‘Childrens Of Heaven’ – ஈரானிய திரைப்படம் தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது..!

‘Childrens Of Heaven’ – ஈரானிய திரைப்படம் தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது..!

உலகப் புகழ் பெற்ற ஈரானிய திரைப்படமான 'சில்ட்ரன்ஸ் ஆஃப் ஹெவன்' (Childrens Of Heaven) திரைப்படம், இப்போது முறைப்படி மொழி மாற்ற உரிமம் பெற்று தமிழ், தெலுங்கில் ரீ-மேக் செய்யப்படுகிறது. படத்திற்கு ‘அக்கா குருவி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தை மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களான 11 வயது அண்ணன், 7வயது தங்கை கதாபாத்திரங்களுக்காக 200-க்கும் மேற்பட்டவர்களை தேர்வு நடத்தி இறுதியாக மாஹின் என்ற சிறுவனும், டாவியா என்ற சிறுமியும் தேர்வு செய்யப்பட்டு நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கிளாசிக்கல் டான்ஸரான தாரா ஜெகதாம்பா அம்மா கதாபாத்திரத்திலும், செந்தில்குமார் அப்பா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மற்றும் பிரதான கதாபாத்திரமாக ஜோடி 'ஷூ' ஒன்று இடம் பெறுகிறது. 

ஒளிப்பதிவு - உப்பல் வி.நாயனார், கலை இயக்கம் - வீரசமர், படத் தொகுப்பு - மணிகண்டன் சிவகுமார்.

இந்தப் படத்தை இயக்குநர் சாமி இயக்குகிறார். இவர் ஏற்கெனவே 'மிருகம்', 'கங்காரு' ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் இவர் தமிழ், தெலுங்கு மொழிகளுக்கேற்ப சில காட்சிகளை புதிதாக எழுதி இணைத்துள்ளார்.

Children_of_heaven-poster

'சில்ட்ரன்ஸ் ஆஃப் ஹெவன்' திரைப்படம் 1998-ம் ஆண்டு ஆஸ்கர்  விருது விழாவில் பங்கு பெற்ற படமாகும். மேலும், புகழ் பெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களான  Warsaw International film festival-லில் ஆடியன்ஸ் அவார்ட்,  சிங்கப்பூர் இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல்  விழாவில் சில்வர் ஸ்கிரீன் அவார்ட், O.U.L.U இன்டர்நேஷனல் சில்ட்ரன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் அவார்டு விழாவில் C.I.F.E.J. விருது, நியூபோர்ட் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் Rhode island விழாவில் – சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்று 10-க்கும் மேற்பட்ட சர்வதேச பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை வென்று அனைவரையும் நெகிழ வைத்தது.  

இந்த ‘அக்கா குருவி’ படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் அருகே இயற்கை எழில் கொஞ்சும் ஊரான பூம்பாறை கிராமம் போன்ற இடங்களில் 55 நாட்கள் நடைபெற்றது. ஒவ்வொரு நாள் படப்பிடிப்பையும் மூன்று கேமராக்கள் கொண்டு படமாக்கியுள்ளார்கள்.

தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.