full screen background image

சப்தம் – சினிமா விமர்சனம்

சப்தம் – சினிமா விமர்சனம்

Aalpha Frames நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சிவா இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

ஈரம்படம் மூலம் அறிமுகமான இயக்குநர் அறிவழகன், தனது முதல் பட ஹீரோவான ஆதியுடன் இப்படத்தில் இணைகிறார். மேலும் லட்சுமி மேனன், சிம்ரன், லைலா, கோபி கண்ணதாசன், ரெடின் கிங்ஸ்லி, ராஜீவ் மேனன், அபிநயா மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ஈரம்படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சப்தம்படத்தை திரைக்கதை எழுதி இயக்குகிறார் இயக்குநர் அறிவழகன்.

மூணாறு அருகே இருக்கும் ஒரு மருத்துவக் கல்லூரியில் இரண்டு மாணவிகள், ஒரு மாணவர் என்று மூன்று பேர் மர்மமான முறையில் மரணம் அடைகின்றனர். இந்த மரணத்திற்கு ஒரு அமானுஷ்ய சக்தி தான் காரணம் என்று கல்லூரியில் பேசிக் கொள்கிறார்கள்.

இது உண்மையா என்பதை கண்டுபிடிக்க அமானுஷ்யங்கள் பற்றி ஆய்வு செய்து வரும் நிபுணரான ஆதியை மும்பையில் இருந்து வரவழைக்கிறது கல்லூரியின் நிர்வாகம்.

கல்லூரிக்கு வரும் ஆதி, இந்த மர்ம மரணங்கள் குறித்து தன்னுடைய விசாரணையை தொடர்கிறார். அவர் விசாரணையைத் தொடர, தொடர பல அதிர்ச்சிகரமான தகவல்கள் அவருக்கு கிடைக்கின்றன.

அதே கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் லட்சுமி மேன்னின் துணையுடன் விசாரணையில் களமிறங்குகிறார் ஆதி. அப்பொழுது 42 குழந்தைகளின் ஆன்மாக்கள்தான் இந்தத் தற்கொலைகளுக்கெல்லாம் மூல காரணம் என்பது ஆதிக்கு தெரிய வருகிறது.

யார் அந்த 42 குழந்தைகள்… அவர்களுக்கும் இந்த மூன்று பேரின் மர்ம மரணத்திற்கும் என்ன தொடர்பு.. கடைசியில் என்ன ஆனது.. தற்கொலைகள் நின்றனவா.. என்பதுதான் இந்தப் படத்தின் மீதி கதை.

ஈரம் படத்தில் தண்ணீர் மூலமாக பேய்களின் நடமாட்டத்தை சொல்லி நம்மை பயமுறுத்திய இயக்குநர் அறிவழகன், இந்தப் படத்தில் சவுண்டு என்னும் ஒலியின் மூலமாக பேய்களை ஆரவாரம் செய்ய வைத்து நம்முடைய காதுகளோடு, நம்மையும் சேர்த்து பதம் பார்த்திருக்கிறார். சப்தங்கள் மூலமாக ரத்தத்தை உறைய வைக்கும்படியான திரைக்கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர்.

பாராநார்மல் இன்வெஸ்டிகேட்டர் வேடத்தில் நடித்திருக்கும் ஆதி படத்தை முழுவதுமாக தான் ஒருவனாகவே தாங்கிப் படித்திருக்கிறார்.

ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து கொண்டே இருக்கும்பொழுது அவர் படுகின்ற பதட்டமும் பலரும் தன்னை அவமானப்படுத்தினாலும் அதைக் கண்டுகொள்ளாமல் இந்தப் பிரச்சனையின் மூல காரணத்தை கண்டறிந்தே தீர வேண்டும் என்கின்ற வெறியில் அவர் காட்டுகின்ற முனைப்பும்… கிளைமாக்ஸ் கட்சியில் அவருடைய படபடப்பான நடிப்பும் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது.

லஷ்மி மேனனும் கடைசியாக அந்தப் பேய்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் காட்சியில் அவருடைய நடிப்பு சிறப்பு. மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்காக புதிய இசையை கண்டுபிடித்து அவர்களுக்கு ஒரு வாழ்க்கை அமைத்துக் கொடுக்க முயலும் சிம்ரனும் நம்மைக் கவர்ந்திருக்கிறார்.

