full screen background image

‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் கவுண்டமணி இடம் பிடித்த கதை..!

‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் கவுண்டமணி இடம் பிடித்த கதை..!

எந்தக் காரியத்தையும் துவக்கும் முன் இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொண்டு துவக்குவது பக்திமான்களின் வழக்கம்.. இயக்குநர் பாக்யராஜும் அப்படித்தானாம்..!

ஒரு நாள் சினிமாவில் சேர வேண்டும் என்ற விருப்பத்தினால் விடியற்காலை ஐந்தரை மணிக்கு வீட்டில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கோவையில் இருந்து சென்னைக்கு கிளம்பியபோது முதலில் மேட்டுப்பாளையம் அருகில் இருக்கும் நெல்லிக்குகை என்ற இடத்திற்கு்ததான் போனாராம் பாக்யராஜ். அங்கேயிருக்கும் ஆதிபராசக்தி கோவிலுக்குச் சென்று பராசக்தியை வேண்டிக் கொண்டுதான் சென்னைக்கு படையெடுத்தாராம்..!

இயக்குநர் பாரதிராஜா தனது முதல் படமான ‘பதினாறு வயதினிலே’ படத்தின் முதல் ஷாட்டை மைசூர் அருகே ஒரு அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டுத்தான் படப்பிடிப்பை துவக்கினாராம்.. இதேபோல் பாக்யராஜும் தனது முதல் படத்தை ஒரு அம்மன் கோவிலில்தான் துவக்கினாராம்..

இதையெல்லாம் இன்று மாலை நடந்த ‘மீண்டும் அம்மன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாக்யராஜே சொன்னதுதான்.. கூடவே கவுண்டமணி பற்றி அவர் சொன்ன ஒரு விஷயமும் அம்மன் அருள் பற்றியதுதான்.

Bhagyaraj

“அப்போ நான், கவுண்டமணியெல்லாம் எல்டாம்ஸ் ரோட்ல இருந்த ஒரு ரூம்ல ஒண்ணா இருந்த நேரம். எங்க டைரக்டர் பாரதிராஜா ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தைத் துவக்கினாரு. அதுல ஹீரோயின் ராதிகாவோட அக்கா காந்திமதியோட புருஷன் கேரக்டருக்கு கவுண்டமணிதான் பொருத்தமா இருப்பாருன்னு எனக்குத் தோணுச்சு. அதை டைரக்டர்கிட்ட சொன்னேன். அவர் ‘வேண்டாம்’ன்னுட்டாரு.. கூட இருந்த பாலமுருகனும் சொன்னார். ‘முடியாது’ன்னுட்டாரு. விநியோகஸ்தர் ராஜ்கிரண்கிட்ட சொன்னேன்.. ‘நீங்களாச்சும் டைரக்டர்கிட்ட சொல்லுங்க ஸார்’ன்னு சொன்னேன். ராஜ்கிரணும் டைரக்டர்கிட்ட சொன்னாரு. அதுக்கும் மசியல அவர்..

கவுண்டமணியை வேண்டாம்ன்னு சொல்லிட்டு நிறைய பேரை கூப்பிட்டு டெஸ்ட்டெல்லாம் எடுத்துப் பார்த்துக்கிட்டிருக்கோம். ஒண்ணும் சரியா அமையலை. அப்பவும் நான் சொன்னேன். ‘இந்த கேரக்டருக்கு கவுண்டமணிதான் சூட்டா இருக்கும் கொஞ்சம் யோசிங்க ஸார்’ன்னேன்.. ‘அட போய்யா.. அந்தாளுக்கு தலைல முடியே இல்லை.. ஆளும் நல்லாயில்லை’ன்னுட்டாரு..

