30-க்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்திருக்கும் ஆரா சினிமாஸ் நிறுவனம் முதல்முறையாக தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’..!
இந்தப் படத்தில் வீரா, மாளவிகா நாயர், பசுபதி, ரோபோ ஷங்கர் மற்றும் பல முக்கிய நடிகர், நடிகைகள் நடித்திருக்கிறார்கள்.
இசை – மேட்லி ப்ளூஸ்(Madley Blues), ஒளிப்பதிவு – சுதர்ஷன், படத் தொகுப்பு – ப்ரவீன் ஆண்டனி, கலை இயக்கம் – எட்வர்ட் கலைமணி, சண்டை இயக்கம் – திலீப் சுப்பராயன், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, எழுத்து, இயக்கம் – அவினாஷ் ஹரிஹரன்.
காமெடி படங்களுக்கென்றே தமிழகத்தில் தனி ரசிகர் வட்டம் இருக்கிறது. குடும்பங்கள் இணைந்து குதூகலத்துடன் கொண்டாடும் படங்களாக, அவ்வகை படங்கள் இருக்கின்றன. விநியோகஸ்தர்கள் காமெடி படங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்.
வீரா, மாளவிகா நடிப்பில் உருவாகியுள்ள இந்த ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ படத்தின் தலைப்பு முதல், அடுத்தடுத்து படம் பற்றி வெளியிடப்பட்ட சிறு, சிறு வீடியோ புரமோக்களால் படம் பற்றிய பெரும் ஆர்வத்தை சினிமா ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
தற்போது CBFC சென்சார் போர்டு படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளதால் படக் குழுவினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
இயக்குநர் அவிநாஷ் ஹரிஹரன் படம் குறித்து பேசும்போது, “இத்திரைப்படம் பற்றி பேசப்படும் நல்ல, நல்ல செய்திகளால் நானும் எங்கள் படக் குழுவும் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளோம். முதல் காரணம் CBFC சென்சார் போர்டு படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.
அடுத்த காரணம் படக்குழு படத்தை வெளியிட தயாரகி வருகிறது. சமீப காலங்களில் மிக கனமான கதைகளுள்ள, பொருளுள்ள, ரசிகர்களை உற்சாகப்படுத்தும் படங்கள் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. இது எங்களது படத்தை வெளியிட சரியான தருணம் எனும் எண்ணத்தை என்னுள் விதைத்தது.
இப்படத்தில் நடிகர்கள் மிக முக்கிய பங்கினை வகித்துள்ளார்கள். வீரா, மாளவிகா, பசுபதி முதலான அனைவரும் மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார்கள். இப்படத்தின் மிகச் சிறந்த கதையை ரசிகர்கள் கொண்டாடும் நேரம், படத்தில் சொல்லப்பட்டிருக்கும் நகைச்சுவை பாணியை மக்கள் பெரிதும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.
படத்தை மிக தரமானதாக உருவாக்க பெரும் ஆதரவாக இருந்த தயாரிப்பாளர் மகேஷ் அவர்களுக்கு பெரும் நன்றி.
‘அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா’ படத்தை ரசிகர்களிடம் கொண்டு செல்ல இதுவே சரியான நேரம் என்று நாங்கள் நினைக்கிறோம். தற்போது பட வெளியீட்டு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படம் வெளியாகும்..” என்றார்.