திடீரென்று வில்லியாக வரும் லைலா படத்தில் ஒரு திடீர் ஆச்சரியத்தை  ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார். அவருடைய வில்லத்தனம் நிச்சயம் நாம் எதிர்பாராதது. ஆனால் மிகவும் அழகானது. இதுவரையில் லைலாவை சிரித்தே பார்த்து பழகிவிட்ட நமக்கு அவரை வில்லியாக பார்க்கும்பொழுது ஒரு வித்தியாசத்தை உணர்கிறோம். அந்த அளவுக்கு மிக சிறப்பான நடிப்பை இந்தப் படத்தில் காண்பித்திருக்கிறார் லைலா.

ராஜிவ் மேனன் அமைதியான நடிப்பினை கொடுத்திருக்கிறார். இன்னொரு பக்கம் ரெடின் கிங்ஸ்லி அவ்வப்போது லைட்டாக நம்மை சிரிக்க வைக்க போராடி இருக்கிறார். நண்பனாக நடித்த விவேக் பிரசன்னா, சவப்பெட்டி தயாரிக்கும் எம்.எஸ்.பாஸ்கர், கௌரவ வேடத்தில் நடித்திருக்கும் நாடோடிகள் அபிநயா ஆகியோரும் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள்.

முழு நீள சஸ்பென்ஸ், ஹாரர் திரைப்படம் இது என்பதால் முதல் காட்சியிலிருந்து கடைசிவரையில் படத்தின் விறுவிறுப்புக்கு ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன், மிகப் பெரிய அளவுக்கு உதவியுள்ளார்.

சொல்லப் போனால் இந்த படத்தின் ஹீரோவே படத்தின் ஒளிப்பதிவாளர்தான். அவருடைய ஒவ்வொரு காட்சி கோணங்களும், அவ்வளவு அழகாக இருக்கிறது. அதேபோல் பயமுறுத்தக்கூடிய காட்சிகளிலும் கேமராவின் பங்களிப்பும், இசையும் சேர்ந்து நம்மை பயமுறுத்தியுள்ளது.

இந்த படத்தின் மைய கருவே சப்தம் என்பதால் சவுண்ட் மிக்ஸிங்கையும், சவுண்ட் ரெக்கார்டிங்கையும் அசத்தலாக செய்து இருக்கிறார்கள். ஒரு சாதாரண மர இலை அசையும் சப்தத்தைக்கூட மிக அழகாக பதிவு செய்திருக்கிறார்கள். அந்த வகையில் தொழில் நுட்பத்தில் இந்தப் படம் மிகச் சிறப்பானது என்பதில் சந்தேகம் இல்லை. பின்னணி இசையிலும் அடித்து ஆடியிருக்கிறார் இசையமைப்பாளர் தமன்.

இந்தப் படத்தில் நமக்கு இருக்கும் ஒரே ஒரு பிரச்சனை, படத்தில் மிக அதிகமாக பேசப்பட்டிருக்கும் ஆங்கில வசனங்களும், ஒலிப்பதிவும்தான். பல இடங்களில் சவுண்ட் மிகவும் குறைவான நிலையில் வசனங்கள் கேட்பதாலும், அதிகப்படியான ஆங்கில வசனங்களால் என்ன பேசுகிறார்கள்… என்ன நடந்தது.. என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

கடைசியிலும் இந்தப் படத்தின் கதைதான் என்ன என்பதை நம்மால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. குத்துமதிப்பாக இதுதான் போலிருக்கிறது என்று நாம் நினைத்துக் கொண்டு வெளியில் வருகிறோம். இந்தத் தவறை இயக்குநர் படத் தொகுப்பிலேயே பார்த்து சரி செய்திருக்கலாம்.

மொத்தத்தில் மிகச் சிறந்த பேய் திரைப்படம் என்று சொல்ல வேண்டிய நிலையில், சில தவறுகளினால் பேய் படம் என்று மட்டுமே சொல்ல வைத்திருக்கிறார் இயக்குநர் அறிவழகன்.

RATING : 3.5 / 5

Our Score