டாட்டூ கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் அபய் கிருஷ்ணா தயாரித்து, ஹீரோவாக நடிக்கும் படம் ‘அடிடா மேளம்.’
இப்படத்திற்கு முதலில் ‘மேள தாளம்’ என்றுதான் பெயர் வைக்கப்பட்டிருந்தது. படத்தின் கதையைக் கேட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, படத்திற்கு ‘அடிடா மேளம்’ என்பதுதான் சரியான தலைப்பு என்றாராம். இதை பார்ப்பவர்களிடம்பெருமையாக கூறி வருகிறார் தயாரிப்பாளரும், ஹரோவுமான அபய் கிருஷ்ணா.
இந்தப் படத்தில் ‘நாடோடிகள்’ அபிநயா கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், ஊர்வசி, மயில்சாமி, மிப்பு, ‘அவன் இவன்’ ராமராஜன், கானா பாலா உட்பட பலர் நடிக்கிறார்கள்.
படத் தொகுப்பு – சசிகுமார், இசை – அபிஷேக், சண்டை பயிற்சி – சூப்பர் சுப்பராயன், கலை – ஆறுசாமி, மக்கள் தொடர்பு – சி.என்.குமார், ஒளிப்பதிவு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அன்பு.
இந்தப் படம் பற்றி ஹீரோ அபய் கிருஷ்ணா பேசும்போது, ”திருமண தரகராக வரும் ஹீரோவிடம் நாயகி அபிநயா தனக்கு நடக்கவுள்ள திருமணத்தை ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி நிறுத்திவிடுமாறு சொல்லி அதற்கு பணமும் கொடுக்கிறார்.
இதே நேரம் அபிநயாவை மணக்கத் துடிக்கும் மாப்பிள்ளை மிப்புவோ, எப்படியாவது இந்த திருமணத்தை நடத்தி கொடுக்குமாறு அபிநயா கொடுத்த தொகையைவிட அதிகமான தொகையை ஹீரோ அபய் கிருஷ்ணாவிடம் கொடுக்கிறார்.
இதனால் அவர்கள் இருவருக்குமான ஜாதகப் பொருத்தம் சூப்பர் என்று சொல்லி திருமணத்தை நடத்தச் சொல்கிறார் அபய் கிருஷ்ணா. அதன் பிறகு ஒரு உண்மை தெரிய வர.. அந்த திருமணத்தை தடுத்து நிறுத்த முயற்சிகள் செய்கிறார் ஹீரோ, கடைசியில் என்ன ஆகிறது என்பதுதான் கிளைமாக்ஸ்…” என்றார்.
முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது.