அசுர குரு – சினிமா விமர்சனம்

அசுர குரு – சினிமா விமர்சனம்

J.S.B. பிலிம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் J.S.B. சதீஷ் இந்தப் படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். இவர்களுடன் ‘பாகுபலி’ சுப்பாராஜ், யோகிபாபு,  நாகி நீடு, ஜெகன், குமரவேல், மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

கதை, திரைக்கதை, இயக்கம் – ஏ.ராஜ்தீப், இசை – கணேஷ் ராகவேந்திரா, ஒளிப்பதிவு – ராமலிங்கம், வசனம் – கபிலன் வைரமுத்து, சந்துரு மாணிக்கவாசகம், பாடல்கள்     – கபிலன் வைரமுத்து, பழநிபாரதி, மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு. நேரம் : 2 மணி நேரம்.

இந்தப் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் ஏ.ராஜ்தீப் இயக்குநர் மோகன்ராஜாவிடம் இணை இயக்குநராகப் பயின்றவர். மேலும் இவர் சென்னையில் அரசு திரைப்பட கல்லூரியில் இயக்குதல் பிரிவில் பயின்று தங்க பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இயக்குநர் ராஜ்தீப் தமிழக அரசின் சிறந்த குறும் பட இயக்குநருக்கான விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

 எஸ்.டி.கூரியர் சர்வீஸில் கூரியர் பாயாக வேலை பார்த்து வருகிறார் விக்ரம் பிரபு. இவரது மிக நெருங்கிய நண்பர் ஜெகன். இவர் தற்போது காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் வேலை பார்த்து வருகிறார்.

விக்ரம் பிரபுவிற்கு ஒரு வினோதமான நோய் இருக்கிறது. அவருக்கு எப்போதெல்லாம் தலைவலியும், திருகு வலியும் வருகிறதோ. அப்போது பக்கத்தில் எங்காவது பணத்தைக் கொள்ளையடித்துவிடுவார். இது சின்ன வயதில் இருந்தே அவருக்கு இருக்கிறது.

இந்த நோயினால் ஏற்பட்ட விளைவுகளால் விக்ரம் பிரபுவின் அம்மா தற்கொலை செய்து கொள்கிறார். விக்ரம் பிரபுவே சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் தனது இளமைக் கால வாழ்க்கையை முடித்துவிட்டு வெளியில் வந்திருக்கிறார்.

இப்போதும் அந்த நோயின் தாக்கத்தில் இருந்து அவரால் விடுபட முடியவில்லை. மைசூரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த டிரெயினில் ரிசர்வ் வங்கி அனுப்பி வைத்த சில கோடி ரூபாய்களை ஓடும் ரயில் மீது குதித்து உயிரை பணயம் வைத்து கொள்ளையடிக்கிறார் விக்ரம் பிரபு.

இதையடுத்து கள்ள நோட்டு மற்றும் ஹவாலா ஊழலில் ஈடுபடும் நாகி நீடுவின் மகனிடமிருந்து சில கோடிகளை கொள்ளையடிக்கிறார். இந்தக் கொள்ளையை விசாரிக்க வேண்டிய நாகி நீடு தனியார் டிடெக்டிவ் ஏஜென்ஸியை அணுகுகிறார். அங்கே வேலை பார்க்கும் நவநாகரிக பெண்ணான மஹிமா நம்பியார் இந்த வழக்கில் துப்புத் துலக்க இறங்குகிறார்.

போலீஸ் ரயிலில் நடந்த கொள்ளை வழக்கை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்கிறது. முதலில் ரயில்வே போலீஸ் விசாரித்த இந்த வழக்கு இப்போது சென்னை மாநகர போலீஸுக்கு மாற்றப்படுகிறது. இந்த வழக்கை விசாரிக்க ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு சென்றிருக்கும் துணை கமிஷனர் ‘மாணிக்கவாசகம்’  என்னும் சுப்பாராஜ், காவல்துறையின் மேலிடத்தில் இருந்து அழைக்கப்பட்டு நியமிக்கப்படுகிறார். இதற்குப் பின்பும் அடங்காத விக்ரம் பிரபு, சுப்பாராஜின் முன்பாகவே அவரது பாதுகாப்பில் இருந்த வங்கியில் இருந்த பணத்தைக் கொள்ளையடிக்கிறார்.

