ஸ்ரீகோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ‘கோகுலம்’ கோபாலன் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘தனுசு ராசி நேயர்களே’..!
இந்தப் படத்தில் ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடிக்கிறார். ரெபா மோனிகா ஜான் மற்றும் டிகங்கனா சூர்யவன்சி ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளார்கள். யோகிபாபு காமெடி பாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் முனீஸ்காந்த், பாண்டியராஜன், சார்லி, ரேணுகா, மயில்சாமி, சங்கிலி முருகன், டேனியல் ஆனி போப், டி.எஸ்.கே., கும்கி அஸ்வின், ஹரிதா, சம்யுக்தா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – பி.கே.வர்மா, இசை – ஜிப்ரான், படத் தொகுப்பு – குபேந்திரன், கலை இயக்கம் – உமேஷ், குமார், பாடல்கள் – விவேகா, மதன் கார்க்கி, விக்னேஷ் சிவன், கு.கார்த்திக், சந்துரு, வசனம் – எம்.ஆர்.பொன்.பார்த்திபன், ஆடியோகிராபி – டி.உதயக்குமார், நடன இயக்கம் – கல்யாண், எம்.ஷெரீப், ஆடை வடிவமைப்பு – ஜி.அனுஷா மீனாட்சி, நிர்வாகத் தயாரிப்பு – வி.மணிகண்டன், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, கதை, திரைக்கதை, இயக்கம் – சஞ்சய் பாரதி.
இந்தப் படத்தின் இயக்குநரான சஞ்சய் பாரதிக்கு இது முதல் திரைப்படமாகும். இவர் பிரபல இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இப்படத்தின் டீஸர் Youtube தளத்தில் வெளியாகி மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்து வருகிறது.
இதையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்த படத்தின் இயக்குநர் சஞ்சய் பாரதி படம் பற்றிய பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
இயக்குநர் சஞ்சய் பாரதி பேசும்போது, “இந்தப் படம் பி.ஆர்.ஓ. சுரேஷ் சந்திரா சாரால்தான் ஆரம்பித்தது. அவர்தான் தயாரிப்பாளரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். ‘கோகுலம் மூவிஸ்’ நிறுவனத்தில் கதை கேட்டவுடனேயே பிடித்துப் போய் உடனேயே ஓகே சொல்லிவிட்டார்கள்.
படத்தின் டிரெய்லரை பார்த்துவிட்டு இது ‘அடல்ட் காமெடி படமோ’ என்று சிலர் சந்தேகிக்கிறார்கள். இது கண்டிப்பாக ‘அடல்ட் காமெடி படம்’ கிடையாது.
இத்திரைப்படம் குடும்பத்துடன் வந்து பார்க்கும் அளவுக்கான கமர்ஷியல் படமாகத்தான் உருவாகியுள்ளது. படத்தின் தலைப்பே இந்தப் படத்தின் கதையைச் சொல்லும்.
தனுசு ராசி, மூலம் நட்சத்திரத்தை ஜாதகமாகக் கொண்ட நாயகன், கன்னி ராசி உள்ள பெண்ணைத் திருமணம் செய்தால் அவனது வாழ்க்கை ஓஹோவென இருக்கும் என்று ஜோதிடர் சொன்னதை நம்புகிறான். இதனால் கன்னி ராசி உள்ள பெண்களைத் தேடியலைகிறான்.
பெண் கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்தில் பிரச்சினைகள் எழுகிறது. அப்படியே கன்னி ராசியில் கிடைத்தாலும் செவ்வாய் தோஷம் போன்று தோஷமுள்ள பெண்கள்தான் சிக்குகிறார்கள். இந்தக் குழப்பத்தில் யாரையாவது காதலித்தாவது கல்யாணத்தை முடிக்க நினைக்கிறார் நாயகன். இதன் பின் விளைவுகள் என்ன என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
சுருக்கமாக, ராசியை நம்பும் ஒரு இளைஞனின் வாழ்வில்… இதனால் ஏற்படும் பிரச்சினைகளும், அதனைத் தொடர்ந்த அதிரடி சம்பவங்களும் காமெடியாக சொல்லப்பட்டிருக்கிறது.
இது நடிகர் தனுஷை மனதில் வைத்து எழுதவில்லை. முதலிலேயே ஹரீஷைத்தான் அணுகினோம். எதிர்வீட்டுப் பையன் மாதிரியான ஒரு ஆள்தான் ஹரீஷ். அவர் இந்தப் படத்தில் அந்தக் கால கார்த்திக்கை ஞாபகப்படுத்துவார்.
படத்தில் நாயகியின் பெயர் கே.ஆர்.விஜயா. ஒரு மாற்றத்திற்காகத்தான் அந்தப் பெயரை வைத்திருக்கிறோம். படம் பார்க்கும்போது உங்களுக்கே தெரியும். டிகாங்கனா, ரெபா மோனிகா இருவரும் நாயகிகளாக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஜிப்ரானின் இசையில் 5 பாடல்கள் படத்தில் இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும்.
படம் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. கூடிய விரைவில் திரையில் சந்திக்கிறோம்…” என்றார்.