பிரபல குணச்சித்திர நடிகரும், இயக்குநருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘தண்ணி வண்டி’.
இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு முக்கிய பெண் கதாபாத்திரம் சற்று வில்லங்கமான கேரக்டர் ஸ்கெட்ச்சுடன் உருவாக்கப்பட்டிருப்பதாக தமிழ்த் திரையுலகத்தில் பரவலாகப் பேச்சு அடிபடுகிறது.
இது குறித்து படத்தின் இயக்குநரான மாணிக்க வித்யா பேசும்போது, “இந்தத் தண்ணி வண்டி’ படத்தின் கதைக் களம் மதுரைதான். இதுவரையிலும் சொல்லப்படாத ஒரு கதைன்னு என்னால் தைரியமா சொல்ல முடியும்.
கதைப்படி பார்த்தால் மதுரைக்கு மாவட்ட வருவாய் துறை அலுவலராகப் பொறுப்புக்கு வருகிறார் பிரேமா சங்கரன். டெர்ரர் லேடி. எல்லாம் சட்டப்படிதான் இருக்கணும்ன்னு ரொம்பவும் கறாரா இருக்குறவங்க.
இத்தனை சதுர அடி இடத்துக்கு இவ்வளவுதான் வாடகை வாங்கணும் என்பதில் ஆரம்பித்து, சொத்து வரி கட்டாதவர்களின் சட்டையைப் பிடிக்கிற அளவுக்கு நேர்மையான அதிகாரி.
தனக்கு மேல் உள்ள கலெக்டரின் தவறுகளைச் சுட்டிக் காட்டி அவரையே தண்ணியில்லாத காட்டுக்கு மாத்துறவர்.
இப்படிப்பட்ட அதிகாரியான பிரேமா சங்கரனுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு வீக்னெஸ் உண்டு. அது செக்ஸ். பல ஆண்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்புவார். அதே சமயம், “ஒருத்தனோட வாழவும் மாட்டேன். கல்யாணமானவனை தொடவும் மாட்டேன்” என்கிற பாலிஸியையும் பின்பற்றுபவர்.
அவருடைய இந்தத் தனிப்பட்ட வாழ்க்கையின் சீக்ரெட், ஒரு வீடியோ மூலமாக படத்தின் ஹீரோவான உமாபதியின் கைக்கு கிடைக்கிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
இந்த பிரேமா சங்கரன் கதாபாத்திரத்தில் கன்னட நடிகையான வினுதா லால் நடித்திருக்கிறார்…” என்றார்.
இந்த வினிதா லால் ஏற்கெனவே தமிழில் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘தொட்டுப் பார்’, ‘லென்ஸ்’ ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கதையே இவ்வளவு வித்தியாசமா இருக்கே.. படம் எப்படியிருக்குமோ..?