“மனைவியின் தாலியை விற்று சம்பளம் கொடுத்தார்..” – தயாரிப்பாளர் கலைஞானம் பற்றி ரஜினிகாந்த் பேச்சு..!

“மனைவியின் தாலியை விற்று சம்பளம் கொடுத்தார்..” – தயாரிப்பாளர் கலைஞானம் பற்றி ரஜினிகாந்த் பேச்சு..!

தமிழ்த் திரையுலகத்தின் மூத்த திரைக்கதாசிரியரும், தயாரிப்பாளருமான கலைஞானத்திற்கான பாராட்டு விழா நேற்று மாலை சென்னை சேப்பாக்கம், கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் தமிழ், கலை. இலக்கியம். பண்பாட்டு பேரவை இந்த நிகழ்ச்சியை நடத்தியது.

இந்த விழாவில் நடிகர் சிவக்குமார், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், கவிஞர் வைரமுத்து, தமிழ்த் திரையுலகத்தின் மூத்த நடிகையான திருமதி கே.ஆர்.விஜயா, மாநில அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர், தயாரிப்பாளர்கள் தாணு, சுரேஷ் காமாட்சி, எஸ்.ஏ.சந்திரசேகரன்,  இயக்குநர்கள் அமீர், ஆர்.கே.செல்வமணி மற்றும் திரையுலகத்தின் மூத்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

Felicitation Function Photos Of Legendary Writer Kalaignanam (7)

இந்த விழாவில் கலைஞானத்தைப் பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, “கலைஞானம் அவர்கள், போன மாதம் 9-ம் தேதி, எனக்கு போன் செஞ்சார். வர்ற 16-ம் தேதி என்னோட   90-வது பிறந்த நாள். நீங்க வாழ்த்து சொல்லணும்ன்னு கேட்டு, என்கிட்ட வாழ்த்து வாங்கினார்.

அப்புறம், ‘இயக்குநர் பாரதிராஜா எனக்கு பெரிய விழா ஏற்பாடு செய்திருக்கிறார்.  நீங்கள் அவசியம் கலந்துக்கணும். நீங்க இல்லைன்னா, அந்த விழா பூர்த்தியாகாது’ அப்படின்னு சொன்னார்.

அதே நாளில் எனக்கு மும்பைல ஷூட்டிங் இருந்தது. அதனால, ‘இல்லைங்க. எனக்கு  அன்றைக்கு சூட்டிங் இருக்கு’ன்னு சொன்னேன். அவரும், ‘இல்லங்க.. இது பத்தி பாரதிராஜா நாளைக்கு உங்ககிட்ட பேசுவாரு’ன்னு  சொன்னார்.

Felicitation Function Photos Of Legendary Writer Kalaignanam (63)

அடுத்த நாள் பாரதிராஜா ‘என்கூட பேசணும்’ன்னு சொல்லி போன்ல மெஸேஜ் அனுப்பியிருந்தார். நானே பாரதிராஜாவுக்கு போன் செஞ்சேன். ‘என்ன தலைவரே எப்படி இருக்கீங்க?’ன்னு கேட்டாரு.  எப்பவும் பாரதிராஜா என்னிடம் தனியாக பேசும்போது, என்னை ‘தலைவரே’ன்னுதான் கூப்பிடுவார். அது வந்து என்னோட ரசிகர்கள், என் மீதான அபிமானத்தை கூப்பிடுற, ‘அந்த’ தலைவர் இல்லை. இது வேற.. நட்புல கூப்பிடுறது.. அதுவும் தனி டோன்ல கூப்பிடுவாரு.

என்னுடைய எந்த படம் நல்லா போனாலும், ஊரே வாழ்த்தி  கொண்டிருக்கும் நேரத்தில், அவர் என்கிட்ட ‘யோவ், பாட்டி வடை சுட்ட கதையை  நீ பண்ணாக்கூட படம் ஓடும்ய்யா…’ என்பார்  அதுக்கும் மேல, இன்னோண்ணும் சொல்லுவாரு, ‘உனக்கு எங்கேயோ மச்சம் இருக்குய்யா’ அப்படிம்பாரு. எங்களோட  நட்பு அந்த அளவுக்கு மிக ஆழமான நட்பு.

