full screen background image

கதிர், சூரி நடிக்கும் ‘சர்பத்’ திரைப்படம் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகிறது..!

கதிர், சூரி நடிக்கும் ‘சர்பத்’ திரைப்படம் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகிறது..!

நடிகர் கதிர் நாயகனாக நடித்திருக்கும் ‘சர்பத்’ என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் 11-ம் தேதியன்று நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த சர்பத் படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான லலித்குமார் வயாகாம் 18 ஸ்டுடியோஸ்(Viacom 18 Studios) நிறுவனத்தோடு இணைந்து தயாரித்துள்ளார்.

இப்படத்தின் நாயகனாக ‘பரியேறும் பெருமாள்’ புகழ் கதிர் நடித்திருக்கிறார். அவரோடு முதல்முறையாக சூரியும் இணைந்து நடித்திருக்கிறார். கதாநாயகியாக ரகசியா அறிமுகமாகியுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து, ஆகியோரும் நடித்துள்ளனர்.

நம் போக்கில் கதையை வளைக்காமல் கதை போகும் வழியில் திரைக்கதையை அமைத்து, பக்கா பேமிலி எண்ட்டெர்டெயின்மெண்ட் படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் பிரபாகரன்.

டெக்னிக்கல் டீமில் கேமராமேனாக இயக்குநரின் பெயரைக் கொண்ட பிரபாகரன் என்பவர் இணைந்து இருக்கிறார். ஜி.கே.பிரசன்னா படத் தொகுப்பு செய்திருக்கிறார். சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னரான அஜிஸ் இசையமைத்திருக்கிறார். ‘தரமணி’, ‘பேரன்பு’ உள்பட பல படங்களில் பணியாற்றிய குமார், இப்படத்தில் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

“படத்தில் நடக்கும் சூழலும் படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளும் ரசிகர்களை படத்தோடு ஒன்ற வைத்து கொண்டாட வைக்கும்” என்கிறார் இயக்குநர்.

இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு திண்டுக்கல் சுற்று வட்டாரங்களிலும், ஒரு சில முக்கிய காட்சிகள் சென்னையிலும் படமாக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தைத் தியேட்டருக்குக் கொண்டு வர சகல முயற்சிகளும் செய்யப்பட்டன. ஆனால் கூட்டம் வருமா.. வராதா.. என்கிற சந்தேகத்தில் பலரும் இருப்பதால், இந்தப் படத்தை நேரடியாக தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்பு செய்கிறார்கள்.

வரும் ஏப்ரல் 11-ம் தேதியன்று ‘கலர்ஸ்’ தொலைக்காட்சியில் மாலை 4 மணிக்கு இப்படம் வெளியாகிறது. தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் அன்றைக்கே இரவு 7 மணிக்கு மறு ஒளிபரப்பும் செய்யப்படுகிறது.

திரைத்துறையின் செயல்பாடுகள் மாற்றமடைந்து வருகிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாகிவிட்டது.

Our Score