மஹிமா நம்பியாரிடம் விக்ரம் பிரபுவின் புகைப்படம் சிக்குகிறது. அவரைத் தேடிக் கொண்டிருக்கையில் விக்ரம் பிரபுவே நேரில் வந்து மாட்டுகிறார். அப்படியே நூல் பிடித்து செல்லும் மஹிமா விக்ரம், பிரபுவின் வீட்டுக்கே வந்து விக்ரம் பிரபுவை பிடித்துவிடுகிறார்.

இதன் பின் நடப்பது என்ன என்பதுதான் இந்த ‘அசுர குரு’வின் பின் பாதிக் கதை..!

விக்ரம் பிரபுவால் என்ன செய்ய முடியுமோ… அதற்கேற்றாற் போன்று கதையையும், திரைக்கதையையும் வடிவமைத்திருக்கிறார் இயக்குநர். அதற்குக் குறைவில்லாமலும் நடித்திருக்கிறார் விக்ரம் பிரபு.

அவருக்கான நோய்ப் பிரச்சினை அவரைத் தாக்கும் நேரங்களில் அவரது நடிப்பை இன்னமும் மேன்மைப்படுத்தியிருக்கலாம். அந்தத் தாக்கத்திற்கு அவர் காரணமில்லை என்பதை அழுத்தமாகச் சொல்லும் அளவுக்கு அவரது நடிப்பு இருந்திருந்தால் திரைக்கதையின் மீது ஒரு நம்பகத்தன்மை பார்வையாளர்களுக்குக் கிடைத்திருக்கும்.

ஆக்சன் மட்டுமே நடிப்பு என்கிற நிலையில் தன்னால் என்ன செய்ய முடியுமோ அதைத் தவறில்லாமல் செய்திருக்கிறார் விக்ரம் பிரபு. காதல் கைவிட்டுப் போய்விடுமோ என்றெண்ணி அவர் கலங்கி நிற்கும் ஒரு காட்சியில் கொஞ்சம் நம் மனதையும் தொட்டிருக்கிறார்.

மஹிமா நம்பியார் சிகரெட் பிடிக்கும் நாகரிகப் பெண்ணாக நடித்திருக்கிறார். அந்த நடிப்பும், கோபமும்… படம் பார்ப்பவர்களுக்கு நிச்சயமாகப் பிடிக்கும். தன்னைத் தேடி வரும் விக்ரம் பிரபுவை வெளியே விரட்டும் மஹிமாவின் நடிப்பும் அழகு. கோபமும், சீற்றமுமாய் அவர் காட்டும் காதல் அழகோ அழகு.. இயக்குநரின் இயக்குதல் திறமை இன்னும் சிறப்பாக இருந்திருந்தால் இவர் இதைவிடவும் சிறப்பாக நடித்திருப்பார். இருந்தவரையிலும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.

வழக்கமாக எல்லா சினிமாக்களிலும் ஹீரோக்கள் சிகரெட் பிடித்தால் அதைவிட்டுவிட வேண்டும் என்று சத்தியம் வாங்குவதுதான் ஹீரோயின்களின் வழக்கம். இந்தப் படத்தில் மட்டும் அப்படியே உல்டாவாக.. “அதைக் கொஞ்சம் விட்டுரக் கூடாதா..?” என்று நாயகியிடம் கேட்கிறார் விக்ரம் பிரபு. சுவையான காட்சிதான்..!

