இன்றைய குழப்படி செய்தியாக வெளியாகியிருக்கிறது கருணாஸின் ஒரு அறிக்கை.
டிவிட்டரில் தன்னுடைய அக்கவுண்ட்டில் இருந்து தல அஜீத் பற்றி அவதூறான செய்திகள் வெளியானதாகவும், அவற்றை தான் எழுதவில்லை என்றும்.. இது பற்றி போலீஸில் புகார் கொடுக்கப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார் நடிகர் சங்கத்தின் புதிய துணைத் தவர்களில் ஒருவரான நடிகர் கருணாஸ்.
கருணாஸின் அந்த அக்கவுண்ட்டில் தல அஜீத் பற்றி என்ன எழுதப்பட்டிருந்த்து என்பது பற்றி யாருக்கும் தெரியவில்லை.
அது கருணாஸின் அக்கவுண்ட்டுதான் என்று கருணாஸே ஒத்துக் கொண்டுள்ளார். பின்பு எப்படி அவரை மீறியும் ஒருவர் அந்த அக்கவுண்ட்டை கையாள முடியும் என்று தெரியவில்லை.
இப்போதும் அந்த அக்கவுண்ட் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் அனுமதி பெற்று படிக்கும், பழகும்வரையில் செட்டிங்க்ஸில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கருணாஸ் சற்று நேரத்திற்கு முன்பாக வெளியிட்ட செய்தி இது :
“என்னுடைய ட்விட்டர் கணக்கில் நடிகர் அஜித்தை பற்றி நான் அவதூறாக செய்திகளை கூறியதாக இன்று செய்தி வெளிவந்திருக்கிறது. இது முற்றிலும் தவறான செய்தியாகும்.
யாரோ விஷமிகள் என்னுடைய ட்விட்டர் கணக்கில் இப்படி ஒரு தவறான, முறையற்ற செய்தியை வெளியிட்டுள்ளனர்.
ஆரம்ப காலகட்டம் முதல் இன்றுவரை நான் அனைத்து நடிகர் நடிகைகளுடன் நட்பாக பழகி வந்துகொண்டிருக்கிறேன்.
யார் மீதும் எனக்கு தனிப்பட்ட முறையில் விரோதமோ காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. இந்நிலையில் இப்படி ஒரு செய்தி வந்த்தை அறியும் போது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இது பற்றி நாளை போலீஸ் கமிஷ்னரிடம் முறையாக புகார் அளிக்கவுள்ளேன்.
என்னை பற்றிய தவறான செய்திகளை கேள்விபடும்போது அந்த செய்தியை பிரசுரிக்கும் முன் எனக்கு தெரியபடுத்துமாறு உங்களை அன்புடன் கேட்டு கொள்கிறேன்.”
இவ்வாறு சொல்லியிருக்கிறார் நடிகர் கருணாஸ்.
இவ்வளவு பிரச்சினைகளுக்குப் பின்பும் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரான நடிகர் விஷால் வந்து, “நடிகர் கருணாஸிற்கு டிவிட்டரில் அக்கவுண்ட்டே கிடையாது” என்று சொல்லியிருக்கிறார். ஆனால் கருணாஸோ தன்னுடைய அக்கவுண்ட்டை யாரோ தவறாகப் பயன்படுத்தவிட்டார்கள் என்கிறார்.
குழப்பமா இருக்கு சாமிகளோவ்..!
பாஸ்வேர்டுகளை பத்திரமா ஒளிச்சு வைச்சுக்கணும்னு இதுக்குத்தான் படிச்சுப் படிச்சு சொல்றோமாக்கும்..!