டாக்டர். ஐசரி கே. கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், அர்ஜுன் தேவ் அவர்களின் வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து, இந்த ‘அகத்தியா’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளது.
பாடலாசிரியர் – நடிகர் – இயக்குநர் பா.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ‘அகத்தியா’ திரைப்படத்தில் ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா, ராதாரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, எட்வர்ட், மெடில்டா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஷான் லோகேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை சண்முகம் மேற்கொண்டிருக்கிறார்.
ஃபேண்டஸி ஹாரர் திரில்லர் ஜானரில் கமர்ஷியல் என்டர்டெய்னராக தயாரான இந்த ‘அகத்தியா’ திரைப்படம் முதல் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய இந்திய மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
சினிமாவில் கலை இயக்குநராக இருக்கிறார் படத்தின் நாயகனான ஜீவா. தான் அறிமுகம் ஆகும் முதல் படத்தின் படப்பிடிப்புக்காக புதுச்சேரியில் ஒரு பழைய பாழடைந்த பங்களாவை வாடகைக்கு எடுத்து அதில் தன்னுடைய சொந்த பணத்தையும் போட்டு அந்த படத்திற்கான அரங்குகளை அமைத்திருக்கிறார் ஜீவா.
இந்த நேரத்தில் அந்தப் படத்தின் ஹீரோவும், ஹீரோயினும் திடீர் திருமணம் செய்து கொண்டு ஊரை விட்டு ஓடிவிட படத்தின் சூட்டிங் நின்று போகிறது. தயாரிப்பாளர் ஜீவாவை தொடர்பு கொண்டு “ஷூட்டிங் கேன்சலாயிருச்சு.. போட்ட செட்டை கலைத்துவிட்டு சென்னை வந்து சேருங்கள்..” என்கிறார்.
சொந்த பணத்தை போட்டு அந்த செட்டை அமைத்து இருப்பதால் செட்டை கலைத்தால் மொத்தப் பணமும் காலியாகும் என்பதை உணர்ந்த ஜீவா, அந்த அரங்கத்தை பேய் பங்களாவாக மாற்றி, பொதுமக்கள் வந்து பார்க்கின்ற வகையில் ஒரு சுற்றுலா தளமாக மாற்றியமைக்கிறார்.
இதற்கு அவருடைய காதலி ராசி கண்ணாவும் உதவி செய்கிறார். அந்த பேய் பங்களாவிற்குள் ஏற்கனவே அமைக்கப்பட்ட செட்டுக்குள் விதவிதமான பேய்களை முன் வைத்து சில ஷோக்களை ஜீவா, ராசி கண்ணா கூட்டணி நடத்திக் காட்டுகிறார்கள். இதனால் ரசிகர்களின் ஆதரவு பெருக கூட்டம் அலைமோதுகிறது. பணமும் நிறையவே சேர்கிறது.
இந்த நேரத்தில் அந்த பங்களாவிற்குள் தன்னுடைய காதலியுடன் வந்த ஒரு இளைஞன் மாயமாக மறைகிறான். அவனை தேடுகிறார்கள் ஜீவா குழுவினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக போலீசில் புகார் செய்ய.. போலீஸ் வந்து தேடிப் பார்த்துவிட்டு அந்தப் பங்களாவை சீல் வைத்து விடுகிறார்கள்.
அந்த பங்களாவிற்குள் பேய்களின் நடமாட்டம் இருப்பதாக ஜீவாவின் நண்பர்களும் சொல்கிறார்கள். இதையடுத்து அந்த பங்களா எப்படி கட்டப்பட்டது.. அதில் யார் குடியிருந்தார்கள்.. அதன் கதை என்ன.. என்பது பற்றி தேடுதல் வேட்டையில் இறங்குகிறார் ஜீவா. இப்பொழுதுதான் அந்த பங்களா பற்றிய முழு விவரமும் ஜீவாவுக்கு தெரிய வருகிறது.