‘ஹவாலா ஊழல்’ என்றாலே அதை முஸ்லீம்கள் மட்டும்தான் செய்கிறார்களா..? ஏன் இயக்குநரே இப்படி..? இருந்தும் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாகி நீடு.. கொலையையும் செய்துவிட்டு தப்பியோடி தலைமறைவாக இருக்கும் வீராதிவீரராக நடித்திருக்கிறார். அந்த வில்லன் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் பாலீஸ் செய்திருக்கலாம்.

துணை கமிஷனரான சுப்பாராஜ் கடைசியில் பல்டியடிப்பது ஒரு சுவையான டிவிஸ்ட்.. வில்லத்தனத்திற்கு ஏற்ற முகம். கடைசிவரையிலும் தன்னுடைய வில்லத்தனத்தை வெளிக்காட்டாமல் கொண்டு போய் முடித்திருப்பது சிறப்பு.

துப்பறியும் நிறுவனத்தை நடத்தும் தயாரிப்பாளர் ஜே.எஸ்.பி.சதீஷ் புதுமுகமாக நடித்திருக்கிறார். கிடைத்த வாய்ப்பில் யாருய்யா இவரு என்று கேட்க வைத்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் காட்சிகள் இருந்திருந்தால் நிச்சயமாக நம்மை கவனப்படுத்தியிருப்பார்.

ஜெகனும், யோகி பாபுவும் சிரிக்க வைப்பதற்காகவே சில இடங்களில் பேசுகிறார்கள். ஆனால் சிரிக்க முடியவில்லை. திரைக்கதையையும், வசனத்தை டெவலப் செய்ய அவர்களிடத்திலாவது சொல்லியிருக்கலாம். ஜெகன் விக்ரம் பிரபுவின் கதையைச் சொல்லுமிடத்தில் அழுத்தம் இல்லை.. காரணம் இயக்குநரே..!

ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு மட்டும் பக்கவாக இருக்கிறது. கலை இயக்குநர் சரவணனின் கலைத் திறமை பளிச்சிடுகிறது. ரூபாய் நோட்டுக்களை வைத்து அவர் செய்திருக்கும் கலைத் திறன் அழகு. அந்த ஒரு காட்சியை மிக அழகாக இண்டர்வெல் பிளாக்கில் வைத்திருக்கும் இயக்குநரின் திறமைக்கு பாராட்டுக்கள்.

கணேஷ் ராகவேந்தரின் இசையில் அந்த டூயட் அந்த நேரத்தில் மனதுக்கு இனிமையாக இருக்கிறது. சைமன் கே.கிங்கின் பின்னணி இசை சேஸிங் காட்சிகளின் உணர்வுகளுக்கு மிகவும் உதவியிருக்கிறது.

இது போன்ற சேஸிங் கதைகளுக்கு விறுவிறுப்பான திரைக்கதை அவசியம் தேவை. அதே சமயம் கதாபாத்திரங்களின் தன்மையும் மனதைத் தொடுவதாக இருக்க வேண்டும். இந்தப் படத்தில் நாயகன் கொள்ளையடிப்பதற்கான காரணம் சப்பையாக இருப்பதுதான் படத்தின் மிகப் பெரிய பலவீனம்.

போலீஸ் ஒரு பக்கம் தேடிக் கொண்டிருக்க.. தானாகவே வந்து மாட்டினார்கள் என்ற கதையாக திரைக்கதையை அவரவர் வசதிக்காக எழுதியிருப்பது கொஞ்சம் சுவாரஸ்யத்தைக் குறைத்திருக்கிறது..!

விக்ரம் பிரபுவுக்கும் ஒரு பெயர் சொல்லும் படமாக… ‘வானம் கொட்டட்டும்’ படத்திற்கு அடுத்து கிடைத்திருப்பதும் பெரிய விஷயம்தான்..! எப்படியிருப்பினும் ‘ஒரு முறை பார்க்கலாம்’ லிஸ்ட்டில் இத்திரைப்படமும் இடம் பிடித்துவிட்டது..!

Our Score