படங்களை வெளியிட தியேட்டர் உரிமையாளர்கள் திடீர் நிபந்தனை

படங்களை வெளியிட தியேட்டர் உரிமையாளர்கள் திடீர் நிபந்தனை

திரைப்படங்களை தியேட்டர்களில் வெளியிட புதிய நிபந்தனைகளை தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

கொரோனா 2-வது அலையின் காரணமாக ஏற்பட்ட லாக்டவுன்-2-க்குப் பிறகு சமீபத்தில்தான் தமிழகம் முழுவதும் திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இருந்தாலும் இப்போதுவரையிலும் 80 சதவிகித தியேட்டர்கள் மூடப்பட்டுதான் உள்ளன.

வரும் செப்டம்பர் 9-ம் தேதியன்றுதான் விஜய் சேதுபதியின் ‘லாபம்’ படமும் 10-ம் தேதியன்று ‘தலைவி’ படமும் திரைக்கு வரவிருக்கிறது. அன்றைக்குத்தான் தமிழகம் முழுவதும் அனைத்துத் திரையரங்குகளும் முழு மூச்சுடன் இயங்கத் துவங்கும் என்று தெரிகிறது.

இதற்கிடையில் திரையரங்குகளில் படங்களை வெளியிட புதிய நிபந்தனைகளை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

திரையரங்குகளில் திரையிடப்பட்டு ஒரு மாதம் கழித்துதான் ஓடிடியில் படங்கள் வெளியாக வேண்டும். இதற்கான சான்றிதழை அவர்கள் முன்கூட்டியே கொடுத்தால்தான் அந்தப் படங்களை நாங்கள் தியேட்டரில் வெளியிடுவோம்.

ஓடிடியில் ஏற்கெனவே நேரடியாக வெளியிட்ட படங்களை நாங்கள் தியேட்டர்களில் வெளியிட மாட்டோம் என்று இரண்டு முக்கிய முடிவுகளை தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த திடீர் நிபந்தனை எதற்கெனில் இயக்குநர் விஜய் இயக்கியிருக்கும் ‘தலைவி’ படம் வரும் செப்டம்பர் 10-ம் தேதியன்று தியேட்டர்களில் வெளியானாலும் செப்டம்பர் 24-ம் தேதியன்று அத்திரைப்படம் ஓடிடியிலும் வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

இரண்டு வாரங்களே இடைவெளி இருப்பதால் ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து இந்தப் படத்தைப் பார்க்கத் தயங்கிவிட்டால் தங்களது வசூல் குறைந்துவிடுமே என்று தியேட்டர் உரிமையாளர்கள் பயப்படுகிறார்கள். அதனால்தான் இந்தத் திடீர் முடிவை தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருக்கிறார்களாம்.

கடைசியாகக் கிடைத்தத் தகவலின்படி ‘தலைவி’ படக் குழு என்.ஓ.சி.யை கொடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். எனவே தலைவி வெற்றிகரமாக தியேட்டர்களில் வெளியாகவுள்ளது..!

Our Score