full screen background image

“பெண் என்பதாலேயே என்னைக் குறி வைத்துப் பேசுகிறார்கள்” – லதா ரஜினியின் வருத்தம்!

“பெண் என்பதாலேயே என்னைக் குறி வைத்துப் பேசுகிறார்கள்” – லதா ரஜினியின் வருத்தம்!

‘கோச்சடையான்’ பட விவகாரம் தொடர்பாக பெங்களூர் நீதிமன்றத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவியான லதா ரஜினிகாந்த் நேரில் ஆஜரானார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ திரைப்படத்தை தயாரிப்பதற்காக மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனத்தை சேர்ந்த தயாரிப்பாளர் முரளி, ‘ஆட் பீரோ’ நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நஹாவரிடம் ரூ.6.2 கோடியை கடனாகப் பெற்றார்.

இதற்காக முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்து கையெழுத்து இட்டிருந்தார்.

பின்னர் முரளி கடனாக பெற்ற பணத்தை அபிர்சந்த் நஹாருக்கு திரும்ப அளிக்காததால் முரளி மற்றும் லதா ரஜினிகாந்த் மீது கடந்த 2015-ம் ஆண்டு அபிர்சந்த் நஹார் பெங்களூரு மாநகர 6-வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

பெங்களூரு நீதிமன்றத்தில் 2015-ம் ஆண்டு தொடர்ந்த இந்த வழக்கு, கடந்த 8 ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வருகிறது. 

இந்தப் புகாரின் அடிப்படையில் லதா ரஜினிகாந்த் மீது 196, 199, 420, 463 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை முடிந்து குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டபோது தன் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி லதா ரஜினிகாந்த் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் மூன்று வழக்குகளை ரத்து செய்த நீதிமன்றம் 463 பிரிவில் உள்ள வழக்கை மட்டும் விசாரிக்க உத்தரவிட்டது. 

அந்த வழக்கையும் ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணையில், லதா ரஜினிகாந்தின் விசாரணையை பெங்களூரு நீதிமன்றமே மேற்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இதனால், “பெங்களூரு கூடுதல் மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கு லதா ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும். இல்லையென்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்” என்று நீதிமன்றம் எச்சரித்தது. அதன்படி, இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரான லதா ரஜினிகாந்திற்கு உடனேயே 2 தனி நபர்களின் உத்தரவாதத்துடன், 25,000 ரூபாய் ஜாமீன் பத்திரத்துடன் ஜாமீன் வழங்கப்பட்டது. 

இந்நிலையில் லதா ரஜினிகாந்த் இன்று மாலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் இந்த வழக்குக் குறித்து பேசும்போது, ”ஒரு முக்கியமான தருணத்தில் உங்களை நான் சந்திக்கிறேன். ‘கோச்சடையான்’ படத்தின் தயாரிப்புக்காக அதன் தயாரிப்பாளர்கள் கடன் வாங்கினார்கள். அதற்கு நான் அத்தாச்சி கையெழுத்திட்டேன். அவ்வளவுதான். அதையே இப்போது குற்றம் என்கிறார்கள்.

பெங்களூரு நீதிமன்றத்திற்கு நான் தலையில் துப்பட்டா அணிந்து சென்றதாக சமூக வலைதளங்களில் என்னை தவறாக பேசுகிறார்கள். நான் எதற்கும் பயப்படவில்லை. நியாயத்திற்காகத்தான் நான் கோர்ட்டிற்கு சென்றேன். 

சட்ட ரீதியாக நான் எப்படி வழக்கை அணுக வேண்டுமோ, அப்படி அணுகினேன். இந்த கோச்சடையான் படம் குறித்து பல ஊடகங்கள் தவறாக சித்தரித்து வருகிறது. குடும்பத்தில் நடக்கும் விஷயம் என்றால் பக்கத்தில் இருந்து பார்த்தால்தான் தெரியும். இதனால் நானும் என்னுடைய கணவரும் மனதால் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளோம்.

நீதிமன்றங்களில் பொதுமக்களுக்கு நியாயம் கிடைக்குமா என்ற சந்தேக நிலைமைதான் தற்போது உள்ளது. நீதி என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது மான நஷ்ட வழக்கு போடலாமா என்று நான் யோசித்து வருகிறேன்.

பலரும் அதிகமாக என்னைக் குறி வைத்துத் தாக்குவதற்கான காரணம், நான் ஒரு பெண் என்பதால்தான். நியாயத்திற்கு ரஜினிகாந்த்கூட துணையாக இருப்பார்.

இன்றைய காலகட்டத்தில் என்னுடைய கணவர் அரசியலுக்கு வராதது எனக்கு வருத்தமாகத்தான் உள்ளது. ரஜினி அரசியல்  பற்றி என்னுடன் அதிகமாக பேசி உள்ளார். அவர் அரசியலுக்கு வருவதையே நானும் விரும்புகிறேன்..” என்றார்.

Our Score