இந்தப் படத்தை கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா, சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், கவிதா பாரதி, இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
திரைக்கதை வசனம் எஸ்.ஏ.சந்திரசேகர். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். கலை இயக்கம் – வனராஜ். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார்.
‘கூரன்’ என்றால் ‘அறிவுக் கூர்மையானவன்’ என்கிற பொருள்படும். இந்தப் படம் ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி உள்ளது. அந்த நாயின் அறிவுக் கூர்மையைக் குறிப்பிடும் வகையில்தான் இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதிபதியான ஓய்.ஜி.மகேந்திரன் தனது வாழ்க்கை அனுபவங்களை ஒரு நேர்காணலில் கூறுவதாகப் படம் தொடங்குகிறது. அவர் தீர்ப்பு கூறிய வழக்குகளில் முக்கியமான, மறக்க முடியாதது எது என்கிறபோது அவர் ஒரு வழக்கைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.
அது ‘ஒரு தாய் தனது குழந்தையை குடி போதையில் ஓட்டிய வாகனத்தால் அடித்துக் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்ட வழக்குதான்” என்கிறார். ‘தாய்’ என்றதும் நேர்காணல் செய்பவர் அதுவொரு தனி மனுஷியின் கதை என்று நினைத்துக் கொள்கிறார். ஆனால் உண்மையில் அந்தத் தாய் ‘ஜான்சி’ என்ற ஒரு நாய்தான்.
‘ஜான்சி’ என்கிற நாய் தனது குட்டியுடன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அதன் கண்ணெதிரேயே ஒரு குடிகாரன் தன் காரால் குட்டி நாயை ஏற்றிக் கொல்கிறான். அந்தத் தாய் நாய் குரைத்துக் கொண்டே காரைத் துரத்திச் செல்கிறது. காரைப் பிடிக்க இயவில்லை.
தொடர்ந்து தனக்கான நீதி கேட்டு காவல் நிலையம் செல்கிறது. அங்கே அது துரத்தியடிக்கப்படுகிறது. இருந்தாலும் அங்கேயே படுத்துக் கொள்கிறது. இந்த நேரத்தில் தன்னுடைய பணியாளான இந்திரஜாவை மீட்பதற்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் வழக்கறிஞரான எஸ்.ஏ.சந்திரசேகரை பார்க்கும் தாய் நாய், அவருக்கு போலீஸ் ஸ்டேஷனில் கிடைக்கும் மரியாதையை நினைத்து அவரிடத்தில் தனது குறையைச் சொல்ல நினைக்கிறது.
இதனால் எஸ்.ஏ.சந்திரசேகரின் பின்னாலேயே செல்லும் ‘ஜான்சி’ அவரது வீட்டுக்கே வந்துவிடுகிறது. பல முறை விரட்டியடித்தும் போகாமல் தன்னையே சுற்றிச் சுற்றி வரும் ஜான்சியைக் கவனித்த எஸ்.ஏ.சி. அது ஏதோ ஒன்றை தன்னிடம் சொல்ல விரும்புகிறது என்பதை உணர்ந்து அதனைக் கூர்ந்து கவனிக்கிறார். ‘ஜான்சி’ வாயில்லா ஜீவன் என்றாலும் அது தனது கதையை அவர் உணரும்படிச் செய்கிறது.
அதன் பின்னாடியே சென்று குட்டியை இழந்த அதன் கோபத்தையும், சோகத்தையும் புரிந்து கொள்கிறார் எஸ்.ஏ.சி. இதனால் கடந்த பத்தாண்டுகளாக நீதிமன்றத்தின் படியேறாமல் இருந்த எஸ்.ஏ.சி., இப்போது இந்த ‘ஜான்சி’க்காக வாதாட வருகிறார்.
அதன் குட்டியை இரக்கமில்லாமல் கொன்ற குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அந்த வழக்கை எடுத்துக் கொள்கிறார். அவர்களைக் கண்டுபிடிப்பதற்கும் அதை நீதிமன்றத்தில் நிரூபிப்பதற்கும் அவர் போராடுகிறார் .
இறுதியில் ‘ஜான்சி’ என்ற அந்த வாயில்லா ஜீவனின் குரலுக்கு நீதி கிடைத்ததா? அதற்கு அவர் என்ன செய்கிறார்? என்கிற காவல்துறை, நீதிமன்றப் போராட்டத்தின் பயணம்தான் இந்தக் ‘கூரன்’ படத்தின் திரைக்கதை.
இதற்கு முன்பு பல திரைப்படங்களில் விலங்குகளை மையப்படுத்தி ஏராளமான கதைகள் வந்துள்ளன. ஆனால் அவைகளில் பெரும்பாலும் மனித உணர்வுகளைப் புரிந்து கொண்டு விலங்குகள் செயல்படுவது போல்தான் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அந்த நாயின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு மனிதர்கள் செயல்படுவதுபோல் காட்சிகள் உள்ளன. எனவே இதனை வித்தியாசமான கதையாக உணரலாம்.
