சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘மஞ்ச சட்ட பச்ச சட்ட.’
இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடிக்கிறார். புதுமுகங்களான ஆதித்ய வர்மன் மற்றும் ரேணு சௌந்தர் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
தயாரிப்பு – சின்னசாமி சினி கிரியேஷன்ஸ், எழுத்து, இயக்கம் – தம்பா குட்டி பம்ப்ராஸ்கி, ஒளிப்பதிவு – MRM ஜெய்சுரேஷ், இசை – கணேஷ் ராகவேந்த்ரா, படத் தொகுப்பு – தியாகு, கலை இயக்கம் – ஷிவ யோகி, சண்டை இயக்கம் – ஆக்சன் பிரகாஷ், நடன இயக்கம் – தாஸ்தா.
இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநரான தம்பா குட்டி பம்ப்ராஸ்கி எழுதி, இயக்கியிருக்கிறார்.
இந்தப் படம் பற்றி இயக்குநர் தம்பா குட்டி பம்ப்ராஸ்கி பேசும்போது, “இந்தப் படம் பர்லஸ்க் காமெடி வகையான படமாகும். இந்தப் படத்தின் கதை ஒரு தோல் பாவைக் கூத்து வழியாக சொல்லப்படுகிறது.
பிழைக்கத் தெரியாத கதாநாயகன், பணம் சம்பாதிக்க தெரியாத போலீஸ் அதிகாரி, சுயமாக சிந்திக்கத் தெரியாத இரண்டு போலீஸ்காரர்கள், சுயநினைவே இல்லாத இரண்டு மன நோயாளிகள், பேராசை கொண்ட அரசியல்வாதியின் உதவியாளர் என அனைவருமே ஒரு ஜாக்பாட்டை நோக்கி ஓடுகிறார்கள். அந்த ஜாக்பாட் என்ன ஆனது என்பதுதான் இத்திரைப்படம்.
ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதிக்கும், சுய நலமான கார்ப்பரேட் நிறுவனத்தின் புரோக்கருக்கும் இடையே விரோதம் ஏற்படுகிறது, அதன் விளைவாக அரசியல்வாதியின் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது.
அதே நாளில் தங்களை கண்டு கொள்ளாத இந்தச் சமூகத்திற்கு ஒரு ஏடிஎம் கொள்ளையை நடத்தி தங்களை யாரென்று காட்ட இரண்டு இளைஞர்கள் திட்டமிடுகிறார்கள்.
இந்த இரண்டு முயற்சிகளுமே தோல்வியைத் தழுவுகிறது. ஆனாலும், இந்த இரு நிகழ்வுகளுக்கும் ஒன்றோடு ஒன்று தொடர்பு ஏற்பட… இதில் சிக்கிக் கொள்கிறார்கள் கதாநாயகனும் அவன் நண்பனும். இதில் இருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை..” என்றார்.
இப்படம் வரும் ஏப்ரல்-2-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.









