சென்னை தியாகராயா நகரில் உள்ள அகரம் ஃபவுண்டேஷன் அலுவலகத்தில் ஸ்ரீசிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் இந்த ஆண்டு ப்ளஸ்-டூ முடித்து கல்லூரியில் சேர்ந்திருக்கும் 25 மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவியும்,
மூத்த ஓவியர் ஒருவருக்கு நிதியும், விருதும்,
விளிம்புநிலை மக்களின் கல்வி மேம்பாட்டிற்காகத் தன்னலமற்று உழைத்து வரும் மூன்று முக்கிய அமைப்புகளுக்கு நிதியுதவியும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.
1979-ஆம் ஆண்டு திரைக்கலைஞர் திரு.சிவகுமார் அவர்களின் 100-வது திரைப்படமான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்திற்காகப் பெற்ற முழுச் சம்பளமான ரூ.25,000-ஐ வங்கியில் முதலீடு செய்து,
அதன் வட்டித் தொகையைக் கொண்டு மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டது.
ஆரம்பத்தில் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில், பின்னர் சிவகுமார் அவர்களின் சொந்த நிதியில் இருந்து உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.
2006-ஆம் ஆண்டு முதல் ‘அகரம் ஃபவுண்டேஷன்’ இந்த அறக்கட்டளையின் பொறுப்பை முழுமையாக ஏற்று, ஆண்டுதோறும் உதவித் தொகைகளையும் விருதுகளையும் வழங்கி வருகிறது.
ஓவியர் ஜீவானந்தனுக்கு விருது:
கல்வியில் சிறந்த மாணவர்களை ஊக்குவிப்பதோடு, ஓவியத் துறையில் நீண்ட காலம் சிறப்பாகப் பங்காற்றிய மூத்த கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையை சிவகுமார் கல்வி அறக்கட்டளை வழங்கி வருகிறது.
இதுவரை ஓவியர்கள் ‘அம்புலிமாமா’ சங்கர், ராமு, ஜெயராஜ், மாயா, மணியம் செல்வன் ஆகியோர் பெற்றுள்ள நிலையில், இந்த 47-வது ஆண்டு விழாவில்,
சிறந்த ஓவியரும் கலைத்துறையின் குறிப்பிடத்தக்க ஆளுமையுமான ஓவியர் ஜீவானந்தன் அவர்களுக்கு ரூ.1 லட்சம் பொற்கிழியுடன் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
25 மாணவ, மாணவியருக்குக் கல்வி ஊக்கத் தொகை!
பொருளாதாரச் சவால்களையும் பல்வேறு தடைகளையும் கடந்து, இந்தாண்டு பிளஸ் டூ பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் சேர்ந்துள்ள
25 மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.2,50,000 கல்வி ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது.
மாணவர்களின் சாதனையைப் பாராட்டி, அவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, விளிம்புநிலை மாணவர்களின் கல்விக்காகச் செயல்படும் கீழ்க்கண்ட மூன்று அமைப்புகளின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி, அகரம் ஃபவுண்டேஷன் சார்பில் நிதியுதவிகள் வழங்கப்பட்டன :
1. திண்டிவனம் ‘தாய் தமிழ்ப் பள்ளிக்கு’ ரூ. 6,28,000/- நிதியுதவி:
திண்டிவனம் ரோசனை பகுதியில் ‘தாய்மொழிக் கல்வியே சிறந்த கல்விமுறை’ என்ற உயரிய சிந்தனையோடு கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வரும் பள்ளி ‘தாய் தமிழ் தொடக்கப்பள்ளி’.
இப்பள்ளி மாணவர்களுக்கு இலவசக் கல்வியோடு மதிய உணவுத் திட்டத்தையும் வழங்கி வருகிறது.
இப்பள்ளியின் சீரிய பணிகளுக்குக் கடந்த 16 ஆண்டுகளாக அகரம் துணைநின்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, 2026 – 2027 கல்வியாண்டில் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் மாதச் சம்பளப் பங்களிப்பிற்காக ரூ. 6,28,000/- வழங்குவதற்கான உறுதியேற்பு கடிதம் தாய் தமிழ்ப் பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது.
2. ஈரோடு ‘சுடர்’ அமைப்புக்கு ரூ. 2,00,000/- நிதியுதவி:
ஈரோடு மாவட்டப் பழங்குடி குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக கடந்த 20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் அமைப்பு ‘சுடர்’.