1800-களில் பாண்டிச்சேரி பிரான்ஸ் நாட்டின் காலனி ஆதிக்கத்தின்கீழ் இருந்த பொழுது டூப்ளெக்ஸ் துரை என்பவர் பாண்டிச்சேரியின் கவர்னராக இருந்தார். அவருடைய ஆட்சிக் காலத்தில் அவருடைய மாளிகையாத்தான் அந்த பங்களா இருந்தது என்பதும் தெரிய வருகிறது.
அந்தக் காலகட்டத்தில் பிரான்சு ராணியிடம் இருந்து நேரடியாக ஒரு கடிதம் பெற்றுக் கொண்டு சித்த மருத்துவரான அர்ஜுன் பாரிஸில் இருந்து பாண்டிச்சேரிக்கு வருகிறார். பிரான்ஸ் ராணி கேட்டுக் கொண்டதற்கு இணங்க கேன்சர் நோயை முறியடிக்கும் ஒரு மருந்தை இங்கே இருக்கின்ற மூலிகை மூலமாக தயாரித்து கொண்டு வருவதாக அர்ஜுன் சொல்லியிருக்கிறார் அதனால் அந்த மூலிகை மருந்தைக் கண்டுபிடிக்கும் வேலையில் இறங்குகிறார் அர்ஜுன்.
அதேசமயம் எழுந்து நடமாட முடியாமல் சக்கர நாற்காலிகயில் அமர்ந்திருக்கும் டூப்ளெக்ஸ் துரையின் தங்கை மாட்டில்டாவையும் எழுந்து நடக்க வைக்கிறார் அர்ஜூன். இதனால் கவர்னரின் குடும்பத்தினர் அர்ஜுன் மீது மிகுந்த பாசமாக இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து அர்ஜுனுக்கும் மாடில்லாவுக்கும் இடையே காதலும் உருவாகிறது.
இந்தக் காதலின் இறுதி கட்டத்தில் மருந்தை கண்டுபிடித்து விட்டதால் தான் பாரீசுக்கு திகும்பிச் செல்வதாக அர்ஜுன் சொல்ல அந்த நேரத்தில் கவர்னர் டூப்ளெக்ஸ் துரை எடுக்கும் ஒரு முடிவு அனைத்தையுமே தலைகீழாக மாற்றிப் போடுகிறது.
அதன் விளைவாகத்தான் இப்பொழுதும் அந்த பங்களாவில் பேய்களின் நடமாட்டமும், அட்டூழியமும் நடப்பதாக ஜீவா உணருகிறார்.
இதற்குப் பிறகு என்ன நடந்தது.. அந்த வீட்டில் இருந்து இந்த பேய்களை ஜீவா விரட்டினாரா.. இல்லையா.. என்பதுதான் இந்தப் படத்தின் மீதி கதை.
ஜீவாவுக்கு ஹீரோயிசத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு இந்தப் படத்தில் மிகவும் குறைவாக இருந்தாலும் தன்னுடைய அனுபவ நடிப்பால் கிடைத்த இடங்களில் எல்லாம் தேவையான நடிப்பை கொடுத்து அனைத்தையும் சரி செய்து விட்டார். தன்னுடைய அம்மாவுக்காக அவர் எதிர்கொள்ளும் ஆபத்துகளும் ஒரு நெகிழ்ச்சியான அனுபவத்தை நமக்கு கொடுக்கின்றன.
சித்த மருத்துவராக வரும் அர்ஜுன் அந்த கதாபாத்திரமாகவே மாறி படத்துக்கு மிகவும் பலம் சேர்த்திருக்கிறார்.
ராசி கண்ணா வழக்கமான ஹீரோயின் காதலியாகவே படம் முழுவதும் வலம் வந்திருக்கிறார். பாடல் காட்சிகளில் ஒரு ஹீரோயின் என்ன செய்வாரோ அதையேதான் இந்தப் படத்திலும் சாதாரணமாக செய்துவிட்டு போயிருக்கிறார்.
