ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஏ,கே,வின் இயக்கத்தில் நாயகன் துருவா, நாயகி இந்துஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டூப்பர்’.
தன்னுடைய நாயக நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சூப்பர் டூப்பர்’ படத்தைப் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் நடிகர் துருவா. ‘சூப்பர் டூப்பர்’ படம் பற்றிய தன் அனுபவங்களைக் கூறுகிறார் நடிகர் துருவா.
“இந்த ‘சூப்பர் டூப்பர்’ திரைப்படம் ஆக்ஷன், த்ரில்லர், ரொமான்ஸ், காமெடி அனைத்தும் இணைந்த ஒரு படம். 1980, 1990-களில் வந்த படங்களை எடுத்துக் கொண்டால் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த படங்களாகவும் பெரும்பாலானவை வெற்றிப் படங்களாக இருக்கும். ஏனென்றால், அதில் ஒவ்வொருவருக்கும் தான் எடுத்துக் கொள்ள வேண்டிய அம்சங்கள் இருக்கும்.
ஆக்ஷன் இருக்கும்; ரொமான்ஸ் இருக்கும்; காமெடி இருக்கும்; சென்டிமென்ட் இருக்கும். இப்படி ஏதாவது ஒரு விஷயத்தால் ஈர்க்கப்பட்டுத்தான் அப்போதைய ரசிகர்கள் திரையரங்குகளுக்குச் சென்றார்கள். அதுபோல் இந்த ‘சூப்பர் டூப்பர்’ படமும் அனைத்து அம்சங்களும் இருக்கும்படியான படமாக உருவாகி இருக்கிறது.
இப்படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர் ‘சத்யா’. ஆனால் நான் வாயைத் திறந்தால் பொய்தான் சொல்லுவேன். பொய் மட்டும் சொல்வேனே தவிர, கெட்டவன் கிடையாது. இப்படிப் பொய் சொல்லிக் கதாநாயகியிடம் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்வேன். நெருங்கிப் பார்த்தால் நாயகியும் என்னைப் போலவே வேறொரு சிக்கலில் மாட்டியிருப்பார். எங்களைச் சுற்றியிருக்கும் சிக்கல்களிலிருந்து நாங்கள் இருவரும் எப்படி மீண்டு வெளியே வருகிறோம் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
விறுவிறுப்பான, திரில்லிங்கான, கலகலப்பான, போரடிக்காத, கவனம் நழுவவிடாத, இறுக்கமான திரைக்கதை அமைப்போடு படம் உருவாகியிருக்கிறது.
இரண்டு மணிநேரம் ஓடும் இந்தப் படத்தில் இரண்டு வினாடிகள்கூட உங்கள் கவனம் சிதறாது. அப்படி விறுவிறுப்பான திரைக்கதையில் இப்படம் உருவாகிஇருக்கிறது.
இது எனக்கு இரண்டாவது படம். ஒரு புதுமுக நாயகன் முழு நீள படத்தில் நடிப்பது பற்றிச் சிலர் விமர்சனம் செய்யலாம் . ஆனால் அதையும் நியாயப்படுத்துகிற மாதிரி காட்சிகளும், என் பாத்திர சித்தரிப்பும் இதில் இருக்கும்.
இப்போதெல்லாம் கதாநாயகியாக நடிக்க வருபவர்கள் சினிமாவை ஒரு முறையான தொழிலாக எண்ணித்தான் வருகிறார்கள். எனவே அவர்கள் தொழில் ரீதியாக சரியாகவே நடந்து கொள்கிறார்கள். அப்படித்தான் நாயகி இந்துஜாவும்.
சினிமாவையும் தன் பாத்திரத்தையும் புரிந்து கொண்டு இதில் நடித்திருக்கிறார். படித்த தைரியமான நகர்ப்புறத்தில் இருக்கும் நவீன பெண்ணாக இந்துஜா இந்தப் படத்தில் வருகிறார். தன் பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். ஒரு வளரும் நடிகையாக தன்னைப் புரிந்து கொண்டு ‘சூப்பர் டூப்பர்’ பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.
படத்தில் என் நண்பனாக ஷாரா நடித்துள்ளார். நானும் அவரும் காமெடியில் கலக்கி இருக்கிறோம். மற்றும் மறைந்த நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேரன் ஆதித்யாவும் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கும் இந்தப் படம் நல்ல பெயரைப் பெற்றுத் தரும்.
இயக்குநர் ஏ.கே., நாயகி இந்துஜா, நடிகர் ஷாரா, படத்தின் ஒளிப்பதிவாளர்கள் தளபதி ரத்னம், சுந்தர்ராம், இசை அமைப்பாளர் திவா.கரா.தியாகராஜன், கலை இயக்குநர் சூர்யா, படத் தொகுப்பாளர் வேல்முருகன் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து படத்தை முடித்துக் கொடுத்தனர்.
மொத்தத்தில் வெகுஜன ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும்படியான சிறப்பான படமாக ‘சூப்பர் டூப்பர்’ இருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. நான் சொல்வதில் உள்ள நியாயத்தைப் படம் பார்த்து அனைவரும் உணர்ந்து கொள்வார்கள்.
படப்பிடிப்பு நடந்த 55 நாட்களும் நல்ல நட்பு சூழலில் கழிந்ததை எங்களால் மறக்க முடியாது. நான் சினிமாவை நேசித்து நல்ல வாய்ப்புக்காகப் போராடிவரும் ஒரு வளரும் நடிகர். எனக்கு இப்படம் நல்லதொரு வாய்ப்பாகும்.
அனைவரும் உழைக்கத் தயங்காத குழுவாக இப்படக் குழு உருவானது. நண்பர்கள் நட்புச் சூழல் நிலவ இப்படம் தொடங்கியது முதல் சாதகமான நல்லெண்ண அலைகளும் எங்களைச் சூழ்ந்து வருகின்றன. எனவே இப்படம் வெற்றிப் படமாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது…” என்றார் நாயகன் துருவா.