சத்தியமங்கலம் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் பள்ளி இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கவும், கற்றல் இடைவெளியைப் போக்கவும் 25 மாலை நேரப் படிப்பகங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்த நற்பணிகளுக்குத் தேவைப்படும் நிதி ஆதாரத்தின் சிறு பகுதியாக ரூ. 2,00,000/-க்கான காசோலை சுடர் அமைப்பின் நிறுவனர் திரு. நடராஜன் அவர்களிடம் வழங்கப்பட்டது.
3. ‘வாழை’ அமைப்புக்கு ரூ. 3,00,000/- நிதியுதவி:
சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர்களால் தொடங்கப்பட்டு,
தருமபுரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டும் (Mentoring) பணிகளை மேற்கொண்டு வந்த ‘வாழை’ அமைப்பு.
தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் அய்யூர் வனப் பகுதியில் அமைந்துள்ள 7 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமித்து கல்வி மேம்பாட்டு பணிகளை முன்னெடுத்து வருகிறார்கள்.
இவர்களின் தன்னார்வப் பணிகளுக்கு உதவும் வகையில், மாதந்தோறும் ரூ.25,000/- வீதம் இந்த ஆண்டிற்கான பங்களிப்பாக ரூ. 3,00,000/- வழங்குவதற்கான உறுதியேற்பு கடிதம் ‘வாழை’ அமைப்பின் தன்னார்வலர்களிடம் வழங்கப்பட்டது.

விழாவில் மாணவர்களைப் பாராட்டி, திரைக்கலைஞர் சூர்யா பேசியதாவது :
“இது ஒரு குடும்ப நிகழ்ச்சி. எங்க வீட்ல எப்படி ஒரு பிறந்த நாள் நிகழ்ச்சி நடக்குமோ, அந்த மாதிரி இதையும் ஒரு குடும்ப நிகழ்ச்சியா மட்டும்தான் பார்க்கிறோம். ஒவ்வொரு முறையும் இந்தக் குடும்பம் இன்னும் விரிவடைந்துகொண்டேதான் இருக்கு.
இங்கே வந்திருக்கிற, மாணவ – மாணவிகள் அவங்களோட சாதனைகளைச் சொல்லி, பரிசுகளை வாங்கிச் செல்லும்போது இவர்கள் எவ்வளவு விஷயங்களை தாண்டி வந்திருக்காங்கன்னு பிரமிப்பா பார்க்கிறேன்.
அப்பாவோட வழிகாட்டுதலால்தான் இவ்வளவு வருஷத்துக்கு அப்புறமாவும் இதை நடத்த முடியுது. இது ஒரு உணர்வு. இப்படித்தான் நாங்க வளர்க்கப்பட்டிருக்கோம். இப்படித்தான் எல்லா விஷயத்தையும் எங்க கண்ணு முன்னாடி நிறுத்தியிருக்காங்க.
‘அகரம்’ ஆரம்பித்து 20 வருஷம் முடிஞ்சிருக்கு. கிட்டத்தட்ட முதல் தலைமுறை மாணவர்கள், மாணவிகளோட குடும்பத்துல ஒரு 7,000 பேரை எங்களால படிக்க வைக்க முடிஞ்சிருக்கு. இன்னும் பல விஷயங்கள் ‘அகரம்’ மூலமாக நடந்துட்டே இருக்குது. அகரத்தின் நோக்கம் இப்போதும் குறையாமல் இருக்கு.
அதுக்கு நம்ம கல்யாணி ஐயா மாதிரி முக்கியமானவங்களும் வந்து நம்ம கூடவே கை கோர்த்து நின்னுட்டு இருக்காங்க. சமூகப் பார்வைன்னா என்ன? யாருக்காக பண்ணப் போறோம்? எதுக்காக பண்ணப் போறோம்? அப்படின்னு மறுபடியும், மறுபடியும் அவங்க வச்ச கேள்விகள், நம்மகூட இருக்கிற வழிகாட்டிகளும் சரி, மாணவர்களும் சரி… இப்ப ‘அகரமை’ முன்னெடுத்துட்டு போற முன்னாள் மாணவர்கள்… அத்தனை பேருக்கும் அந்தப் பார்வையை சரியா கொண்டுபோய் சேர்த்தது.
அதனால எங்க ஆரம்பிச்சமோ, அங்க மட்டுமே… அதை மட்டுமே பண்ணாமல்… இன்னும் யார் யாருக்குத் தேவை? இன்னும் தேவைப்படும் குழந்தைகள் யார்..? இன்னும் யாரை எல்லாம் கை பிடிச்சு மேல கூட்டிட்டு வரணும்?.. அப்படின்னு தேடும்போது, இஸ்லாமிய சமூகத்தில் நிறைய மாணவிகள் கல்வி இடைநிற்றல் செஞ்சிருக்காங்க அப்படிங்கிறது தெரிய வந்துச்சு. அங்க போய் சில வேலைகள் பண்ண முடிஞ்சுச்சு.
தொடர்ந்து மலைக் கிராமங்களிலும் போய் வேலைகள் பண்ண முடிஞ்சது. கடலோர பகுதிகளில் வேலைகள் பண்ண முடிஞ்சது. அதுமாதிரி தேவைகள் அப்படின்னு பார்த்தா இன்னும் ஏராளமா இருக்கு.
2006-ல மாணவர் பத்திரிக்கையாளரா அறிமுகம் ஆன ஞானவேல் அவர்கள் கேட்ட ஒரு கேள்வி எங்களை யோசிக்க வைத்தது.
“முதல் தலைமுறை மாணவர்கள் இன்னும் இருக்காங்களே.. ப்ளஸ் டூ எக்ஸாமை ஒரு மலைக் கிராமத்துல இருக்கிற ஒரு மாணவியும் எழுதுறாங்க… ஒரு மீனவ கிராமத்துல இருந்து வரும் மாணவியும் எழுதுறாங்க. அங்க பல பகுதிகளில் ஆசிரியரே கிடையாது. ஆனா எல்லாரும் ஒரே பரீட்சைதான் எழுதுறாங்க. அவங்களை நீங்க பார்க்கிறீங்களா? அவங்க இருக்காங்கன்னு தெரியுமா? அதுலயும் முதல் தலைமுறை மாணவர்கள் இருக்காங்கன்னு தெரியுமா?”ன்னு ஞானவேல் ஒரு கேள்வி கேட்டாரு.
“எங்க அப்பா 1950-ல மெட்ராஸ்க்கு கிளம்பி வந்தாங்க. நீங்க சொல்றது எல்லாம் வந்து 50 வருஷத்துக்கு முன்னாடிங்க. இப்ப எல்லாம் எங்க முதல் தலைமுறை மாணவர்கள் இருக்காங்க?” அப்படின்னு சாதாரணமா ஞானவேலுவுக்குப் பதில் சொன்னோம்.
“இல்லைண்ணா… முதல் தலைமுறை மாணவர்கள் இன்னும் இருக்காங்கண்ணா” அப்படின்னு 2006-ல சொன்னாரு. இப்ப 2026. இப்போதும் முதல் தலைமுறை மாணவர்கள் வந்து படிச்சு வெளியில வந்துட்டு இருக்காங்க.
‘அகரம்’ அவங்களை தேடிப் போயி, அவங்களை வெளியில கொண்டு வந்து, யார் யாருக்கு என்ன உதவி தேவைப்படுதோ அவங்க கேட்கக் கூட வேண்டாம்…. ‘அகரம்’ அங்க போய் அவங்களை வெளியில கூட்டிட்டு வந்து, அவங்களுக்கு இந்த உலகத்தை, இந்த வெளிச்சத்தைக் காமிக்குதுன்னு நினைக்கும்போது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுக்கு அத்தனை பேருக்கும் நான் என் நன்றியை சொல்லிக்கிறேன்.
நான் சினிமாவுக்கு வந்து இப்போ 28, 29 வருஷம் ஆகப் போகுது. சினிமால இருந்து நான் கத்துக்கிட்ட ஒரு விஷயத்தை உங்களுக்கு சொல்லணும்னு நினைக்கிறேன்.
சினிமால ‘ரீடேக்ஸ்’(Retakes) அப்படின்னு சொல்லுவாங்க. ஒரு காட்சி வந்து ஒரே ஷாட்ல முடியறது கிடையாது. சில டைம் அஞ்சு டேக், ஆறு டேக் ஆகும். ஷாட் நல்லா வரணும் அப்படிங்கிறதுக்காக 18, 20 வாட்டிகூட ‘ரீடேக்ஸ்’ போவோம். ஒவ்வொரு தடவையும் அது தப்பாகும்போது டைரக்டர் வந்து “நீ ஃபெயில்” அப்படின்னு சொல்ல மாட்டாரு. “ஒன் மோர்” அப்படிம்பாரு.
நான் டைரக்டரை என் வாழ்க்கையா பார்க்கிறேன். வாழ்க்கை எப்பவுமே உங்களை ஃபெயில்னு சொல்றது கிடையாது. நீங்க அப்படி நினைச்சுக்கலாம், ஆனா வாழ்க்கை அப்படி நினைக்காது.
நீங்க எப்பவுமே வாழ்க்கைக்கிட்ட “இன்னொரு வாட்டி பண்ணப் போறேன்…. ஒன் மோர்”னு சொல்லுங்க. “இன்னொரு வாட்டி பண்ண முடியும்”ன்னு சொல்லுங்க. அது உங்களோட மார்க்கா இருக்கலாம். இல்லாட்டி காலேஜ்ல சேர்ற ஒரு சீட்டா இருக்கலாம். இல்லாட்டி நீங்க போற முதல் வேலையா இருக்கலாம்.
உங்களுக்கு திருப்தியா இல்லாட்டி அதுவே கடைசி கிடையாது. அதுவே முடிவும் கிடையாது. நீங்க சொல்ல வேண்டிய ஒரே விஷயம் “ஒன் மோர்”. இன்னொரு வாட்டி அதை சரி பண்ண முடியும். இன்னொரு வாட்டி, இன்னொரு சான்ஸ் எடுத்துக்க முடியும். அதை இன்னும் மேம்படுத்த முடியும். So, there is always “one more” அப்படிங்கறதை ஞாபகம் வச்சுக்கோங்க. எதுவுமே முடிவு கிடையாது அப்படிங்கிறதை தயவு செஞ்சு மறந்துடாதீங்கன்னு சொல்லுவேன்.
இன்னொன்னு ரிகர்சல்(Rehearsal). நீங்க ஒரு ரெண்டரை மணி நேர படத்தைப் பார்க்குறீங்க. ஆனால் அந்தப் படத்துல நீங்க கை தட்டாத ஒரு காட்சியை நாங்க ரிகர்சல் பண்ணி நடிச்சிருப்போம். அந்தக் காட்சிக்காக பல தடவை ரிகர்சல் பார்த்திருப்போம். ஆனால், அதுக்கெல்லாம் கை தட்டல் கிடைக்காது. சோ, அதுதான் வந்து உங்களை உருவாக்குறதுன்னு நான் சொல்லுவேன். அந்த ரிகர்சல்ஸ் ரொம்ப, ரொம்ப முக்கியம்.
நமக்கு எது ரொம்பப் பிடிக்குமோ அதுக்கு முழு மனசோட, முழுசா சரண்டர் ஆகி பண்ணிட்டே இருந்தா என்ன முடியணும்ன்னு நினைச்சோமோ அதை நாம பண்ண முடியும்.
நீங்க எடுத்த உடனேயே ஒரு கலைத் திறமையோட ஒரு ஸ்கில்லோட வரணும் என்பது அவசியம் கிடையாது. அது ஒரு ‘கன்சிஸ்டன்சி’ (Consistency) அப்படின்னு சொல்லுவாங்க. திரும்பத் திரும்ப ஒரு விஷயத்தை பண்ணா, அதுல நம்ம வந்து மேம்பட முடியும், அதுல முதன்மையா வர முடியும்.
அது ஒரு கோடிங்கா(Coding) இருக்கலாம்.. இல்லாட்டி டிராயிங்கா (Drawing) இருக்கலாம். அல்லது ஓட்டப் பயிற்சியா இருக்கலாம்.. வேறு எதுவா வேண்ணாலும் இருக்கலாம். கன்சிஸ்டன்சியைத் திரும்ப திரும்ப ரிகர்சல் பண்ணும்போது அதுதான் நாம உருவாகுற இடம்.
எல்லாத்துக்குமே ஒரு முதல் படிக்கல்ன்னு ஒண்ணு இருக்கு. நான் சினிமாக்கு வரும்போது நடிக்கவெல்லாம் தெரியாது. எதுவுமே தெரியாது. திரும்ப திரும்ப பண்ண ரிகர்சல்தான் இங்க 29 வருஷத்துக்கு அப்புறமாவும் என்னை நிக்க வச்சிருக்கு. என்னால வர முடியும்னா நீங்க எதுல எல்லாம் ஆசைப்படுறீங்களோ.. அது எல்லாத்துலயும் உங்களாலேயும் வர முடியும்.
படம் முடிஞ்சதுக்கு அப்புறம் திரையில் ‘கிரெடிட்ஸ்’ன்னு ஒண்ணு வரும். எவ்வளவு பேர் அந்தப் படத்துக்காக வேலை செஞ்சிருக்காங்க அப்படிங்கிறது அவங்களோட பேரோட வரும்.
