“மணிரத்னம்தான் என்னை இயக்குநராக்கினார்” – அரவிந்த்சாமியின் பேட்டி

“மணிரத்னம்தான் என்னை இயக்குநராக்கினார்” – அரவிந்த்சாமியின் பேட்டி

9 இயக்குநர்களின் இயக்கத்தில், 9 குறும் படங்களை உள்ளடக்கிய நவரசா’ என்ற ‘ஆந்தாலஜி’ திரைப்படம் கடந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்த ‘நவரசா’வில் கெளதம் மேனன், அரவிந்த்சாமி, பிரியதர்ஷன், கார்த்திக் நரேன், வஸந்த் சாய், கார்த்திக் சுப்புராஜ், பிஜோய் நம்பியார், சர்ஜூன், ரதீந்திரன் பிரசாத் உள்ளிட்ட 9 இயக்குநர்கள், 9 குறும் படங்களை இயக்கியுள்ளனர்.

இந்த 9 படங்களில், சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, பிரசன்னா, சித்தார்த், பார்வதி, ரோகிணி, ரித்விகா, யோகி பாபு, பாபி சிம்ஹா என்று மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இயக்குநர் மணிரத்னம் தயாரித்த இந்த வெப் தொடர் தற்போது ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த 9 தொடர்களில் இயக்குநர் வசந்த் சாய் இயக்கிய ‘பாயாசம்’ என்ற தொடரும், நடிகர் அரவிந்த்சாமி இயக்கிய ‘ரெளத்திரம்’ என்ற தொடரும்தான் சிறப்பாக இருப்பதாக பல்வேறு தளங்களிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. நடிகர் அரவிந்த்சாமி இயக்கிய முதல் படமே இந்த ‘ரெளத்ரம்’தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ‘ரெளத்ரம்’ தொடரில், அழகம் பெருமாள், ஸ்ரீராம் ரித்விகா, அபினயாஸ்ரீ, கீதா கைலாசம் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்தத் தொடரை இயக்கியது குறித்து நடிகர் அரவிந்த்சாமி பேசுகையில், “மணி சார் ஒரு நாள் என்னிடம் ‘நவரசா’ குறித்து பேசினார். அப்போது, “இந்த பிராஜெக்ட்டில் நீயும் பங்கேற்க முடியுமா..?” என்று கேட்டார். அதற்கு நான் அவரிடம், “இயக்குநராகவா அல்லது நடிகராகவா…?” எனக் கேள்வி எழுப்பினேன். “அது உன்னுடைய தேர்வுதான்…” என்று கூறிவிட்டார். இப்படித்தான் இயக்குநராக எனது பயணம் துவங்கியது.

இயக்குநராவதில் நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஒரு படைப்பை உருவாக்குவதில் எதைப் பற்றியும் சந்தேகமோ, தயக்கமோ என்னிடம் இல்லை. பல ஆண்டுகளாக நான் பல திறமையான இயக்குநர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுடன் பணி புரிந்ததுதான் அதற்குக் காரணம்.

மேலும், இந்த ஆந்தாலஜியில் கோபம்’ கிடைத்தால், அதை முன் வைத்து ஒரு கதையைக் கூறலாம் என்று முடிவு செய்தேன். கடைசியில் நான் கோப’த்தைத் தேர்ந்தெடுத்தேன். அது நிறைவு பெற்று, இப்போது எனது படைப்பிற்கு பாராட்டுக்கள் எல்லா பக்கங்களில் இருந்தும் கிடைத்து வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது…” என்கிறார் அரவிந்த்சாமி.

Our Score