பாரதிராஜா சார் சொன்னாங்க.. ‘எம்ஜிஆர், சிவாஜி கணேசனுக்கு எல்லாம், விழா நடத்துனேன்… உனக்கும் மதுரையில் ஒரு விழா நடத்த போறேன். அப்புறம் நீ அரசியலுக்கு வந்த பிறகு கச்சேரிய வச்சுக்கிறேன். அது வேற…’ அப்படின்னு சொன்னாரு.

Felicitation Function Photos Of Legendary Writer Kalaignanam (59)

கருத்துரிமை எல்லோருக்கும் இருக்கு. அது நம்ம நட்புக்கு இடையே எப்பவுமே வராது. நம்ம நட்பு எப்பவுமே முடியாது. நாம் எவ்வளவோ பேரு. புகழ். பணம் சம்பாதிக்கலாம். ஆனால், சம்பாதிக்கவே முடியாதது நண்பர்களை மட்டு்தான்.

அந்த பழைய நண்பர்கள்கிட்ட மட்டும் எந்த ஒரு மனஸ்தாபம் வந்தாலும், உடனே அதை சரி பண்ணிரனும். இல்லைன்னா ரொம்பக் கஷ்டம். அதுவும் வயசான பிறகு, பழைய நண்பர்கள் எப்படி கிடைப்பாங்க…?

பாரதிராஜா தனது ‘தமிழ், கலை. இலக்கியம். பண்பாட்டு பேரவை’ மூலமா பல நல்ல காரியங்களை செஞ்சுகிட்டு வர்றாரு. அதுல மிகவும் நல்ல காரியம், நம்ம கலைஞானம் ஐயாவுக்கு இப்படி அமைச்சர்கள், திரையுலக பிரபலங்கள், மத்தியில் விழா நடத்துவது என்பது. இதனை எவ்வளவு பாராட்டினாலும் பத்தாது.

Felicitation Function Photos Of Legendary Writer Kalaignanam (27)

கலைஞானம்  பற்றி சிவகுமார், பாக்யராஜ்கூட பேசினாங்க. சாண்டோ சின்னப்பா தேவர், எம்ஜிஆர் ஜூனியர் ஆர்டிஸ்டாக இருக்கும்போதே, ‘ஒரு நாள் நீ கண்டிப்பா பெரிய நடிகரா வருவ. அப்ப நான் நீ நடிக்கிற படத்தை தயாரிப்பேன்..’  என்று சொன்னாராம்.

அப்ப அவங்கள சுத்தி உள்ளவங்க எல்லாம் சிரிச்சாங்கலாம். ஆனால், சொன்ன மாதிரியே எம்.ஜி.ஆர். மிகப் பெரிய ஹீரோவா ஆயிட்டாரு. அதேபோல் சின்னப்பா தேவரும் எம்.ஜி.ஆரை ஹீரோவாக வைத்து, ‘தாய்க்குப் பின் தாரம்’ என்ற படத்தைத்  தயாரித்தார்.

சாண்டோ சின்னப்பா தேவர் மிகப் பெரிய முருக பக்தர். அவரிடம் பேசி பழகும் மிகப் பெரிய வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. கடைசியாக அவர் தயாரித்தது என் படம்தான். ‘தாய் மீது சத்தியம்’. என்கிட்ட அடிக்கடி அவர் சொல்வார், ‘நான் உயிரை விட்டால்  சஷ்டி அன்னைக்கு அதுவும் வெள்ளிக்கிழமைல.. என் ஊரு கோயமுத்தூர்லதான் விடுவேன்’ என்று சொன்னார். அவர் சொன்ன மாதிரியே, சஷ்டி அன்னைக்கு அதே வெள்ளிக்கிழமை, அவர் பிறந்த ஊரான கோவையிலேயே உயிரைவிட்டார்.

Felicitation Function Photos Of Legendary Writer Kalaignanam (77)

அவருடைய கதை இலாகாவில் பணியாற்றியவர்கள்தான் கலைஞானம்,  தூயவன், மாரா  போன்றவர்கள் எல்லாரும். சென்னைல ஏதாவது ஒரு தியேட்டர்ல புதிதா ஆங்கில படம் போட்டாங்கன்னா இவங்க எல்லாம் ஒண்ணா போயி அந்தப் படத்தை பார்ப்பாங்க.

