full screen background image

ஜோதி – சினிமா விமர்சனம்

ஜோதி – சினிமா விமர்சனம்

SPR Productions நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.பி.ராஜா சேதுபதி இந்தப் படத்தைத் தயாரித்து ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இவர் ‘சதுரங்க வேட்டை’ படத்தின் படத் தொகுப்பாளரும்கூட..!

இந்தப் படத்தில் வெற்றி, ஷீலா ராஜ்குமார், கிரிஷா குரூப், இளங்கோ குமரவேல், மைம்’ கோபி, நான் சரவணன், சாய் பிரியங்கா ருத், ராஜா சேதுபதி, பூஜிதா தேவராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – A.V.கிருஷ்ண பரமாத்மா, ஒளிப்பதிவு – செசி ஜெயா, இசை – ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், படத் தொகுப்பு – சத்யமூர்த்தி, பாடல்கள் – கார்த்திக் நேத்தா, பாடகர்கள் – கே.ஜே.ஜேசுதாஸ், பல்ராம், கார்த்திக், ஆர்த்தி கோவிந்த், நடனப் பயிற்சி இயக்கம் – சுவிகுமார், சண்டை பயிற்சி இயக்கம் – சக்தி சரவணன், பத்திரிகை தொடர்பு – வின்சன் சி.எம்., தயாரிப்பு – S.P.ராஜா சேதுபதி.

சில ஆண்டுகளுக்கு முன்பாக கடலூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற குழந்தை கடத்தல் பற்றிய ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நாள் தோறும் 173 குழந்தைகளும், வருடத்திற்கு 40,000 குழந்தைகள் காணாமல் போகின்றன. இதில் 11,000 குழந்தைகள் கண்டு பிடிக்க முடியாமலேயே போகிறது என்கிறது காவல் துறையினர் கொடுக்கும் புள்ளி விவரம்.

சிறு வயது குழந்தைகள், கொஞ்சம் வளர்ந்த குழந்தைகள், பருவ வயதை எட்டிய சிறுமிகள் என்று பலவகையிலும் இந்தக் கடத்தல்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் பிறந்த சில மணி நேரங்களில் மருத்துவமனையிலேயே குழந்தைகள் கடத்திச் செல்லப்படுவது சமீபமாக அதிகரித்து வருகிறது. குழந்தையில்லாதவர்களுக்குக் கொடுப்பதற்காக என்று சொல்லி திருடப்படும் இந்தக் குழந்தை கடத்தலின் ஒரு பக்கத்தைத்தான் இந்தப் படத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

படத்தின் தயாரிப்பாளரான ராஜா சேதுபதி தனது சொந்தக் கிராமத்தில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவத்தை மையப்படுத்தி, பின்பு நடந்த தீவிர தேடுதல் வேட்டையில் இரண்டு மணி நேரத்தில் காணாமல் போன பச்சிளம் குழந்தையை மீட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரின்  சாமர்த்தியத்தை வைத்து… அதில் சினிமாவுக்காக சில கற்பனை நிகழ்வுகளைக் கலந்து திரைக்கதை அமைத்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியான ஜோதிக்கு பிரசவத்திற்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில், ஒரு நள்ளிரவில் வீட்டில் யாரும் இல்லாத சூழலில் அவருடைய வயிற்றை கிழித்து குழந்தை கடத்தப்படுகிறது. குழந்தையை கடத்தியது யார்?  எதற்காக கடத்தினார்கள்? போன்ற கேள்விகளின் விசாரணையில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிப்படுவதுதான் இந்த ‘ஜோதி’ படத்தின் கதை.

நகரில் பெரிய மருத்துவமனையை நடத்தி வரும் புகழ் பெற்ற மருத்துவர் சரவணன். இவருடைய மனைவியான ஜோதி‘ என்ற ஷீலா ராஜ்குமார் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

இவரது எதிர் வீட்டில் குடியிருப்பவர் சப் இன்ஸ்பெக்டரான வெற்றியும் அவரது மனைவியான கிருஷா குரூப்பும். இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இந்த வருத்தத்தில் தம்பதிகள் இருவரும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஜோதியின் பிரசவத்திற்கு நான்கு நாட்கள் முன்னதாக தூத்துக்குடிக்கு ஒரு அவசர ஆபரேஷன் செய்வதற்காக சென்றுவிட்டார் சரவணன். அன்றைய நள்ளிரவில் ஷீலாவின் அலறல் சத்தம் கேட்டு எதிர் வீட்டில் குடியிருக்கும் கிருஷா ஓடி வந்து பார்க்க அங்கே வயிறு கிழிக்கப்பட்டு குழந்தை மாயமான நிலையில் மயக்க நிலையில் ஷீலா இருக்கிறார்.

