full screen background image

அடவி – சினிமா விமர்சனம்

அடவி – சினிமா விமர்சனம்

ஸ்ரீகிருஷ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் கே.சாம்பசிவம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில்  வினோத் கிஷன் நாயகனாகவும், அம்மு அபிராமி நாயகியாகவும் நடித்துள்ளனர்.

மேலும், ராஜபாண்டியன், விஷ்ணு பிரியா, ஆர்.என்.ஆர்.மனோகர், முத்துராமன், ‘மூணாறு’ ரமேஷ், கே.சாம்பசிவம், பரிவு சக்திவேல், ஜெயச்சந்திரன், சந்துரு, குணசீலன், தம்பிதுரை, ஆண்ட்ரு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இசை – சரத் ஜடா, பாடல்கள் – கலை குமார், படத் தொகுப்பு – சதீஷ் குரோசோவ், சண்டை பயிற்சி – சூப்பர் சுப்பராயன், தயாரிப்பு வடிவமைப்பு – குமார், ஒப்பனை – பி.வி.ராமு, மக்கள் தொடர்பு – நிகில் முருகன், தயாரிப்பு மேற்பார்வை – சிவச்சந்திரன், தயாரிப்பு நிறுவனம் – ஸ்ரீகிரிஷ் பிக்சர்ஸ், தயாரிப்பாளர் – K.சாம்பசிவம், ஒளிப்பதிவு, இயக்கம் – ஜி.ரமேஷ்.

இயக்குநர் ஜி.ரமேஷ், ‘ஆழ்வார்’, ‘திருடா திருடி’, ‘கண்ணோடு காண்பதெல்லாம்’, ‘கிங்’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிவிட்டு, இந்தப் படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக உயர்ந்திருக்கிறார்.

“ஒரே ஒருவரின் பேராசைக்கு உலகத்தில் இருக்கும் அனைத்து வளங்களும் பத்தாது” என்னும் முதுமொழி இருக்கிறது. அதையொட்டியே.. இந்தப் படம் இயற்கை, மற்றும் இயற்கையோடு இயைந்து வாழும் மக்களின் வாழ்க்கை, ஒருவரது பேராசை என்ன கதிக்கு உள்ளாக்குகிறது என்பதை உணர்வுபூர்வமாக சொல்கிறது.

காடுகளை அழிப்பதால் என்ன விளைவுகள் ஏற்படும்.. அந்தக் காடுகளை அழிக்க நினைப்பவர்கள் யார்.. அதற்கு யாரெல்லாம் துணை போகிறார்கள். காடு வாழ் மக்களை அந்தப் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்த நினைப்பவர்கள் யார்.. எதற்காக அதனைச் செய்கிறார்கள் என்பதைத்தான் இத்திரைப்படம் பேசுகிறது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மலைத் தொடரில் இருக்கும் ஒரு மலை கிராமம்தான் இந்தப் படத்தின் கதைக் களம். படத்தின் நாயகனான முருகன் தினம் ஒரு வேலைக்குச் சென்று வருகிறார். நாயகி வள்ளி கல்லூரி மாணவி.

அந்த மலைக் கிராமப் பகுதி அமைந்திருக்கும் இடத்தோடு 900 ஏக்கரை வளைத்து ஒரு ரிசார்ட் கட்ட திட்டம் தீட்டுகிறார் பெரும் பணக்காரரான ஆர்.என்.ஆர்.மனோகர். இந்தத் திட்டத்திற்காக இவருக்கு வெளிநாட்டில் இருந்து கோடிக்கணக்கில் பணம் வரப் போகிறது.

இதனால் லஞ்சத்தைக் காட்டி தொகுதி எம்.எல்.ஏ., கலெக்டர், தாசில்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று அனைவரையும் தன் பக்கம் இழுத்து வைத்திருக்கிறார் மனோகர். இந்தத் திட்டத்தை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்கிறார்கள் மலைவாழ் மக்கள்.