இடைவேளையில்கூட  யாரும் எதுவும் பேசிக்க மாட்டாங்க. அடுத்த நாள் காலையில, இவங்க எல்லாம் அந்த படத்தை பத்தி.. ஆளுக்கு ஒரு கதை சொல்வாங்க. ஏன்னா.. இவங்க யாருக்குமே ஆங்கிலம் தெரியாது.

அஞ்சு பேரும், அந்தப் படத்தைப் பத்தி அஞ்சு கதை சொல்லி அதிலிருந்து ஒரு கதையை உருவாக்குவாங்க. அந்த மாதிரி கலையை ரசித்து, சிரித்து என்ஜாய் பண்ணி, நல்ல, நல்ல படங்களை நம்ம தமிழ் சினிமாவுக்குக் குடுத்தாங்க.

என்னை கதாநாயகனாக்கி கலைஞானம் படம் தயாரித்தார். அப்போ எனக்கு கதாநாயகனாகும் எண்ணமே இல்லை. வில்லனாகத்தான் நடித்துக் கொண்டிருந்தேன்.

Felicitation Function Photos Of Legendary Writer Kalaignanam (81)

அந்த நேரத்துல கலைஞானம் ஐயா வந்து படத்துல நடிக்கக் கேட்டப்பவே முதல்ல நான் மறுத்தேன். அப்போ என்கூட இருந்த நண்பன் நட்ராஜ் ‘இந்த ஒரு படத்துல நடி. இது சக்ஸஸ் ஆச்சுன்னா அப்படியே தொடரலாம். இல்லைன்னா விட்ரலாம்’ன்னு ஐடியா கொடுத்தான்.

எனக்கு அப்பவும் நம்பிக்கையில்லை. சரி இதை அவாய்ட் பண்றதுக்கு ஒரே வழி அதிகச் சம்பளம் கேக்குறதுதான்னு நினைச்சேன். நான் அப்போ முப்பத்தைந்தாயிரம் ரூபாய்தான் சம்பளமா வாங்கிட்டிருந்தேன். இந்தப் படத்துல நடிக்க சம்பளமாக ஐம்பதாயிரம் ரூபாயைக் கேட்டேன்.

‘சரி தர்றேன்’னுட்டு கலைஞானம் ஐயா போயிட்டாரு. ஆனால் அடுத்த நாளே வந்து அந்தப் பணத்தைக் கொடுத்திட்டாரு. என்னால தப்பிக்கவே முடியல. எனக்குக் கொடுத்த அந்தச் சம்பளமே, அவங்க மனைவியோட தாலியை வித்துதான் என்பது எனக்கு கடைசியாத்தான் தெரிந்தது.

நான் முதன்முதல்ல பார்த்த சினிமா ‘பாதாள பைரவி’. நான் நடித்த முதல் படமான ‘அபூர்வ ராகங்கள்’ல நான் நடித்த முதல் காட்சில நான் பேசுன முதல் வசனமே, ‘பைரவி வீடு இதுதானே?’ன்றது.. அந்தச் சூழல்லதான் இவங்க வந்து என்னை ஹீரோவா புக் செஞ்ச படத்தோடு பேரும் ‘பைரவி’. இது எல்லாத்துக்கும் ஏதோ ஒண்ணுக்கொண்ணு தொடர்பு இருக்குற மாதிரி.. எல்லாமே அமைஞ்சது. அதனால ‘பைரவி’ என்ற படத் தலைப்புக்காகவே அந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்புக் கொண்டேன்.