படத்தின் கதை தொடங்கிச் செல்லச் செல்ல ஒரு நாயின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் சென்று சேரும்படி எப்படிக் காட்டுவார்கள் என்கிற ஒரு கேள்வி நமக்குள்ளே எழுகிறது. ஆனால் போகப் போக அடுத்தடுத்த காட்சிகளில் அதற்குரிய பதில் கிடைத்து விடுகிறது. காட்சிகள் நகர நகர அந்த நாயுடன் நாமும் பயணம் செய்ய ஆரம்பித்து விடுகிறோம். அந்த நாய் ஏன் இவ்வளவு அறிவாக இருக்கிறது என்று யோசித்துப் பார்க்கும்போது அதற்கு ஒரு முன் கதை விரிகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் ‘பைரவா’ என்கிற பெயரில் தீவிரமான துப்பு துலக்கும் நாயாக அது இருக்கிறது. குற்றவாளிகளை மோப்பம் பிடித்துக் கண்டுபிடிப்பதில் புத்திசாலியாக இருந்தாலும் அங்கேயும் அதன் வாழ்க்கையில் வாழ்வா சாவா போராட்டத்தில் இருக்கிறது. அதை அரவணைத்து வளர்க்கும் சரவண சுப்பையா அதன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அதைக் காப்பாற்றுவதற்காக “எங்கேயாவது சென்று பிழைத்துக் கொள்” என்று காட்டுக்குள் துரத்தி விடுகிறார். அப்படித் தப்பி வந்த நாய்தான் கொடைக்கானலுக்கு வந்திருக்கிறது என்று பிளாஷ்பேக் முடிகிறது. அப்படிச் சென்றுதான் கொடைக்கானல் காவல் நிலையத்தில் இறந்துபோன தனது குட்டிக்காக அந்த நாய் முறையிடுகிறது.
படத்தின் முதல் பாதி சற்றே மிதமான வேகத்தில் பயணிக்கிறது என்றாலும் இரண்டாம் பாதியில் அந்த வழக்கு நீதிமன்றத்தை அணுகும்போது கதையில் சூடு பிடிக்கிறது. அதன் பிறகு பரபரவென படம் நகர்ந்து முடிவை எட்டுகிறது.
‘வழக்கறிஞர் தர்மராஜ்’ என்கிற பாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் இனிமேல் நடிக்கவே வேண்டாம் என்று சொல்வதைப் போல ஏதோவென்று நடித்திருக்கிறார். நீதிமன்றத்தில் வசனம் பேசும் காட்சிகளில் மட்டுமே அவருடைய நடிப்பு ஓகே என்ற லெவலில் இருக்கிறது. மற்றபடி வயதாகிவிட்டது. வீட்டில் ரெஸ்ட் எடுக்கலாமே என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
காரை நாயின் மீது ஏற்றிக் கொன்ற ரஞ்சித் ராஜாவின் தந்தையாக நடித்திருக்கும் கவிதாபாரதி வில்லன் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். கேலிப் பேச்சுடன் தன் மகனையே கரித்துக் கொட்டும் டிபிக்கல் அப்பாவாக நடித்துள்ளார். அவருக்காக வாதாடும் வழக்கறிஞரான பாலாஜி சக்திவேல் தனது கெத்து குறையாமல் வழக்கறிஞர் வேடத்தைப் பூர்த்தி செய்திருக்கிறார்.
படத்தின் டர்னிங் பாயிண்ட்டான கேரக்டரில் நடித்திருக்கும் ஜார்ஜ் மரியான் வழக்கம்போல் தனது குணச்சித்திர நடிப்பை குறையில்லாமல் செய்துள்ளார். நாயுடன் பேசும் டிரான்ஸ்லேட்டர் வேடத்தில் நடித்திருக்கும் சத்யனும் நம் கவனத்தை ஈர்க்கிறார்.
எஸ்.ஏ.சந்திரசேகரை “குருவே குருவே” என்று அழைத்தபடியே இருக்கும் இந்திரஜா ரோபோ சங்கர் நடித்துள்ளார். படத்தில் நகைச்சுவை இல்லாத குறையை அவரது பேச்சாலும் தோற்றத்தாலும் ஈடு செய்ய முயன்றுள்ளார். சில காட்சிகள் என்றாலும் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ‘அருவி’ மதனின் நடிப்பு ஒன்றுதான் அட்டகாசம்..!
மற்றபடி இயக்கம் என்றால் கிலோ என்ன விலை என்று இயக்குநர் கேட்டதுபோல படம் நெடுகிலும் ஏனோதானோவென்று இயக்கம் செய்துள்ளார் இயக்குநர். டிவி சீரியல்களில்கூட இயக்கம் என்பது நம்மைக் கவரும் வகையில் இருக்கும். இந்தப் படத்தில் அது எங்கேயுள்ளது என்பதை நாம்தான் கண்டு பிடித்தாக வேண்டும்.