மாவட்ட கலெக்டரை சந்திக்க முடியாமலும், அவரிடம் நேரில் மனு கொடுக்க முடியாமலும் தவிக்கிறார்கள் மக்கள். இந்த நேரத்தில் மலைப் பகுதிக்குச் சுற்றுப் பயணம் வந்த கலெக்டரையும், அதிகாரிகளையும் யாரோ குண்டு வைத்துக் கொல்கிறார்கள். இந்தப் பழி முருகன் மீதும் அவரது நண்பர்கள் மீதும் விழுகிறது.

இதனால் அந்தக் கிராமத்து மக்களை போலீஸ் பிடித்துச் சென்று சித்ரவதை செய்கிறது. ஒரு பக்கம் போலீஸ்.. இன்னொரு பக்கம் அந்தப் பூமி அவர்களைக் கைவிட்டுப் போகும் நிலைமை.. என்ன செய்கிறார்கள் அந்த மக்கள்..? எப்படித் தப்பிக்கிறார்கள்..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

‘நந்தா’, ‘நான் மகான் அல்ல’, ‘இமைக்கா நொடிகள்’ உட்பட சில திரைப்படங்களில் நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்திருந்த வினோத் கிஷன் இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார்.

முறுக்கு மூசை, குறுந்தாடியோடு இந்தக் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார். அம்மு அபிராமி அவரை வெறுப்பேற்றும்படி பேசுவதைக் கேட்டு அவர் கோப்படுவதும், அதைத் தொடர்ந்து வெட்கப்படுவதுமாய் காதல் சேட்டைகளை அழகாய் காண்பித்திருக்கிறார்.

கோபம் கொள்ளும் காட்சிகளில் இயல்பைக் காட்டி அந்தக் காட்சியை மேன்மைப்படுத்தியிருக்கிறார். ஆக்ரோஷத்தைக் காட்டும் இடங்களிலெல்லாம் அதனைக் காண்பித்து தனது உணர்வை உண்மையாய் வெளிப்படுத்தியிருக்கிறார். பாராட்டுக்கள்.

வள்ளியாக நடித்திருக்கும் அம்மு அபிராமிக்கு மலைவாழ் பெண் கேரக்டர் மிகவும் பொருந்திப் போயிருக்கிறது. தான் படிக்கும் கல்லூரி படிப்புக்கேற்ற அறிவையும், திறமையையும், கோபத்தையும் அவ்வப்போது காட்டுகிறார்.

நாயகனை வெறுப்பேற்ற வேண்டுமென்றே ஜீப்பில் வரும்போது அவர் பேசும் பேச்சுக்களும்.. சின்னச் சின்ன முக எக்ஸ்பிரஷன்களும் சிறந்த நடிகை என்பதையும் வெளிப்படுத்துகிறது. இவரது தகுதிக்கேற்ற ஒரேயொரு கதாபாத்திரம் கிடைத்தால் போதும்.. ஓவர் நைட்டில் கொண்டாடப்படுவார்.

வில்லனாக ஆர்.என்.ஆர்.மனோகர்.. தனது இயல்பான வில்லத்தனமான பார்வை, குரல், வசன உச்சரிப்பால் தனது நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார். வள்ளியின் தோழியாக நடித்திருக்கும் விஷ்ணுப்பிரியாவுக்கு ஒரு அழுத்தமான கேரக்டர். அவருடைய அழுகையும், நடிப்பும் படத்தை உருக்கமாக பார்க்க வைத்திருக்கிறது.

அந்தப் பகுதி மலைவாழ் கிராம மக்களாக நடித்திருக்கும் அத்தனை பேரும் அந்தப் பகுதி மக்கள்தான். அத்தனை யதார்த்தமாக கேமிரா முன் நடிக்கிறோம் என்கிற உணர்வே இல்லாததுபோல் நடித்திருக்கிறார்கள். இதற்காக இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.