ஷூட்டிங்கிற்கு போனப்ப என்னோட கருப்பு சட்டை, தாடி கெட்டப்பை பார்த்துவிட்டு, ’இது ரொம்ப நல்லாருக்கு…’ என்றார். உடனேயே ஒரு பாம்பை பிடிச்சிட்டு வரச் சொன்னாங்க.. அந்தப் பாம்பைப் கையில் பிடித்து ‘போஸ்’ கொடுக்கச் சொன்னார். பாம்பு படமே எடுக்கலை.. பட்டுன்னு அதைத் தலைல தட்டி பாம்பெடுக்க வைச்சு.. அதை அப்படியே ஸ்டில்ஸ் எடுத்தாங்க.. ‘இதுதான் படம் ரிலீசாகும்போது போஸ்டரா இருக்கப் போகுது’ என்றார் கலைஞானம்.

அந்தப் படத்தை கலைப்புலி தாணுதான் ரிலீஸ் செஞ்சார்.. அப்போ என்னைக் கேட்காமலேயே படத்துல டைட்டில்ல என் பேருக்கு முன்னாடி, ‘கிரேட் சூப்பர் ஸ்டார்’ என்று போட்டிருந்தாங்க. ‘ஐயையோ.. இதெல்லாம் வேணாங்க..’ என்று சொல்லி நான் மறுத்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை. அப்படியும் விடாப்பிடியா சண்டை போட்டு, அந்த ‘கிரேட்’ என்ற வார்த்தையை மட்டும் தூக்க வைச்சேன்.

படம் ரிலீஸாச்சு.. அதுக்கு மறுநாள் கலைஞானம் என்னைத் தேடி வந்தார். ‘சட்டையைப் போட்டுட்டு வாங்க. ஒரு இடத்துக்குப் போகணும்’ என்றார். ‘எங்க?’ன்னு கேட்டேன். ‘வாங்க சொல்றேன்’ என்று சொல்லி கட்டாயப்படுத்தி என்னைக் கூப்பிட்டுப் போனார்.

நாங்க போனது ‘பைரவி’ படம் ஓடிய ‘ராஜகுமாரி தியேட்டருக்கு’. படம் ஹவுஸ்ஃபுல். இரண்டு ஷோவுக்கான ஆடியன்ஸ் வெளியில் வாசலில் காத்திருந்தார்கள். தியேட்டருக்கு உள்ளே சென்றபோது க்ளைமாக்ஸ் காட்சி ஓடிக்கிட்டிருந்தது. அதுக்கு செம கை தட்டல். அந்த மகிழ்ச்சில வெளியே வந்ததும், என்னை அடையாளம் கண்டுக்கிட்ட ரசிகர்கள் என்னை அப்படியே தங்கள் கைகளில் தூக்கிவிட்டார்கள்.

இதன் பிறகு, என்னை பெரிய, பெரிய தயாரிப்பாளர்கள் சூழ்ந்து கொண்டார்கள். நானும் ஓடிக் கொண்டே இருந்தேன். நான் ஒரு முட்டாள். ‘அடுத்து என்ன படம் பண்றீங்க?’ன்னு கலைஞானத்திடம் கேட்டிருக்கலாம். அவரும் கேட்கவில்லை. அவருக்குக் கோபம் ஜாஸ்தி. தன்மானம் ஜாஸ்தி. ஆனால் நான் தயாராகத்தான் இருந்தேன்.

Felicitation Function Photos Of Legendary Writer Kalaignanam (6)

வாழ்க்கைல எல்லாருக்குமே பிரச்சினைகள் இருக்கும். பிரச்சினையில்லாதவர்களே உலகத்தில் இல்லை. ஒரு சாமியார்கிட்ட ஒருத்தன் வந்து ‘எனக்கு பிரச்சினை மேல பிரச்சினையா வந்துக்கிட்டேயிருக்கு சாமி.. இதுக்கு ஏதாவது வழி சொல்லுங்க சாமி’ன்னு கேட்டான்.. அந்த சாமியார் வீட்ல மாட்டுக் கொட்டகைல ஏழெட்டு மாடு இருந்தது. சாமியார் வந்தவன்கிட்ட ‘இன்னிக்கு ராத்திரி நீ இங்கேயே இருந்து இந்த மாடுகளையெல்லாம் தூங்க வை. நான் காலைல வந்து பார்க்குறேன். உன் கேள்விக்கும் பதில் சொல்றேன்’னும் சொல்லிட்டுப் போயிட்டாரு.