குரூப் தனது கணவரான சப்-இன்ஸ்பெக்டர் வெற்றியை அழைத்து விஷயத்தை சொல்ல அவரும் ஓடி வந்து பார்க்கிறார். இருவரும் சேர்ந்து ஷீலாவை அவசரமாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று ஷீலாவின் உயிரைக் காப்பாற்றுகிறார்கள்.

சப் இன்ஸ்பெக்டரான வெற்றி, போலீஸ் ஏட்டுவான இளங்கோ குமரவேலுடன் இணைந்து குழந்தையைத் தேடி அலைகிறார். போலீஸ் விசாரணையில் ஷீலாவை சுற்றியிருக்கும் அனைவரையுமே சந்தர்ப்ப சூழல் சந்தேகிக்கப்பட வைக்கிறது.

இறுதியில் கடத்தப்பட்ட குழந்தையை கண்டுபிடித்தார்களா..? எதற்காக இந்த கடத்தல் நடந்தது..? இதன் உண்மையான பின்னணி என்ன..? என்பதுதான் இந்த சஸ்பென்ஸ்-திரில்லர் படத்தின் திரைக்கதை.

சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் வெற்றி கதையின் நாயகனாக தனது முந்தைய படங்களில் நடித்ததைப் போலவேதான் இதிலும் நடித்திருக்கிறார். அந்த போலீஸூக்கே உரிய கம்பீரம் அவரிடத்தில் இல்லாதது குறைதான்.

சில இடங்களில் அவரது நடிப்பு அவ்வளவுதான் என்பதைப் போல பாதியிலேயே நிற்கிறது. வழக்கு விசாரணையின்போது அவரது இயல்பான உடல் மொழியிலான  நடிப்பு சில இடங்களில் சரியாக இருந்தாலும், பல இடங்களில் நம்மால் ரசிக்க முடியாமல் இருக்கிறது.

படத்தின் நாயகியாக ஜோதி’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஷீலா ராஜ்குமார்தான் படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறார்.

அனாதையான தன்னை தத்தெடுத்து வளர்த்த தந்தையின் பாசத்தை நினைத்துப் பார்க்கும் காட்சியில் நம்மையும் நினைக்க வைத்திருக்கிறார். இதே பாசத்தை தனது தங்கையிடம் அவர் காட்டும்விதமும் ஒரு நல்ல அக்காவாக அவரைக் காண்பித்திருக்கிறது.

தொலைக்காட்சி செய்திகளில் வரும் குழந்தை கடத்தல் சம்பவங்களைக் கேட்டு கோபப்பட்டு, விசனப்பட்டு அந்தக் கோபத்தை நடனம் ஆடி கழித்துக் கொள்ளும் அந்த நடிப்பு பாராட்டுக்குரியது.

தன் கணவருக்கு ஆதரவாக குரூப்புடன் போனில் பேசும் காட்சியிலும் தன் தங்கையிடம் சமாதானம் பேசும் காட்சியிலும் ஒரு பக்குவப்பட்ட நடிப்பைக் காண்பித்திருக்கிறார் ஷீலா.

கிளைமாக்ஸ் காட்சியிலும் ஷீலா காட்டியிருக்கும் நடிப்பு அருமை. தான் செய்த பெருந்தவறை அவர் நியாயப்படுத்தி பேசி நடிக்கும் அந்த மிகை நடிப்பே, அந்தத் தவறை மறக்கடிக்கிறது.

ஜோதி’யின் கணவராக ராட்சசன்’ சரவணன் நடித்திருக்கிறார். சிறிய கதாப்பாத்திரம் என்றாலும் ஜோதி கதாப்பாத்திரத்திற்கு இணையாக பலம் வாய்ந்த வேடமாக இருக்கிறது. மனைவிக்கு ஏற்பட்ட துயரத்தைக் கேள்விப்பட்டவுடன் ஒரு கணவன் எப்படி துடித்திருக்க வேண்டும்..? எப்படியோ மிஸ் ஆகிவிட்டது அந்த நடிப்பு..!

போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் இளங்கோ குமரவேல் மிக நீண்ட வருட கால அனுபவம் கொண்ட போலீஸ் ஏட்டுவாக தன் நடிப்பை அழுத்தமாகக் காண்பித்திருக்கிறார். தைரியமாக வெற்றியிடமே அவர் மனைவி மீதான சந்தேகத்தைச் சொல்வதும், சரவணனின் காதலியான டாக்டர் காமினியிடம் விசாரணையின்போது இவர் பேசும் பேச்சும் கச்சிதமாக அமந்திருக்கிறது. இவர் கொடுக்கும் யோசனைகள் மூலமாகவே விசாரணை சூடு பிடிப்பதை போல திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு.

படத்தின் தயாரிப்பாளர் ராஜா சேதுபதியும் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளில் இவரது நடிப்பு நம்மையும் கவனிக்க வைத்து, படத்திற்கும் பலன் சேர்த்திருக்கிறது.

கிரிஷா குரூப் இன்னொரு பக்கம் தன் மீதான சந்தேகத்தை வளர்த்துக் கொண்டே போவது போன்ற திரைக்கதைக்குப் பொருத்தமாக தனது நடிப்பைக் கொடுத்திருக்கிறார். குழந்தை பற்றிய எமோஷனல் காட்சிகளில் இவரது நடிப்பும் நம்மை திரையைவிட்டு அகலவிடாமல் செய்கிறது. மைம்’ கோபி பாசமிக்க அப்பாவாக சில காட்சிகளே என்றாலும் மனதில் நிற்கிறார். மேலும் டாக்டர் காமினியும், தங்கை கதாபாத்திரமும்கூட சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் செசி ஜெயாவின் ஒளிப்பதிவில் குறைவில்லை. துவக்கக் காட்சிகள் இரவு நேரமாக இருக்க அவற்றையே கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறார். வீட்டின் உட்புற காட்சிகளை படமாக்கியவிதம் சிம்ப்ளி சூப்பர். பல்வேறு லொகேஷன்களில் படமாக்கியிருந்தாலும் அனைத்திலும் ஒளியமைப்பை ஒன்று போலவே வைத்திருக்கிறார். ஆனாலும் அடிக்கடி ஏரியல் ஷாட்டுகளை ஏன் வைத்தார் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது..!

இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வரின் பாடல் இசையைவிடவும், பின்னணி இசையை திரில்லர்-சஸ்பென்ஸ் படத்திற்குப் பொருத்தமாகவே அமைத்திருக்கிறார்.

படத் தொகுப்பாளர் சத்யமூர்த்தியின் படத் தொகுப்பும் மிக நேர்த்தி. வீட்டுக்குள் கொலை நடந்த சமயத்தில் நடந்தவைகளை குழப்பமே இல்லாமல் தெளிவாக நறுக்கிக் கொடுத்திருக்கிறார். நான் லீனியராக இந்தக் காட்சி திரும்பத் திரும்ப வருவதால் இந்தக் காட்சிதான் படத்திற்கு உயிராக இருந்தது. அதைக் கச்சிதமாக செய்து கொடுத்திருக்கிறார் படத் தொகுப்பாளர்.

குழந்தை கடத்தல் சம்பவங்கள் நாட்டில் பல ஊர்களில் நடந்தாலும் அது ஏன்.. எதற்கு..  எப்படி.. என்பதெல்லாம் மக்களுக்குத் தெரியாமலும், புரியாமலும் இருந்தது. அந்தப் புரியாததை, தெரியாததை இப்படத்தின் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார் படத்தை  எழுதி இயக்கியிருக்கும் இயக்குநரான ஏ.வி.கிருஷ்ண பரமாத்மா.

இந்தக் கடத்தலில் மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் மிகப் பெரிய பங்கு இருப்பதையும் இந்தப் படத்தில் மிக தைரியமாகவும், அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

குழந்தை கடத்தல் பயங்கரத்தின் பின்னணியை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நோக்கத்தில் உருவாகியிருக்கும்  இப்படம், திரைப்பட ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் சுவாரஸ்யமான திரைக்கதையோடும், விறுவிறுப்பான காட்சிகளோடும் முழுமையான சஸ்பென்ஸ், த்ரில்லர் திரைப்படமாகவும் பயணித்திருப்பது படத்தின் கூடுதல் பலம் என்றே சொல்லலாம்.

குழந்தை கடத்தலை மையப்படுத்திய கதை என்றாலும் அதை படத்தின் ஆரம்பம் முதல் முடிவுவரை சுவாரஸ்யம் குறையாமல் காட்சிகளை வைத்து நகர்த்தியிருப்பதால் படத்தை முழுமையாக ரசிக்க முடிந்திருக்கிறது.

இந்த ‘ஜோதி’ பிரகாசமாக எரியும். எரிய வேண்டும்..!

RATINGS : 3.5 / 5

Our Score