ஆரா சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் காவ்யா வேணுகோபால் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா.’
இந்தப் படத்தில் வீரா – மாளவிகா இணைந்து நடித்துள்ளனர். மேலும், பசுபதி, ‘ரோபோ’ சங்கர், ஷாரா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் என்று ஒரு நட்சத்திர கூட்டமே இந்தப் படத்தில் இணைந்திருக்கிறது.
இசை – மேட்லி புளூஸ், ஒளிப்பதிவு – சுதர்சன், படத் தொகுப்பு – பிரவீண் ஆன்டனி, கலை இயக்கம் – எட்வர்ட் கலைமணி, சண்டை இயக்கம் – திலீப் சுப்பராயன், தயாரிப்பு நிறுவனம் – ஆரா சினிமாஸ், தயாரிப்பாளர் – காவ்யா வேணுகோபால்.
அறிமுக இயக்குநரான அவினாஷ் ஹரிஹரன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
நகைச்சுவை கதம்பமாக உருவாகியிருக்கும் இந்த ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படம் வரும் டிசம்பர் 27-ம் தேதி திரைக்கு வருகிறது.
இப்படம் குறித்து விவரித்த இயக்குநர் அவினாஷ் ராஜேந்திரன், “எங்களது கனவுப் படமான ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’ படம் குறித்து அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.
பொழுது போக்கு அம்சங்கள் நிரம்பிய இப்படம், விலா நோகச் சிரிக்க வைக்கும் காட்சிகள் நிரம்பியது. பல்வேறு பாத்திரங்களை மையப்படுத்தி சுற்றி வரும் இப்படம், நகைச்சுவை மூலம் அவர்கள் எவ்வாறு ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைந்திருக்கின்றனர் என்பதை சுவைபடச் சொல்லும்.
நூறு சதவீதம் நகைச்சுவைக்கு உறுதியளிக்கும் இப்படத்தில் சில விசேடங்களும் உண்டு. படத்தின் பிரதான பாத்திரங்களான வீரா, மாளவிகா மற்றும் பசுபதி ஆகியோர் நடித்து வெளிவந்த முந்தைய படங்களில் சீரியஸ் வேடங்களில் சித்தரிக்கப்பட்டவர்கள்.
இவர்கள் நடித்த முந்தைய படங்களை ஊன்றி கவனித்துப் பார்த்தால் ஏதேனும் ஒரு விதத்தில் நகைச்சுவையின் சாயல் இருக்கும்.
குறிப்பாக, பசுபதி சாரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர் எந்த வகையான வேடம் என்றாலும், மிகப் பிரமாதமாக நடித்து அந்தப் பாத்திரத்துக்கு நியாயம் செய்வார்.
வீராவைப் பொறுத்தவரை முழு நீள நகைச்சுவை வேடம் ஏற்றிருப்பதால் இந்தப் படத்துக்குப் பிறகு அவரது பாணியே மாறிவிடும்.
மாளவிகாவைப் பொறுத்தவரையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பலதரப்பட்ட வேடங்களை ஏற்று நடித்து தன் திறமையை நிரூபித்தவர். ‘குக்கூ’ தமிழ்ப் படத்தில் உணர்ச்சிபூர்வமாக நடித்து நம் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர். ‘யவடே சுப்ரமணியம்’ படத்தில் நடிப்பின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
எனவே இவர்கள் ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’ படத்திலும் உயிரோட்டமிக்க நகைச்சுவை நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். மேலும், ‘ரோபோ’ சங்கர், ஷாரா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் மற்றும் பலரும் நகைச்சுவைக் காட்சிகளுக்கு சுவை கூட்டியிருக்கின்றனர்…” என்றார்.