நானும் பாலமுருகனும் விடலை.. “அதுக்குத்தான் விக்கெல்லாம் இருக்குல்ல.. அப்புறமென்ன ஸார்.?ன்னேன். ‘ஏன் நீயே நடியேன்’னாரு.. எனக்கு அப்படியே ஷாக்காயிருச்சு..! ‘எப்படி..? காந்திமதிக்கு நான் ஜோடியாவா..? என்ன ஸார் தமாஷ் பண்றீங்க.. நல்லாவா இருக்கும்.. அதெல்லாம் வேண்டாம் ஸார்.. கவுண்டமணிதான் கரெக்ட் சாய்ஸ்’ன்னு சொன்னேன்.. டைரக்டர் இப்பவும் மசியலை.. கடைசியா ‘கவுண்டமணியை வைச்சு ஒரு டெஸ்ட் ஷூட் எடுத்துப் பார்ப்போம். சரியா வந்தா ஓகே.. இல்லைேன்னா நீங்க சொல்ற மாதிரி வேற ஆளை வைச்சுக்குவோம்’ன்னு சொன்னேன்.. அரை மனசா ஒத்துக்கி்ட்டாரு டைரக்டர்.

அவர்கிட்ட சொன்ன மாதிரியே கவுண்டமணியை கூப்பிட்டு அவர் தலைக்கு தோதா விக்கெல்லாம் வரவழைச்சு மேக்கப் போட்டு.. வசனத்தைச் சொல்லிக் கொடுத்து ஒரு டெஸ்ட் ஷூட் எடுத்தோம். அதை பிரிவியூ தியேட்டர்ல போட்டுப் பார்த்தோம். ராத்திரி 11 மணிக்கு.

goundamani

கவுண்டமணி பேசுற டயலாக்கைக் கேட்டு நானும், பாலமுருகனும் விழுந்து விழுந்து சிரிக்கிறோம்.. டைரக்டர் மட்டும் சிரிக்காம, எங்களை பார்த்து திட்டுறாரு.. ‘நல்லா பிளான் பண்ணி செஞ்சிருக்கீங்கடா.. நீங்களா சிரிச்சுக்குறதா…?’ன்னாரு.. ‘ஸார்.. முன்னாடி உக்காந்திருக்கிறவங்களை பாருங்க.. எப்படி சிரிக்கிறாங்கன்னு பாருங்க.. அதுதான் ஸார் முக்கியம்’ன்னேன்.. ‘சரி.. எதையோ செஞ்சு தொலைங்க’ன்னு சொல்லிட்டு ஓகேன்னுட்டாரு..

பிரிவியூ தியேட்டர்ல இருந்து ரூமுக்கு திரும்பினேன். வரும்போதே யோசிச்சிக்கிட்டிருந்தேன்…. கவுண்டமணி நிச்சயமா எனக்காக தூங்காமக் காத்துக்கிட்டிருப்பாருன்னு.. நினைச்ச மாதிரியே எல்டாம்ஸ் ரோட்டு மொக்குலேயே கவுண்டமணி உக்காந்திருந்தாரு. என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கையைப் பிடிச்சு, ‘என்ன பாக்கி… என்னாச்சு’ன்னாரு..? ‘சகஸஸ்’ன்னு சொன்னேன்.

கையோட வாங்கிட்டுப் போயிருந்த கற்பூரத்தை தேனாம்பேட்டைல பூட்டியிருந்த ஆலையம்மன் கோவில் வாசல்ல வைச்சு கொழுத்தி விழுந்து, விழுந்து கும்பிட்டாரு கவுண்டமணி. மனுஷன் கண்ணுல அத்தனை தண்ணி.. இந்த அளவுக்கு அம்மன் மேல பக்தி கொண்டவங்க நாங்க..” என்றார் பாக்யராஜ்.

ஓகே.. இதையெல்லாம் வெளில சொல்ல வேண்டியது அண்ணன் கவுண்டமணிதானே..? அவர் ஏன் தன்னோட சுயசரிதையை சொல்லவே மாட்டேன்றாரு..! இது ரொம்பத் தப்பாச்சே..?

Our Score