மார்டின் தன்ராஜ் செய்துள்ள ஒளிப்பதிவில் குறை ஒன்றும் இல்லை. கொடைக்கானலில், மலைப் பிரதேசம் என்கிற பின்புலத்தில் கண்களுக்குக் குளிர்ச்சியான காட்சிகள் இருக்குமென்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள். மொட்டை வெயிலில் அனைத்துக் காட்சிகளையும் படமாக்கி வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர்.
படத் தொகுப்பு செய்திருக்கும் மாருதி, சில காட்சிகளில் ரா புட்டேஜை அப்படியே கொடுத்திருக்கிறார். அடுத்தடுத்தக் காட்சிகளில் ஜம்ப் ஆவது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. 2025-லேயே இப்படியா..?
பின்னணி இசையை மட்டும் சிறப்பாக சேர்த்துள்ளார் சித்தார்த் விபின். பாடல்கள் மனதில் நிற்கவில்லை. இடையில் ஒட்டாத ஒரு பாடல் காட்சியின் முதல் 4 வரிகளை மட்டும் ஆடிக் காட்டியிருக்கிறார்கள். மீதமுள்ளவை எங்கே என்று தெரியவில்லை.
இந்தப் படத்தின் நீதிமன்றக் காட்சிகளில் வாதப் பிரதிவாதங்கள், தண்டனைச் சட்டங்கள், சட்ட உட்பிரிவுகளைப் பற்றிய வசனங்கள் வரும்போது எஸ்.ஏ.சந்திரசேகரின் ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘நீதிக்கு தண்டனை’ போன்ற பழைய படங்களின் நீதிமன்றக் காட்சிகள் நம் நினைவுக்கு வருகின்றன. இந்த சட்ட நுணுக்க வசனங்களையெல்லாம் பார்க்கும்போது இந்தப் படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரின் பங்களிப்பை நம்மால் உணர முடிகிறது.
விலங்குகள் கொலை செய்யப்படுவதைத் தடுக்கவும், தண்டிக்கவும் மனிதருக்கான சட்டங்கள் பொருந்துமா என்கிற கேள்வியும் படத்தில் எழுப்பப்படுகிறது. அதற்கான சட்டப் பிரிவுகளை மேற்கோள் காட்டியும் வாதாடப்படுகிறது. அதன்படி விலங்குகளுக்கு எதிரான வன்கொடுமை சார்ந்த பிரிவு 428 மற்றும் 429-ன்படி குற்றவாளிக்கு தீர்ப்பு வழங்குவதாகப் படத்தில் கூறப்பட்டுள்ளது.
நீதிமன்றங்கள் கண்ணால் கண்ட சாட்சியை மட்டுமே ஏற்றுக் கொள்கின்றனவா? நீதி விசாரணையின்போது உணர்வுகளுக்கான இடம் இல்லையா? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு அதற்கு ஆதாரமாக உரிய பதிலும் சொல்லப்படுகிறது.
படத்தில் ஜார்ஜ் மரியான் கதாப்பாத்திரத்தின் மூலம் ஈஎஸ்பி எனப்படும் எக்ஸ்ட்ரா சென்சரி பெர்செப்ஷன்(Extra Sensory Perception) பற்றி அதாவது ஐம்புலன்களைத் தாண்டி அறியும் ஆறாவது உணர்வைப் பற்றியும், அதனால் செவி வழியே கேட்கும் குரல்களை வைத்து படிமங்களை வரையும் திறமை பற்றியும் பேசப்படுகிறது. இது கதையின் திருப்பு முனையாக எப்படி அமைகிறது என்பதற்கும் காட்சிகள் உள்ளன. இருந்தாலும் அறிவியலின்படியும், மருத்துவத்தின்படியும் இது ஏற்புடையதுதானா என்பது சொல்லப்படாததால் லாஜிக் எல்லை தாண்டி வந்து இடிக்கிறது.
மொத்தத்தில் விலங்குகளும் மனிதர்களைப் போன்றவைதான். அவற்றுக்கும் இந்த உலகில் வாழ்வதற்கு உரிமை உண்டு. தான் வாழ்வதற்காக மனிதன் அதை அழிக்கக்கூடாது. துன்புறுத்தக் கூடாது என்கிற கருத்தை இந்தப் படத்தில் நாகரிகமாகக் கூறி இருக்கிறார்கள். அவ்வளவுதான்!
இந்தப் படத்தில் கவர்ச்சி காட்சிகள், குத்தாட்டம், மலிவான நகைச்சுவை, சண்டைக் காட்சிகள், அடிதடி, வெட்டுக் குத்து, ரத்தம் சிந்துதல் போன்ற எதுவும் இல்லாமல் இருப்பதே நமக்குப் பெரிய ஆறுதலாக இருக்கிறது.
இந்த வகையில் இந்தக் ‘கூரன்’ நல்ல கருத்தை சொல்ல வந்திருக்கும் படம்தான். அதிலும் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் வந்திருக்கும் படம் என்றுகூட கூறலாம்.
RATING : 2.5 / 5









