சென்ற ஆண்டு ஹிந்தியில் வெளியாகி பெரும் வெற்றியையும், பாராட்டுக்களையும் பெற்ற திரைப்படம் ‘அந்தாதுன்’.
மேட்ச் பாக்ஸ் பிக்சரஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தை, வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனமும், ஈரோஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து விநியோகம் செய்தன.
இந்தப் படத்தில் நடிகர் ஆயுஷ்மான் குரானா, நடிகைகள் தபு, ராதிகா ஆப்தே மூவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இத்திரைப்படம் 2010-ம் ஆண்டு பிரெஞ்சு மொழியில் வெளியான ‘L’Accordeur‘(The Piano Tuner) என்கிற குறும்படத்தை அடிப்படையாகக் கொண்டது.
ஹிந்தி படத்திற்கான கதையையும், திரைக்கதையையும் Sriram Raghavan. Arijit Biswas, Pooja Ladha Surti, Yogesh Chandekar, Hemanth Rao ஆகிய 5 பேரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார்.
இத்திரைப்படத்திற்கு சென்ற ஆண்டுக்கான தேசிய விருதுகளில் சிறந்த ஹிந்தி திரைப்படம், சிறந்த திரைக்கதை, மேலும் படத்தில் நடித்திருந்த ஆயுஷ்மான் குரானாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது.
மேலும் சென்ற ஆண்டுக்கான ‘ஸ்கிரீன் விருது’களில் சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதைக்கான விருதும் இந்தப் படத்திற்கே கிடைத்திருக்கிறது. ‘பிலிம்பேர் விருது’களில் 5 விருதினை இத்திரைப்படம் தட்டிச் சென்றது.
சமீபத்தில் மெல்பர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய திரைப்பட விழாவில் பங்குபெற்று, சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளையும் இத்திரைப்படம் பெற்றது.
வெறும் 32 கோடியில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதிலுமான மொத்த வசூலாக 453 கோடியை வசூலித்திருக்கிறது.
பிளாக் காமெடி திரில்லர் டைப் படமான இத்திரைப்படம் கண் பார்வையில்லாத ஒரு பியானோ கலைஞர் ஒருவரின் வாழ்க்கையில் ஒரு நாள் ஏற்படும் சம்பவங்களின் தொகுப்பேயாகும்.
இப்போது இத்திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கியிருக்கிறார்.
‘அந்தாதுன்’ படத்தில் நாயகன் ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் நடிகர் பிரஷாந்த் நடிக்கவிருக்கிறார்.
ஏற்கெனவே, தியாகராஜன், இதே இயக்குநர் ஸ்ரீராம் ராகவனின் ‘ஜானி கத்தார்’ திரைப்படத்தை ‘ஜானி’ என்ற பெயரில் பிரஷாந்த் நாயகனாக நடிக்க ரீமேக் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் பேசுகையில், “அந்தாதுன் கதை ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்டது. நடிகர் பிரஷாந்த் லண்டன் டிரினிடி இசைக் கல்லூரி மாணவர் என்பதாலும், நல்ல கை தேர்ந்த பியானோ கலைஞர் என்பதாலும் இந்த கதாபாத்திரம் அவருக்கு கை வந்த கலையாக இருக்கும்…” என்றார்.
தமிழ் மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ள இப்படத்திற்கு, இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இயக்குநர், பிற நடிகர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
படக் குழு முடிவானவுடன் விரைவில் படப்பிடிப்பும் துவங்கவிருக்கிறது.