BK என்று மீடியா உலகத்தினரால் அன்புடன் அழைக்கப்பட்ட திரு.பால கைலாசம், பெருமதிப்பிற்குரிய தொலைக்காட்சித் துறை அறிஞர் மற்றும் ஆவணப் பட செயல்பாட்டாளர். அவர் ஒரு தீர்க்கதரிசி. வெகுஜன ஊடகத் துறையின் வளர்ச்சி, சமுதாயத்தில் அவற்றின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து செயல்பட்டவர்.
சமூக நலன், சுற்றுப்புற சூழலின் மேம்பாடு, மற்றும் மானுட சமூகத்தின் உயர்வு ஆகியவற்றிற்காக ஊடகத்தைப் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்கிற அவரது கனவு, அவரது தந்தை திரு பாலச்சந்தர் அவர்களின் மறைவுக்கு முன்பேயே 2014 ஆகஸ்ட் 15-ல் நிகழந்த அவரது அகால மரணத்தால் நிறைவேறாமல் போய்விட்டது.
சினிமா ராண்டேவு(Cinema Rendezvous) என்ற பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை. கலை, கலாச்சாரம், சார்ந்த தளங்களில் கலைஞர்களுக்கிடையே சமூக உரையாடலை முன்னெடுத்துச் செல்லும் நிகழ்வுகளை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.
திரு பால கைலாசம் அவர்களின் தொலை நோக்குப் பார்வை மற்றும் கனவு ஆகியவற்றை கொண்டாடும் வகையில் சமூக முன்னேற்றத்திற்காக புதுமையான முறையில் ஊடகத்தை பயன்படுத்தியவருக்காக பால கைலாசம் நினைவு விருது The Bala Kailasam Memorial Award (BKMA), சினிமா ராண்டேவு அறக்கட்டளையால் (Cinema Rendezvous Trust) நிறுவப்பட்டுள்ளது. இந்த விருது தகுதியுரையுடன் கூடிய சான்றிதழ் மற்றும் ரூபாய் 50,000 பணமுடிப்பு கொண்டது.
பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வம், திரைப்பட இயக்குநர் எல்.நாகராஜன், ஆவணப்பட செயற்பாட்டாளர் ஆர்.வி.ரமணி, பிரஸ் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் சஷி நாயர், ஏசியன் இதழியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பிந்து பாஸ்கர் ஆகியோர்கள் அடங்கி தேர்வு கமிட்டி இந்தாண்டுக்கான விருதுக்குரியவரை தேர்ந்தெடுத்தது.
2015-ம் ஆண்டுக்கான பால கைலாசம் நினைவு முதல் விருதை பெறுவதற்காக திரு.ஹோபம் பபன் குமார், என்கிற மணிப்பூர் மாநில ஆவணப் பட இயக்குநர் தனது ‘ஃபம் ஷாங்’ (தத்தளிக்கும் வாழ்க்கை) என்ற ஆவணப் படத்திற்காக தேர்வு செய்யப்பட்டார்.
விருது வழங்கும் நிகழ்ச்சி சவேரா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மறைந்த பால கைலாசத்தின் மனைவி கீதா கைலாசம், அவரது மகன் விஷ்ணுபாலா கைலாசம், மறைந்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மனைவி ராஜம் பாலசந்தர், பால கைலாசத்தின் சகோதரியும், திரைப்பட தயாரிப்பாளருமான திருமதி புஷ்பா கந்தசாமி ஆகியோரும் எண்ணற்ற பிரபலங்களும், பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டனர்.
முதலில் சினிமா ராண்டேவு அறக்கட்டளையின் நிறுவனரான திருமதி ஷைலஜா ஷெட்லூர் வரவேற்று பேசினார். பின்பு பால கைலாசம் பற்றியும், அவரது சாதனைகள் பற்றியும் கைலாசத்தின் அந்தியந்த நண்பரான ‘மர்ம தேசம்’ இயக்குநர் நாகா விரிவாகப் பேசினார். பால கைலாசத்தின் மனைவி கீதா கைலாசம், கைலாசம் குடும்பத்தின் சார்பில் ஏற்புரை வழங்கினார்.
சவேரா ஹோட்டலின் நிர்வாக இயக்குநர் திருமதி நீனா ரெட்டி முன்னிலையில் நடிகை சுஹாசினி மணிரத்னம் இந்த விருதினை வெற்றி பெற்ற இயக்குநர் ஹோபம் பபன் குமார் சார்பில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த அ்ந்த ஆவணப் படத்தின் ஒலி வடிவமைப்பாளர் சுகந்தோ மஜூம்தாரிடம் வழங்கினார்.
இந்த விருதினைப் பெற்ற வகையில் தங்களது படக் குழு மிகவும் பெருமைப்படுவதாக தனது ஏற்புரையில் குறிப்பிட்டார் சுகந்தோ மஜூம்தார்.
நடிகை சுஹாசினி மணிரத்னம் பேசும்போது கே.பி. குடும்பத்திற்கும் தனக்குமான உறவு.. மின் பிம்பங்களின் வளர்ச்சி பற்றிய தனது ஆச்சரியம் கலந்த பெருமிதம்.. சினிமா ராண்டேவூ அறக்கட்டளையின் தொடர்ச்சியான செயல்பாடுகள் பற்றிய தனது மகிழ்ச்சி என்று அனைத்தையும் பகிர்ந்து கொண்டார்.
முடிவில் ஃபம் ஷாங் (தத்தளிக்கும் வாழ்கை) என்ற 52 நிமிட ஆவணப் படம் திரையிடப்பட்டது.
திரையிடல் முடிந்த பிறகு பார்வையாளர்களின் கேள்விக்கு இயக்குநர் ஹோபம் பபன் குமாரின் சார்பில் சுகந்தோ மஜூம்தார் பதிலளித்தார்.