தெலுங்கு திரையுலகின் நடிகர் சங்கத்திற்கு இந்தாண்டு தேர்தல் நடத்தப்படவுள்ளது.
Telugu Movie Artistes Association எனப்படும் தெலுங்கு நடிகர்கள் சங்கத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம்.
தற்போது அங்கே நடிகர் நரேஷின் தலைமையில் சங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் ஆயுட்காலம் முடிவடைவதால் இந்தாண்டு செப்டம்பர் மாதம் சங்கத்திற்கு புதிதாகத் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு தான் போட்டியிட இருப்பதாக நடிகர் பிரகாஷ்ராஜ் சில நாட்களுக்கு முன்பாக அறிவித்தார். தனக்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ஆதரவும் இருப்பதாக பிரகாஷ்ராஜ் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து தெலுங்குலகின் மூத்த நடிகரான மோகன் பாபுவின் மகனும், நடிகருமான விஷ்ணு மஞ்சு தானும் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்து பரபரப்பையூட்டினார்.
ஏனெனில் கடந்த இரண்டு முறைகளும் நடிகர் சங்கத்தில் பலத்த போட்டிகள் ஏற்பட்டு பலவித சர்ச்சைகள் எழுந்தன. இதனால் இந்த முறை அப்படி போட்டியில்லாமல் நிர்வாகிகளை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கலாம் என்று பல நடிகர், நடிகைகள் நினைத்து பேட்டியும் அளித்திருந்தார்கள்.
ஆனால் நிஜமாகவே போட்டி உறுதி என்ற சூழல் வந்தவுடன் தெலுங்கு திரையுலகம் பரபரப்பாகிவிட்டது. இந்தப் பரபரப்பில் இன்னும் கொஞ்சம் கூடுதல் டென்ஷனைக் கூட்டிவிட்டார் நடிகை ஜீவிதா ராஜசேகர்.
தற்போதைய நிர்வாகத்தில் செயலாளராகப் பணியாற்றி வரும் நடிகை ஜீவிதா தான் இந்த முறை தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாகக் கூறினார்.
இதையடுத்து நடிகர் மோகன்பாபு தரப்பில் இருந்து ஜீவிதாவுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். விஷ்ணு மஞ்சு “தான் இந்த முறை தலைவராக நின்று கொள்கிறேன். நீங்கள் செயலாளராக இருங்கள். அடுத்த முறை நான் செயலாளராக நிற்கிறேன். நீங்கள் தலைவராகுங்கள். உங்களது வெற்றிக்கு நான் பாடுபடுவேன்…” என்று இப்போது சமரசக் கொடியை நீட்டியிருக்கிறார். ஜீவிதா இதற்கு இன்னமும் பதில் சொல்லவில்லையாம்.
இதற்கு நடுவில் தற்போதைய நிர்வாகத்தில் துணைத் தலைவராகப் பதவி வகிக்கும் குணச்சித்திர நடிகையான ஹேமா, தானும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார்.
இவர் கடந்த 3 நிர்வாகங்களிலும் பணியாற்றியவர் என்பதால் தனது ஆதரவாளர்கள் “இனிமேல் நீ நின்றால் தலைவருக்குத்தான் நிற்க வேண்டும்” என்று சொல்லிவிட்டதாகச் சொல்கிறார் ஹேமா.
ஆக, மொத்தத்தில் தலைவர் பதவிக்கே இத்தனை போட்டிகள் என்றால் மற்றைய பதவிகளுக்கு என்னாகுமோ தெரியவில்லை என்கிறார்கள் தெலுங்கு நடிகர், நடிகையர்.
“இந்தக் குழப்பத்திற்குக் காரணமே பல்லாண்டுகளாக நீடித்து வரும் சிரஞ்சீவி-மோகன்பாபு இடையிலான பனிப்போர்தான். சென்ற இரண்டு நிர்வாகத்திலும் மோகன் பாபு நிறுத்தியவர்கள்தான் வெற்றி பெற்றார்கள். சிரஞ்சீவி யாரை ஆதரித்தாலும் அவர்களை மோகன்பாபு எதிர்ப்பார். இப்படியே நீடித்து வரும் இந்த இருவரின் மெளனப் போராட்டம்தான் நடிகர்கள் சங்கத் தேர்தலை ஒவ்வொரு முறையும் பரபரப்பாக்கி வருகிறது” என்கிறார்கள் தெலுங்கு திரையுலக பத்திரிகையாளர்கள்.