full screen background image

“அக்கா குருவி’ படம் மாதிரி படங்கள் தமிழில் தொடர்ந்து வர வேண்டும்..” இளையராஜா பாராட்டு..!

“அக்கா குருவி’ படம் மாதிரி படங்கள் தமிழில் தொடர்ந்து வர வேண்டும்..” இளையராஜா பாராட்டு..!

மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்க, இயக்குநர் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம் ‘அக்கா குருவி’.

இசை ஞானி’ இளையராஜாவின் இசையில் தமிழ் சினிமாவின் தரமான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தை,  PVR பிக்சர்ஸ் நிறுவனம் வரும் மே 6-ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

உலகப் புகழ் பெற்ற திரைப்படமான ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தின் அதிகாரப்பூர்வ மறுபதிப்பாக இப்படம் உருவாகியுள்ளது. ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தின் ஒரிஜினல் கெடாமல் இந்த ‘அக்கா குருவி’யைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் சாமி.

ஒரு ஏழை குடும்பத்தில் வசிக்கும் அண்ணன், தங்கை என இரு குழந்தைகளின் கதையாக,  மனதை உலுக்கும் அற்புத படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெறுகிறது. மூன்று பாடல்களையும் இளையராஜாவே எழுதியுள்ளார்.  

‘அக்கா குருவி’ படம் குறித்து இளையராஜா பேசும்போது, “சாதாரணமான நாட்களில் நான் உலக சினிமாக்களை பார்ப்பது வழக்கம், நான் இசையமைக்கும் சினிமாவை பார்ப்பதோடு சரி. மற்ற சினிமாக்களை பார்க்க எனக்கு நேரம் கிடைத்ததில்லை. ஆனால், உலக சினிமாக்களை பார்ப்பதில் எனக்கு ஆர்வம் இருந்தது.

அப்படி ஒரு நாள் இந்த சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தைப் பார்த்தபோது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. ஒரு சின்ன ஷூவை வைத்துக் கொண்டு, சிறு குழந்தைகளின் உலகத்தில்… அவர்கள் எப்படி அந்தப் பிரச்சினையை சமாளிக்கிறார்கள் என்பதை  மிக தத்ரூபமாக, இப்படி ஒரு அற்புதமான சினிமாவாக தந்துள்ளார்களே என்று எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

நம் தமிழ்நாட்டில்  ஏன் இப்படி படங்கள் எடுப்பதில்லை..? ஏன் வருவதில்லை…? என்ற வருத்தமும் எனக்குள் இருந்தது. ஒரு கலைஞனுக்கு  உயர்வான சிந்தனை தோன்றினால்தான்… அந்த எண்ணம் அவனை தாக்கினால்தான்…  அவனால் உயர்வான ஒன்றை உருவாக்க முடியும்.  இப்படி படம் எடுக்க முடியும். அது நம் இயக்குநர்களிடம் இல்லை.

ஆனால், இந்த இயக்குநர் சாமி அதே படத்தை, நம்ம ஊரில் எடுத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து… நம்ம ஊருக்கு தகுந்தவாறு அந்தக் கதையை மாற்றி, ஒரிஜினல் படத்தைவிட சுவாரஸ்யமாக, அருமையாக எடுத்திருக்கிறார்.

நான் இந்த மாதிரி புது இயக்குநர்கள் வர வேண்டும் என்று நினைப்பவன். புதிய இயக்குநர்களுக்கு நான் ஆதரவு கொடுத்து அவர்களுக்கு இசையமைப்பதற்கும் காரணம் அதுதான்.  மணிரத்னம் முதல் பல புதிய இயக்குநர்களுக்கு நான் ஆர்வத்துடன் இசையமைத்ததன் காரணமும் இதுதான்.

தமிழில் நல்ல படைப்புகள் வர வேண்டும். இந்தப் படங்களை பொதுமக்கள் ஊக்குவிக்க வேண்டும். இது மாதிரி படங்கள் ஜெயிக்க வேண்டும். மக்களின் ரசனை வளர வேண்டும்.. இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்..” என்றார்.

 
Our Score