full screen background image

வெற்றி மாறனின் கதை, வசனத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘அதிகாரம்’

வெற்றி மாறனின் கதை, வசனத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘அதிகாரம்’

இயக்குநர் வெற்றி மாறனின் இயக்கத்தில் ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகிய படங்களை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்தவர் தயாரிப்பாளர் S.கதிரேசன். இதில் ‘ஆடுகளம்’ படம்  6 தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றது.

இதேபோல், இயக்குநர் வெற்றி மாறன், ‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’ என்ற தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில், ‘உதயம்’,  ‘காக்காமுட்டை’,  ‘விசாரணை’,  ‘வட சென்னை’ போன்ற சிறந்த படங்களைத் தயாரித்தார். இதில் ‘காக்கா முட்டை’ படம் தேசிய விருது உள்பட பல விருதுகளைப் பெற்றது. ‘விசாரணை’ படம் தேசிய விருது பெற்றதுடன் அகாடமி விருதுக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்டது.

இப்போது இந்த ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸும் – கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும்  இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்கின்றன. இப்படத்திற்கு அதிகாரம்’ என்று பெயரிட்டுள்ளார்கள்.

இப்படத்திற்கு  வெற்றிமாறன் கதை ,திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார். இப்படம் மூலம் ஃபைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் – வெற்றிமாறன் இருவரும் சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளார்கள்.

பிரம்மாண்டமான படைப்பாக பான்-இந்தியா படமாக தயாராகும் இப்படத்தில் பான்-இந்தியா ஸ்டார் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். ஏற்கனவே இவர் இதே ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், S.கதிரேசன் இயக்கத்தில் ‘ருத்ரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.  

அதிகாரம்’ படத்தின் இயக்குநர் பொறுப்பை,  வெற்றி மாறனின் உதவியாளரான R.S.துரை செந்தில்குமார் ஏற்றுள்ளார். எதிர் நீச்சல்’, ‘காக்கி சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய இவர், முதல்முறையாக இப்படத்தின் மூலம் ராகவா லாரன்ஸ் உடன் இணைகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் இறுதியில் ஆரம்பமாகவுள்ளது. மலேசியாவில் சுமார் 50 நாட்களும், இந்தியாவில் பல இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

சினிமாவில் எதிர்பார்ப்புக்குரிய நல்ல திரைப்படங்களை கொடுத்துவரும் ராகவா லாரன்ஸ், S.கதிரேசன், வெற்றி மாறன், R.S.துரை செந்தில்குமார் இந்த நால்வர்  கூட்டணியால் இந்த பிரம்மாண்டமான படம் பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Our Score