அழகு, திறமை இருந்தாலும் சினிமாவில் ஒரு பிரேக் கிடைக்க வேண்டும் என்பார்கள். அப்படி ஒரு பிரேக் வேண்டும் என்று ஒரு திருப்பு முனையான படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார் நடிகை சானியாதாரா.
சுந்தரத் தெலுங்கு தேசத்திலிருந்து தமிழ்த் தேசம் வந்திருப்பவர். பிறந்தது ஹைதராபாத் என்றாலும் தமிழ் நன்றாகப் பேசுகிறார். இவருக்கு நல்ல திருப்பு முனை அமையாத காரணம், இவர் தமிழ் பேசக் கற்றுக் கொண்டதுகூட காரணமாக இருக்குமோ?
இவரிடம் நடிப்பாற்றல், நடனத் திறமை, அழகான தோற்றம், அணுக எளிமை அனைத்தும் இருக்கின்றன. குறையொன்றுமில்லைதான். கையில் சில படங்கள் இருக்கின்றன. ஆனாலும் நல்லதொரு திருப்பு முனைக்குக் காத்திருக்கிறார்.
2015-ல் வெளியான ‘ஜிகினா’ படத்தின் நாயகி, ‘வாராயோ வெண்ணிலாவே’ படத்தில் குட்டி கவிதையாக சின்ன பாத்திரத்திலும் கவர்ந்தவர். சுசீந்திரன் இயக்கிய ‘ஜீவா’வில் இன்னொரு நாயகியாக நடித்திருக்கிறார்.
இயற்பெயர் சானியா ஷேக், பிடித்த நடிகை நயன்தாரா என்பதாலோ என்னவோ எண் கணிதப்படி பெயரும் ‘சானியாதாரா’ என்று அமைந்து விட்டது. சிறுவயதிலேயே சினிமா ஆர்வம். நடனம் கற்றார். சில விளம்பரப் படங்களில் நடித்தவருக்கு சினிமா வாய்ப்பு வரவே சினிமாப் பக்கம் வந்து விட்டார்.
”நடிகர்களில் சூர்யா.. நடிகைகளில் ஜோதிகா பிடிக்கும். இந்தியில் ஹிருத்திக், ஐஸ்வர்யாராய் பிடிக்கும். இயக்குநர்களில் ராஜமௌலி, மணிரத்னம், ஷங்கரை பிடிக்கும்.
பேய்ப் படங்கள், திகிலூட்டும் திரில்லர் படங்கள் எனக்கு பிடிக்கும். ‘சந்திரமுகி’ ஜோதிகா என்னை கலங்க வைத்தவர். என் பேவரைட் டிவி பார்ப்பது நடனம் ஆடுவது மட்டும் அல்ல எனக்குச் சமைக்கவும் நன்கு பிடிக்கும்…” என்கிற இவர் ஒரு சிக்கன் பிரியையாம்.
இத்தனை அழகும், திறமையும் இருந்தாலும் தனக்கு சரியான படம் இன்னமும் கிடைக்கவில்லை என்று வருந்துகிறார் சானியாதாரா.
“எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வர வேண்டும். அது வந்துவிட்டால் அதனை யார் தடுத்தாலும் நிற்காது. வருகிற ஏனோதானோ படங்களில் நடிக்கலாம், வருஷம் முழுக்க படப்பிடிப்பு போகலாம். அதில் எனக்கு விருப்பமில்லை. அவசரமில்லை; சரியான படத்திற்காக காத்திருக்கிறேன். இந்த’ சானியா ‘வின் திறமைக்குத் ‘தீனியா’ வரும் வாய்ப்புக்காக நல்ல பிரேக்கிற்காக காத்திருக்கிறேன்” என்கிறார் நம்பிக்கையுடன்.