இசையமைப்பாளர் சரத் ஜடாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருப்பதோடு மலை வாழ் மக்களின் இசையையும் சேர்த்தே பதிவு செய்திருப்பது இந்தப் படத்திற்கு தனி முத்திரையைக் கொடுத்திருக்கிறது.

மலைவாழ் பகுதி என்றாலே அந்த அழகு ஸ்கிரீனில் தெரிய வைக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளருக்கு தலை மேல் சுமையாக இருக்கும். இந்தப் படத்திலும் அந்தச் சுமையைத் தூக்கிச் சுமந்திருக்கிறார் ஒளிப்பதிவோடு இயக்குதலையும் சேர்த்து செய்திருக்கும் இயக்குநர் ரமேஷ்ஜி.

படம் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் அழகு காட்சிகளே கண்ணில் பட்டன. வெளிப்புறக் காட்சிகளை அத்தனை அழகாகப் படம் பிடித்திருக்கிறார் ரமேஷ்ஜி.

‘அடவி’ என்றால் அடர்ந்த காடுகள், மலைப் பகுதிகள் என்று அர்த்தம். பொருத்தமான பெயர்தான்.

படத்தின் துவக்கத்தில் கிராமத்து மக்களின் பிரமையினால் உருவாக்கப்படும் ‘சப்பை வந்திருச்சு’ என்ற பேய்க் கதையே படம் மீதான ஆர்வத்தை மிகவும் தீவிரமாகத் தூண்டிவிட்டது.

இந்த ‘சப்பை’ தெய்வம் குற்றம் செய்த அதிகாரிகளை வரிசையாக போட்டுத் தள்ளிவிடுவதால் ஏதோ ஒன்று இருக்கிறது என்பதுபோலவே நம்மை நம்ப வைப்பதில் இயக்குநர் வெற்றியடைந்திருக்கிறார்.

படத்தின் வசனகர்த்தாவான தேன்மொழி தாஸின் பல வசனங்கள், இப்போதைய நாட்டு நடப்பை அப்படியே கண் முன்னால் கொண்டு வந்து காட்டியிருக்கிறது.

காடுகள் பற்றியும், அவை அழிந்தால் நாட்டில் எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படும் என்பதையும் பல இடங்களில் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் தேன்மொழி தாஸ்.

அதிகாரிகள், அரசியல்வியாதிகள், பணக்காரர்களின் கூட்டணி எப்படியெல்லாம் பேசும்.. என்னவெல்லாம் விளையாடும் என்பதை வசனங்களின் மூலமாகவே எளிய மனிதர்களுக்கும் புரியும்வகையில் பதிவு செய்திருக்கிறார் வசனகர்த்தா. அவருக்கு நமது பாராட்டுக்கள்.

என்ன செய்தாலும்.. எப்படி போராடினாலும்.. ஊழல் அரசியல்வியாதிகளை எதிர்த்து நமது மக்களின் போராட்டம் எந்தப் பெரியத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இறுதியில் அதிகாரமே வெல்லும் என்பதையும் நயமாக இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

படத்தின் பட்ஜெட் குறைவென்றாலும் இயக்குதலில் நிறைவாகவே அனைத்தையும் செய்திருக்கிறார் இயக்குநர் ரமேஷ்ஜி.

இப்போதைய நமது சமூகத்திற்கு தேவையான ஒரு விஷயத்தைத்தான் இந்தப் படத்தில் கமர்ஷியல் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் ரமேஷ்ஜி. காடுகளும், காடுகள் சார்ந்த பகுதிகளும் பாதுகாக்கப்பட்டால்தான் மனித இனத்தின் வளர்ச்சி குறையில்லாமல் இருக்கும் என்பதை அழுத்தமாக இந்தப் படத்தில் சொல்லியிருப்பதால் இது போன்ற திரைப்படங்களை நாம் வரவேற்றாக வேண்டும்.

படக் குழுவினருக்கு நமது பாராட்டுக்களும், வாழ்த்துகளும் உரித்தாகட்டும்..!

Our Score