இன்னொரு ஹீரோயினான மாடில்டா தன்னுடைய அழுத்தமான நடிப்பின் மூலம் தன்னுடைய தேர்வுக்கு நியாயம் கற்பித்துள்ளார். வெளிநாட்டு அழகி என்பதெல்லாம் இல்லாமல் தமிழ் படத்திற்கே உரித்தான நுணுக்கமான உணர்வுகளயும் காட்டி நடித்திருக்கிறார்.
டூப்ளெக்ஸ் துரையாக நடித்திருக்கும் எட்வர்டின் கொடூரத்தனம் நமக்கு பயத்தையும் தருகிறது. அதே சமயம் அவருடைய நடிப்பும் பாராட்டுக்குரியது.
ஷாரா, ரெடின் கிங்ஸ்லி இருவரும் வழக்கத்துக்கு மாறாக அடக்கி வாசித்து நல்ல பேர் வாங்கி இருக்கிறார்கள்.
ஜீவாவின் அம்மா, அப்பாவாக நடித்திருக்கும் ரோகிணியும், சார்லியும் அந்தப் பழைய கதையில் மிக உருக்கமாக நடித்து சபாஷ் பெறுகிறார்கள்.
அந்த வீட்டுக்குள் அவ்வப்பொழுது பேயாக வந்து கரைச்சலை கொடுக்கும் ராதாரவி, மேலும் நிழல்கள் ரவி, யோகி பாபு மற்றவர்களும் தங்களது கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை காண்பித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் தீபக்குமார் பதிவின் ஒளிப்பதிவினை அபாரம் என்றே சொல்லலாம். படத்தின் துவக்க காட்சிகளிலிருந்து இறுதி வரையில் வெயில் கொடூரத்தை அப்படியே படத்தில் பதிவாகி இருக்கிறார். கடந்த கால நிகழ்வுகளில் மட்டும் கிரேடிங் எல்லாம் செய்து கொஞ்சம் கலராகவும், அழகாகவும் படம் பிடித்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ‘என் இனிய பொன் நிலாவே’ ரீமிக்ஸ் பாடல் செவிக்கும், கண்களுக்கும் விருந்தாக படமாக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவத்தின் மகிமையைச் சொல்லும்விதமாக உருவாக்கப்பட்டிருக்கும் இன்னொரு பாடல் அபாரம். இந்த வருடத்தின் மிகச் சிறந்த பாடலாக அதை நாம் சொல்லலாம்.
பின்னணி இசையிலும் யுவன் சங்கர் ராஜா தன்னுடைய ஆளுமையை காண்பித்து படத்தை விறுவிறுப்பாக நகர்த்துவதற்கு உதவி இருக்கிறார்.
கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை ஹாலிவுட் தரத்தில் மிக அழகாக படமாக்கி இருக்கிறார்கள். அதற்காகவே ஒரு தனி பாராட்டுக்கள்.
கொஞ்சம் சீரியஸ் படம் என்றாலும் முதல் பாதியில் காமெடியாக படத்தைக் கொண்டு சென்றிருப்பதால், அதன் பின்பு திடீரென்று வந்த சீரியஸ் கதையை நம்முடைய மனதில் தக்க வைப்பதற்கு நம்மால் முடியவில்லை என்பது வருத்தமான ஒரு விஷயம்.
நம்முடைய தமிழர்களின் பாரம்பரியமான சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை சொல்லும்விதமாக இந்த படத்தை எடுத்துக் கொடுத்திருக்கும் இயக்குநர் பா.விஜய்க்கு நமது பாராட்டுக்கள்.
படத்தின் கதை கரு சீரியசாக இருந்தாலும் இன்றைய டிரெண்ட்டிங்கின்படி காமெடி, திகில், சுவாரஸ்யம், அம்மா சென்டிமென்ட் எல்லாவற்றையும் கலந்து ஒரு ஜனநாயகமான பேய்களின் படத்தை குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
நிச்சயம் இந்தப் படத்தை குடும்பத்தோடு பார்த்து ரசிக்கலாம்.
RATING : 3.5 / 5









