியை நான் நிராகரிக்க முடியவில்லை.

இந்த மேடையில் நான் பயப்படாமல் ஒருவனை நான் விமர்சிக்க முடியும் என்றால் அது வைரமுத்துவைத்தான். என்னதான் மிகப் பெரிய இலக்கியவாதியாக இருந்தாலும், சிறந்த எழுத்தாளனாக இருந்தாலும் ஊடகத்தின் மூலமாகத்தான் அவன் வெளிப்பட முடியும்.

வைரமுத்து அறிவுசார் கவிஞன். கரடு முரடான பிரதேசத்தில் இருந்து வந்த கற்பக விருட்சம். வைரமுத்து என்ற மகா கவிஞன், திரைத்துறைக்கு வராமல் இருந்திருந்தால், அவரது  இலக்கியங்கள் அடையாளம் காணப்படாமல் போய் இருக்கும்.  ‘என்னை தங்க கூண்டில் அடைத்து விட்டார்கள்’ என்கிறார் வைரமுத்து. தங்கக் கூண்டில் உன்னை வைத்ததால்தான் எல்லோரும் உன்னை வேடிக்கை பார்த்தார்கள்.

சினிமாவுக்கு நான் தலை வணங்குகிறேன். ஏனென்றால் என் மக்களை.. என் மொழியை.. என் பண்பாட்டை.. வெளிக்கொண்டு வந்தது திரைப்பட ஊடகத் துறைதான்.. வைரமுத்துவை நான்தான் அறிமுகப்படுத்தினேன் என்றாலும் அவருடைய திறமையினால்தான் உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளார்.

அவரை நான்தான் அறிமுகம் செய்தேன் என்று கூறுவது எனக்கு பெருமையாக உள்ளது. அவர் உலக இலக்கியங்களைப் படித்தவர். எந்த பின்புலமும் இல்லாமல் முன்னுக்கு வந்தவர். சுயம்புவாக உன்னை நீயே வளர்த்துக் கொண்டாய் அதுதான் உன் தகுதி. விதைத்தவன் யார் என்பது முக்கியமல்ல. விதை வீரீயமாக இருக்கிறதா, நிலம் பண்பட்டிருக்கிறதா என்பதுதான் முக்கியம். இந்த விதை வீரியமுள்ள விதை என்பதால்தான், விருட்சமாக நிற்கிறது.

வைரமுத்து என்னை சந்தித்த நாட்கள் இருக்கிறதே.. அப்போதெல்லாம் பெரிய திமிர் அவனுக்கு. என்னிடம் வாய்ப்பு கேட்டு வந்தவன், அவனுடைய ‘வைகறை மேகங்கள்’ என்கிற கவிதை புத்தகத்தை கொடுத்து, ‘என்னை பயன்படுத்த முடிந்தால், பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்றான் கர்வத்துடன்.  என்ன சான்ஸ் கேட்க வந்தவன் இப்படி பேசுகிறானே என்றுகூட  நான் நினைத்தேன்.

அவன் கொடுத்துவிட்டுச் சென்ற அந்தப் புத்தகத்தை நான் ஏதோ ஒரு பட ஷூட்டிங்கிற்காக வெளிநாட்டிற்கு விமானத்தில் போகும்போதுதான் படித்தேன். ஆனால் அவன் கவிதையைப் படித்தபோது என் எண்ணங்களும் மேலே பறந்தன.

‘உன் புத்தகத்தை விமானத்தில் படித்தேன்’ என்றபோது, ‘உயர்ந்த விஷயத்தை உயர்ந்த இடத்தில் இருந்துதான் படிக்க முடியும்’ என்றான்.  எனக்கு அவன் ‘தண்ணி வண்டி’னு பேர் வைச்சிருக்கான். தண்ணி வண்டி தடுமாறாது. அதே மாதிரி எந்த இடத்திலும் நான் தடுமாறுவதில்லையே…? கவிஞர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.  எனக்கும், அவனுக்கும் கருத்தில் நிறைய வேறுபாடு இருக்கிறது. ஆனால் அது கருத்தில் மட்டும்தான்.

அவன் கெட்டிக்காரன். எழுத்தில் எவ்வளவு வலிமையாக செயல்படுகிறானோ. அதே போல் செயலிலும் வலிமையாகச் செயல்படுகிறான். அற்புதமான மூலிகை, மனிதனை தேடிப் போவதில்லை. மூலிகையை தேடித்தான் மனிதர்கள் போவார்கள். நீங்கள் வைரமுத்துவை தேடி வந்திருக்கிறீர்கள். அவர் விஞ்ஞானப்பூர்வமாக சிந்திக்கும் கவிஞர். அவர் இந்த மண்ணுக்கு கிடைத்த பொக்கிஷம். வைரம் பெரும்பாலும் பணக்காரர்களைத்தான் சேரும். ஆனால் எங்கள் வைரம் ஏழ்மையையும் சேரும்.. பணக்காரர்களையும் சேரும்…” என்றார் பாரதிராஜா.

இதில் சில இடங்களில் மிக உரிமையுடன் வைரமுத்துவை ‘அவன்’, ‘இவன்’ என்றும், பல இடங்களில் ‘அவர்’, ‘இவர்’ என்றும் பேசியிருக்கிறார் பாரதிராஜா..

இதுதான் வைரமுத்துவுக்கு பிடிக்கவில்லையாம்..! பேசாமல் இனிமேல் அனைவருமே ‘மிஸ்டர் வைரமுத்து’ன்னு கூப்பிட்டிருவோம்..! ரொம்ப சந்தோஷப்படுவாருல்ல..!

Our Score