நடுவானில் விமானத்தில் வெளியிடப்பட்ட ‘சூரரைப் போற்று’ படத்தின் பாடல்

நடுவானில் விமானத்தில் வெளியிடப்பட்ட ‘சூரரைப் போற்று’ படத்தின் பாடல்

சூர்யாவின் 2-டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வழங்கும் 'சூரரைப் போற்று' படத்தின் ஒரு பாடலின் வெளியீட்டு விழா இன்று மதியம் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் நடைபெற்றது.

இப்படத்தின் பாடல்களில் ஒன்றான 'வெய்யோன் சில்லி' என்று தொடங்கும் பாடலை நடுவானில் பறந்து கொண்டிருந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில், அந்த நிறுவனத்தின் தலைவரான அஜய் சிங் மற்றும் படத்தின் நாயகனான நடிகர் சூர்யா இருவரும் இணைந்து வெளியிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசும்போது, “எனது 20 வருட சினிமா வாழ்க்கையில் இந்தப் படத்தை தான் முக்கியமான திரைப்படமாகக் கருதுகிறேன். இப்படம் சிறப்பாக வருவதற்காக இயக்குநர் சுதா 10 வருடங்கள் உழைத்திருக்கிறார். இது சாதாரண விஷயமல்ல.

மேலும், சுமார் 30 நிமிட காட்சிகள் விமானத்தில் படமாக்கப்பட்டுள்ளது. அதற்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனதிற்கு மட்டும் நன்றி கூற முடியாது. படப்பிடிப்பின்போது எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த ஒவ்வொரு குழுவினருக்கும் நன்றி கூற வேண்டும்.

கண்டுபிடிப்புகள் எப்படி முக்கியமோ அதைவிட பொதுமக்களுக்கு அது எந்தளவு உபயோகமாக இருக்கிறது என்பது மிகவும் முக்கியம். அந்த சிறப்பான செயலை கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் செய்துள்ளார்.

ஒரு காலத்தில் இந்திய மக்கள் தொகையில் 1% மக்கள்தான் விமானத்தை உபயோகபடுத்தினார்கள். அப்படிப்பட்ட காலகட்டத்திலேயே 1 ரூபாய் கட்டணத்தில் சாதாரண மனிதரையும் பறக்க வைத்து விமான துறையில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்து சாதனை புரிந்தவர் ஜி.ஆர்.கோபிநாத். அப்படிப்பட்டவரின் வாழ்க்கையைக் கூறும் இந்த படத்தில் நடிப்பதற்காக நான் பெருமிதமடைகிறேன்.

அதேபோல், நானும் முதன்முறையாக விமானத்தில் பயணிக்கும் குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களை விமானத்தில் அழைத்துச் செல்ல விரும்பினேன். அதை அஜய் சிங் நிறைவேற்றியிருக்கிறார்.

இந்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மற்றும் அஜய் சிங்கின் கடின முயற்சியால் 70 குழந்தைகளுக்கு விமானத்தில் பறக்கும் அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த அனுபவம் எனக்கு மட்டுமல்ல… எங்கள் குழுவில் உள்ள அனைவருக்குமே வித்தியாசமான அனுபவமாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் இருந்தது…” என்றார்.

இவ்விழாவின் மற்றொரு சிறப்பாக விமானத்தில் பயணிக்க தேர்ந்தெடுத்த குழந்தைகளில் சிலர் தங்களுக்குப் பதிலாக தங்களது பெற்றோர்களை அழைத்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களின் பெற்றோர்களை அழைத்துச் சென்றுள்ளனர் படக் குழுவினர்.

இந்நிகழ்ச்சியில், இப்படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடலாசிரியர் விவேக், நடிகர் மோகன் பாபு, சோனி மியூசிக் அசோக் ஆகியோர்களுடன் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியனும் கலந்து கொண்டார்.