சூர்யாவின் தயாரிப்பில், நடிப்பில் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் ‘ஜெய் பீம்’.
இந்தப் படத்தில் வழக்கறிஞர் சந்துரு வேடத்தில் சூர்யா நடித்திருந்தார். ஐ.ஜி பெருமாள்சாமியாக பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார்.
படத்தில் ஒரு காட்சியில் திருடு போன நகைகளைப் பற்றி, அடகுக் கடை வைத்திருக்கும் ஒரு சேட்டுவிடம் பிரகாஷ்ராஜ் விசாரிக்கும்போது, தமிழ் தெரிந்த அந்த சேட்டு பிரகாஷ்ராஜிடம் இந்தியில் பேசுவார். அவரை ‘பளார்’ என கன்னத்தில் அறைந்த பிரகாஷ் ராஜ், “தமிழ்ல பேசு” என்பார்.
இந்தக் காட்சிக்கு ஒரு சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். யார், எந்த மொழியில் பேசுவது என்பது அவரவர் விருப்பம். அதற்காக ‘தமிழில் பேசு’ என்று மிரட்டுவது அநாகரிகம் என்று எழுதி வருகிறார்கள்.
இதற்கு பதிலளித்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், “அந்த ‘ஜெய் பீம்’ படத்தில் பழங்குடியின மக்களின் வேதனையைப் பார்க்காமல், அநியாயத்தைப் பார்த்து பரிதாபப்படாமல், அறைந்ததைத்தான் பார்த்தார்கள் என்றால், அவர்கள் புரிந்து கொண்டது அவ்வளவுதான் என்று தோன்றுகிறது. இது அவர்களின் நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது.
சில விஷயங்களை ஆவணப்படுத்த வேண்டும். ஒரு வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியிடம் உள்ளூர் மொழி தெரிந்த ஒருவர், வேண்டுமென்றே இந்தியில் பேசினால் வேறு எப்படி நடந்து கொள்வார்…? இது ஆவணப்படுத்தப்பட வேண்டும். இப்படம் 1990-களை பின்னணியாக கொண்டது. அந்தக் கேரக்டருக்கு இந்தி திணிக்கப்பட்டிருந்தால் இப்படித்தான் ரியாக்ட் செய்திருப்பார். முறையான கல்வியைப் பெறாத பழங்குடியினப் பெண்களுக்கு ஆங்கிலத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட வழக்குகள் ஏராளம்…” என்று குறிப்பிட்டுள்ளார்.