“பேஸ்புக் மூலம்தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது” – ‘மேகி’ நாயகி நிம்மி பேச்சு..!

“பேஸ்புக் மூலம்தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது” – ‘மேகி’ நாயகி நிம்மி பேச்சு..!

ஸ்ரீசாய்கணேஷ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திகேயன் ஜெகதீஷ் தயாரித்து, இயக்கியிருக்கும் காமெடி-ஹாரர் கலந்த திரைப்படம் ‘மேகி என்கிற மரகதவல்லி.’

இந்தப் படத்தில் கூத்துப் பட்டறையில் பயிற்சி பெற்ற ஆதித்யா செந்தில், ‘காலா’ படப் புகழ் ப்ரதீப், ரியா, நிம்மி, மன்னை சாதிக் என பல புதுமுகங்களும் நடித்திருக்கிறார்கள்.

மணிராஜ் ஒளிப்பதிவு செய்ய, விக்னேஷ் சிவன் படத்தைத் தொகுத்திருக்கிறார். பிரபாகரன் மற்றும் ஸ்டீவன் சதீஷ் என இரண்டு பேர் இசையமைத்திருக்கிறார்கள். கலைக்குமார் பாடல்களை எழுதியிருக்கிறார். 

இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருக்கும் நடிகை நிம்மி தனது அறிமுகம் பற்றியும், ‘மேகி’ படம் பற்றியும் பல விஷயங்களைப் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

நடிகை நிம்மி தனது அறிமுகப் படம் பற்றிப் பேசும்போது, “இந்த ‘மேகி ‘ படத்தில் நடிக்கும் வாய்ப்பு  எனக்கு பேஸ்புக் மூலம்தான் கிடைத்தது.

படக் குழுவினர் யாரையும் எனக்குத் தெரியாது. என்னுடைய ‘டப் மாஷ்’ பார்த்து விட்டுத்தான் என்னை நடிக்க அழைத்தார்கள். இயக்குநர் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சாரைப் போய்ப் பார்த்தேன்.

அவர்களுக்கு என்னைப் பிடித்து விட்டது. ‘அன்று  மாலைக்குள் முடிவினைச் சொல்ல வேண்டும்’ என்றார்கள். இவ்வளவு சுலபமாக சினிமா வாய்ப்பு கிடைக்குமா? என்று சந்தேகமாக இருந்தது.

நான் மீண்டும் மாலையில் அவர்களைச் சந்தித்துப் பேசியபோது ‘யோசிக்க ஒரு வாரம் அவகாசம் வேண்டும்’ என்றேன். ‘அவசரம்’ என்றார்கள். ‘சரி.. இரண்டு நாள் வேண்டும்’ என்றேன். ஆனால் ‘ஒரு வாரத்தில் படப்பிடிப்பு என்பதால் உடனேயே சம்மதம் தேவை’ என்றார்கள். அதையும் என்னால் நம்ப முடியவில்லை. ஒரு வழியாகச் சம்மதித்து படப்பிடிப்புக்குச் சென்று விட்டேன்.

இயக்குநர் கார்த்திகேயன் சார்தான் படத்தின் தயாரிப்பாளர். படப்பிடிப்புக்குச் சென்ற முதல் நாளே நான் அவரிடம் ‘இந்த படத்தை எடுத்து முடித்து வெளியிடுவீர்களா?’ என்றுதான் கேட்டேன்.

நான் அறியாமையில் கேட்டிருந்தாலும் அப்படி நான் கேட்டிருக்க கூடாதுதான். இந்த கேள்வி அவரை அதிர்ச்சியூட்டியிருக்க வேண்டும். ஆனாலும் அவர் அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு படத்தையும் முடித்து இதோ வரும் நவம்பர் 22-ம் தேதி படத்தை வெளியீட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தது. மலைப் பகுதி  என்பதால் அந்த இடத்தில் கால நிலை, உணவு எதுவும் படக் குழுவினர் பலருக்கும் ஒத்து வரவில்லை. பல பிரச்சினைகளைச் சந்தித்தோம். இடம், உணவு, சூழ்நிலை எல்லாம் ஒத்து வராத போதும் ஒரு நல்ல ஒருங்கிணைப்புடன் அனைத்தையும் சமாளித்து படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர் கார்த்திகேயன் சார்.

இந்த அனுபவம் எனக்கு ஒரு நல்ல பாடத்தையும் சினிமா பற்றிய நல்ல புரிதலையும்  ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

இந்த ‘மேகி’ ஒரு பேய்ப் படம் என்றாலும் அனைவரும் பார்க்கும்படியாக இருக்கும். விறுவிறுப்பு, காமெடி, திகில் எல்லாம் கலந்த ஒன்றாக இருக்கும்.

இந்த நேரத்தில் முதல் படத்திலேயே இவ்வளவு விரைவாக படத்தை எடுத்து இவ்வளவு விரைவாக ஒரு படத்தை வெளியிட்டிருக்கும் இயக்குநருக்கு  நான் நன்றி சொல்ல வேண்டும். நான் இப்போது என்னை ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்…” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் நடிகை  நிம்மி.

Our Score