கடந்த தீபாவளியன்று வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் தியேட்டர் வசூலில் முதல் நாளே பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது.
தமிழகத்தில் ‘அண்ணாத்த’ படத்தின் தியேட்டர் வசூல் 27.7 கோடி என்று தியேட்டர்கள் சங்க வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் முதல் நாளே படத்திற்கு எழுந்த எதிர்மறை விமர்சனங்களால் அடுத்த நாள் வசூல் 20.6 கோடியாக குறைந்துவிட்டதாம். இதனால். மொத்தமாக 2 நாட்களில் ‘அண்ணாத்த’ திரைப்படம் 48 கோடியே 3 லட்சம் ரூபாயை வசூலித்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
மேலும் மூன்றாவது நாளான நேற்றைக்கும் பல ஊர்களில் கூட்டம் குறைய ஆரம்பித்ததால் வசூலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு தமிழகத்தின் பல ஊர்களில் தற்போது மழை பெய்து கொண்டிருப்பதால் தியேட்டர்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது. இதனாலும் தியேட்டர் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது.
‘அண்ணாத்த’ படத்திற்கு எழுந்துள்ள எதிர்மறை விமர்சனங்களால் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகுந்த கவலையுடன் புதிது, புதிதாக கிரியேட்டிவ் விளம்பரங்களைக் கொடுத்து ‘அண்ணாத்த’ படத்தைக் காப்பாற்ற முயன்று வருகிறது.