மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்கிற கதையாக தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தோற்றுப் போன தாணு, இப்போதைய நிர்வாகிகளை தினம் தினம் தூங்கவிடாமல் செய்து கொண்டிருக்கிறார்.
இதுவரையிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் தொடர்பாக தாணு தொடுத்த 3 வழக்குகளையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஆனாலும் மனம் தளராத தாணு தனது அடுத்த அஸ்திரத்தைத் தொடுத்துள்ளார்.
புதிய நிர்வாகிகள் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதாக அறிவித்துள்ளார் தாணு. சங்க விதிகளின்படி 50 உறுப்பினர்களுக்கு மேல் கையெழுத்திட்டு கொடுத்தால் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டுமாம். தாணு அப்படி கொடுத்தும், பொதுக்குழுவைக் கூட்ட மறுத்துவிட்டது தற்போதைய நிர்வாகிகள் அமைப்பு. உடனேயே தன்னிச்சையாக கடந்த 2-ம் தேதியன்று தானே ஒரு பொதுக்குழுவைக் கூட்டுவதாக தாணு அறிவிக்க, உடனேயே நீதிமன்றத்திற்குச் சென்று அதற்கு இடைக்காலத் தடை கேட்டார்கள் தற்போதைய நிர்வாகிகள்..
அப்போது நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்தாலும் கூடுதலாக சில உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளனர். இது பற்றி தாணு கூறுகையில், “2-ந் தேதி நாங்கள் கூட்டுவதாக இருந்த சிறப்பு பேரவைக் கூட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்து, சில உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. ஏப்ரல் 7-ம் தேதிக்குள் தற்போதுள்ள கே.ஆர். தலைமையிலான நிர்வாகிகள் பொதுக்குழுக் கூட்டத்தை கூட்ட வேண்டும். இதற்காக, சங்க சட்ட விதி 21-ன்படி முறைப்படி எல்லா உறுப்பினர்களுக்கும் அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்று கூறியது. மேலும், அந்த அறிவிப்பில், சங்க நிர்வாகப் பதவியில் இருப்பவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டிய பொருள் பட்டியலில் இருக்க வேண்டும். ஏப்ரல்-7-ம் தேதிக்குள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தாவிட்டால், அதன் பின்னர் நாங்கள் சிறப்பு பேரவைக் கூட்டத்தை கூட்டலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…” என்று தெரிவித்துள்ளார்.
ஆக.. கேயார் டீமுக்கு நித்திய கண்டம் பூரண ஆயுசுதான்..!