ஒரு ஹீரோங்கிறது தனியா நான் அப்படியே நடந்து.. அப்படியே வெளியில வந்துறது இல்லை. படத்துல உதவி இயக்குநர்கள் இருப்பாங்க. எழுத்தாளர்கள் இருப்பாங்க. காஸ்ட்யூம்ஸ் இருப்பாங்க. மேக்கப்மேன் இருப்பாங்க. டிரைவர்ஸ் இருப்பாங்க. ஆயா இருப்பாங்க. லைட்மேன்ஸ் இருப்பாங்க. இவங்க எல்லாரோட உழைப்பின் மூலமாதான் என்னை மாதிரி ஒருத்தனால வெளியில வர முடியுது.
நம்ம ஒரு வாழ்க்கையில மேல வந்த பின்னாடி வெறும் ரீல்ஸை மட்டும் பார்க்காமல் பக்கத்துல, லெஃப்ட்ல, ரைட்ல நம்ம கூட யார் இருந்திருக்காங்க? நம்ம இங்க வர்றதுக்கு யாரெல்லாம் உதவியா வந்திருக்காங்க? யார் நமக்கு இந்த அடையாளத்தைக் கொடுத்திருக்காங்க? அப்படிங்கிற அவங்களை மறந்துட வேண்டாம். அவங்களை தயவு செஞ்சு ஞாபகம் வச்சுக்கோங்க.
அதே மாதிரி ஒரு இடத்துக்கு வந்ததுக்கு அப்புறமா, நம்ம ஒருத்தரையாவது மேல உயர்த்தணும். அவங்களோட கிரெடிட்ல நம்ம பெயர் இருக்கணும். நீங்க இன்ஸ்டாகிராம், அதாவது ரீல்ஸ் (Reels) பார்த்துட்டு இருந்தீங்கன்னா அந்த ரீல்ஸ்ங்கிறது ஒரு கதைதான். அதுல நாம ஒண்ணுமே கத்துக்கப் போறதே கிடையாது. யாரை ஃபாலோ பண்றோம் அப்படிங்கிறதுதான் ரொம்ப முக்கியம். கனவு உலகத்தையே பார்த்துட்டு இருந்தீங்கன்னா, கடைசிவரைக்கும் அந்தக் கனவு உலகத்துலதான் இருப்பீங்க.
எலான் மாஸ்க் எங்கிருந்து ஆரம்பிச்சாரு? 24 மணி நேரத்துல 23 மணி நேரம் வேலை செய்வாராம். ஒரு மணி நேரம்தான் தூங்குவாராம். அந்த மாதிரி எங்கிருந்து ஆரம்பிச்சாங்க? எங்கிருந்து இங்க வந்தாங்க? அப்படிங்கிறதை வெறும் ரீல்ஸ்ல மட்டும் பார்க்காமல் நிறைய பாட்காஸ்ட் (Podcast) இருக்கும்… அவங்களை பத்தின நிறைய ரிசர்ச் வொர்க் இருக்கும்… அதெல்லாம் பார்த்துப் படிச்சீங்கன்னா, உங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும். உங்களுக்குள்ள இருக்கிற டேலன்ட்டை(Talent) வெளியில எடுத்துட்டு வர்றதுக்கு அவை உதவும்.
சினிமால இருந்து நான் கத்துக்கிட்டது… மறுபடியும் ‘ரீடேக்’, ‘ஒன் மோர்’ கேளுங்க, ‘ரிகர்சல்’ பண்ணுங்க, ‘கிரெடிட்ஸ்’, நம்ம யாருக்காக எதுனால இங்க வந்தோமோ, எதுனால இவ்வளவு தூரம் வந்தோமோ.. அதையும் அவர்களையும் மறந்துவிட வேண்டாம்.
So, always ask for one more… ஒருத்தரையாவது மேல உயர்த்தறதுக்கு நாம் முயற்சி பண்ணுவோம். வாழ்க்கை ரொம்ப ரொம்ப அழகானது. நம்புங்க. நீங்க என்னவாகனும்ன்னு நினைக்கிறீங்களோ அதுவாகவே ஆக முடியும். ரொம்ப. ரொம்ப நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள், கலைஞர்கள், மாணவ, மாணவியர், அகரம் ஃபவுண்டேஷன் தன்னார்வலர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.









