மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான மோகன்லால் நடிப்பில் வெளியாகவிருக்கும் அடுத்த 4 படங்களும் நேரடியாக ஓடிடியில் வெளியாகப் போகின்றன. இதனால் கேரளாவில் இருக்கும் சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் பெரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.
மோகன்லால் நடிப்பில், பிரியதர்ஷனின் இயக்கத்தில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகி உள்ள ‘மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம்’ என்கிற சரித்திர படத்தை ஓடிடி-யில் வெளியிடப் போவதாக இப்படத்தின் தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இப்போது தன்னுடைய தயாரிப்பில் மோகன்லால் நடித்து அடுத்தடுத்து வெளிவரப் போகும் ‘புரோ டாடி’, ‘டுவெல்த் மேன்’, ‘அலோன்’ மற்றும் ‘புலி முருகன்’ படத்தை இயக்கிய இயக்குநர் இயக்கும் படம் என்ற 4 படங்களையுமே ஓடிடி-யில் நேரடியாக வெளியிட தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர் முடிவு செய்துள்ளாராம்.
இது தொடர்பாக சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினருடன் அந்தோணி பெரும்பாவூர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளாராம்.
இந்த படங்களை தியேட்டர்களில் திரையிட்டு 21 நாட்களுக்குப் பிறகு ஓடிடி-யில் வெளியிட அந்தோணி அனுமதி கேட்டிருக்கிறார். ஆனால், திரையரங்கு உரிமையாளர்களோ 80 நாட்களுக்கு பிறகுதான் அந்தப் படங்களை ஓடிடி-க்கு கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறார்கள்.
இதனாலேயே தியேட்டருக்கு பதிலாக ஓடிடி-யில் வெளியிடும் முடிவை எடுத்து இருப்பதாக தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர் தெரிவித்திருக்கிறார்.
தற்போது கேரள திரையுலகத்தில் இது மிகப் பெரிய பிரச்சினையை கிளப்பியுள்ளது.