அஞ்சலி-யோகிபாபு நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது…!

அஞ்சலி-யோகிபாபு நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது…!

அஞ்சலி, யோகிபாபு மற்றும் விஜய் டி.வி.புகழ் ராமர் ஆகியோர் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, இன்று எளிய பூஜையுடன் தொடங்கியது.

நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் வாழ்த்துகளுடன் இன்று படப்படிப்பைத் துவக்கிய இப்படம், ஒரு குறுகிய காலத் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சினீஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு ஆர்.வி. ஒளிப்பதிவு இயக்குநராக பொறுப்பேற்க, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். சக்தி வெங்கட்ராஜ் கலை இயக்குநராகவும், ரூபன் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். சண்டைக் காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைக்க, பாடல்களை அருண்ராஜா காமராஜ் எழுதுகிறார்.

1

இத்திரைப்படம் பற்றி தயாரிப்பாளர் சினீஸ் பேசும்போது, "விலா நோகச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகளும், விறுவிறுப்பு குறையாத காட்சிகளும் நிறைந்த கதையாக இதை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ்.

முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிகை அஞ்சலியை இந்தப் படத்தில் ரசிகர்கள் பார்க்கலாம். அஞ்சலியின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை இப்படம் ஏற்படுத்தும் என்றால் மிகையாகாது. இதுவரை அஞ்சலி ஏற்று நடித்த வேடங்களிலிருந்து இந்த வேடம் எவ்வளவு மாறுபட்டது என்பதை படம் பார்க்கும்போது ரசிகர்கள் உணர்ந்து கொள்ளலாம்.

2

யோகி பாபு மற்றும் விஜய் டி.வி.புகழ் ராமர் இருவரையும் அவர்களது புகழுக்காகவோ அல்லது அவர்களுக்கு ரசிகர்களிடம் இருக்கும் வரவேற்பை அறுவடை செய்ய வேண்டுமென்பதற்காகோ இப்படத்திற்குள் கொண்டுவரவில்லை. வலிமை மிக்க அந்தக் கதாபாத்திரங்களுக்கு அவர்கள் எந்த அளவுக்கு பொருத்தமானவர்களாக இருக்கிறார்கள் என்பதையும், அந்தப் பாத்திரங்களை அவர்கள் தங்கள் நடிப்பால் எந்த அளவு நியாயப்படுத்தியிருக்கிறார்கள் என்பதையும் படம் பார்க்கும்போது உணரலாம். படம் முழுவதும் இருவரும் வந்து அமர்க்களப்படுத்தியிருப்பார்கள்.

படத்தில் பங்கேற்கும் மற்ற சில முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் குறித்து விரைவில் அறிவிக்க இருக்கிறோம்.

ஒரு படைப்பாளி என்ற வகையிலும், ரசிகன் என்ற முறையிலும் இந்தப் படம் எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது..." என்றார்.