காலைல சாமியார் வந்து அவன்கிட்ட ‘என்னப்பா.. கண்ணெல்லாம் சிவந்து போயிருக்கு.. மாடெல்லாம் தூங்குச்சா?’ என்று கேட்டிருக்காரு. அவன் சொல்றான்.. ‘எங்க சாமி தூங்குச்சுக.. ஒண்ணு தூங்குனா.. இன்னொரு எந்திரிக்குது.. இன்னொரு எந்திரிச்சு நிக்குது.. அதை உக்கார வைக்குறதுக்குள்ள இன்னொன்னும் எந்திரிச்சிருச்சு.. நானும் ராத்திரி முழுக்க தூங்கல சாமி’ன்னான். ‘அதாம்பா வாழ்க்கை.. ஒரு பிரச்சினை முடிஞ்சா அடுத்தப் பிரச்சினையும் வரும்.. அதையும் சமாளிக்கணும்..இதுதான் வாழ்க்கை’ன்னு சொல்லி அனுப்பினாராம்.

Felicitation Function Photos Of Legendary Writer Kalaignanam (20)

இங்கே கதை ஆசிரியர்களுக்கு ஒரு சாபம் இருக்கு. எத்தனை கோடி செலவழித்து ஒரு படத்தை எடுத்தாலும் அதில் நல்ல கதை இல்லை என்றால்  அது ஓடாது. படத்தின் அஸ்திவாரமே கதைதான். ஆனால் அந்தக் கதையை எழுதிய கதாசிரியர்களுக்கு ஒரு மரியாதை, அங்கீகாரம், சம்பளம் சரியாகவே கிடைக்காது. அது அவர்களுக்கு மட்டுமேயான சாபம்.

சினிமா கதாசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் புராண சரித்திர கதைகளை படமாக்கியதால் திரைக்கதை ஆசிரியர்களுக்கு மரியாதை இல்லாமல் இருந்தது. சமூக கதைகளை படமாக்கிய பிறகும் அந்த வழக்கமே தொடர்ந்து விட்டது.

‘மலைக்கள்ளன்’, ‘சந்திரலேகா’, நான் நடித்த ‘பாட்ஷா’ உள்ளிட்ட பெரிய படங்களின் கதாசிரியர்கள் யார் என்றே தெரியாது. அந்த நிலைமைகள் மாற வேண்டும்.

டைட்டில் கார்டில் தயாரிப்பாளர், இயக்குநருக்கு அடுத்து, கதாசிரியரின் பெயர் போட்டு அவர்களுக்கு மரியாதை கொடுத்தீங்கன்னா..  அவங்களுக்கு பெரிய மரியாதை கிடைக்கும்.

இப்ப சிவகுமார் சொன்னார்.. ‘கலைஞானம் இன்னும் வாடகை வீட்டில்தான் இருக்கிறார்’ என்று. இது ரொம்பவே வருத்தமான விஷயம். அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு  பெரிய மனசு. ‘சி.எம்.கிட்ட சொல்லி அவருக்கு வீடு வாங்கி கொடுக்கிறேன்’னு சொன்னாங்க. அவருக்கு எனது நன்றி.

ஆனால், அந்த வாய்ப்பை நான் அரசாங்கத்துக்கு கொடுக்க மாட்டேன். பாக்யராஜ் அவர்களே,  நாளைக்கே  கலைஞானம் ஐயாவுக்கு ஒரு நல்ல வீடா பாருங்க. நெக்ஸ்ட்  அவர் சொந்த வீட்டில்தான் இருக்கணும். அவர் உடம்பில் இருந்து மூச்சு வெளியே போகும்போது, என்னோட வீட்டுல இருந்துதான் போகணும்.

தேங்க்யூ சிவகுமார் சார். கலைஞானம் ஸார் எதையும் கேட்க மாட்டார். இது ஆண்டவன் மூலமா சிவகுமாரை  வச்சு என்கிட்ட சொல்ல வச்சிருக்காரு. ரொம்ப ரொம்ப நன்றி. கலைஞானம் ஸார் இன்னும் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் சுகமா இருக்கணும்…” என்று சொல்லி முடித்தார் ரஜினிகாந்த்.

Our Score